ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

தாத்தாவின் அக்கறை!
பிரீமியம் ஸ்டோரி
News
தாத்தாவின் அக்கறை!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

உடல் நலனில் அலட்சியமா?

என் உறவினர் பெண், பணிக்குச் செல்பவர். சமீபமாக, அடிக்கடி தலை சுற்றுவதாகச் சொன்னார். மருத்துவரிடம் போகச் சொல்லி அறிவுறுத்தினோம். ‘அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு? கூடவே, ஹாஸ்பிட்டலுக்கு போனா எல்லா டெஸ்ட்டையும் எடுக்கச் சொல்வாங்க’ என்று தட்டிக்கழித்து வந்தார். ஒரு நாள் அலுவலகம் செல்ல பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார். உடன் பணியாற்றும் பெண் அருகில் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, வீட்டுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகச் சொன்ன டாக்டர், `மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லையா' என்று கேட்க, ‘டாக்டர்கிட்ட காட்டவே இல்ல’ என்று தோழி சொன்ன பதிலில் மருத்துவர் கோபப்பட்டிருக்கிறார். ‘இப்படித்தான் சுகர், பிரஷர் இருக்கிறதே தெரியாம, மயக்கம் மாதிரி எமர்ஜன்ஸி நிலையிலதான் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்றாங்க பலர். இவ்வளவு ரத்த அழுத்தம் இருந்து, மாத்திரையும் சாப்பிடாம இருந்தா மூளை நரம்பு வெடிக்க லாம், பக்கவாதம் வரலாம் தெரியுமா... டாக்டர் எவ்வளவு கத்தினாலும் மக்கள் கேக்குறதே இல்ல’ என்றெல்லாம் தோழியை எச்சரித்திருக்கிறார். பின்னர், 40 வயதுக்கு மேல் ஆனாலே மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்து உடலில் உள்ள நோய்க்கூறுகளை அறிந்துகொள்ள அறி வுறுத்தி அனுப்பியிருக்கிறார். மருத்துவர் வார்த்தைகள் நமக்கும்தான்!

-ஆர்.சுப்புலட்சுமி, சென்னை-91

அனுபவங்கள் ஆயிரம்!

விளையாட்டல்ல செல்ஃபி!

ராமேஸ்வரத்திற்குச் சென்றிருந்தோம். பாம்பன் பாலத்தின் இடையில் நாங்கள் சென்ற வேனை நிறுத்தி வேடிக்கை பார்த்தபோது, எங்கள் வேனில் இருந்த ஒருவர் நடு ரோட்டில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். பின்னால் வந்த டூரிஸ்ட் பஸ் ஒலி கொடுத்தும் செல்ஃபியாளர் காதில் வாங்கவே இல்லை. அந்த டிரைவர், அருகில் வந்ததும் எரிச்சலுடன் திட்டிக்கொண்டே பிரேக் பிடிக்க, அந்த பதற்றத்தில் அந்த நபர் கையிலிருந்த மொபைல் கீழே விழ, அதன் மீது எதிர்ப்புறம் இருந்து வந்த ஒரு வண்டி ஏறி இறங்கிவிட்டது. விலையுயர்ந்த செல் போன் வீணாய் போனதுடன், அந்த நபருக்கும் ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் என்ன செய்வது? செஃல்பி மோகம் உயிர்களை பறித்த பல காணொலிகளை கண்ட பின்பும் திருந்தாதவர்களை என்ன சொல்லித் திருத்துவது?

- எம்.ஏ.அமுதா, திருச்சி-15

அனுபவங்கள் ஆயிரம்!

தாத்தாவின் அக்கறை!

வியாபாரியிடம் இளநீர் குடித்த தாத்தா, குடித்த இளநீர் மட்டையை நான்காக வகுந்து போடச் சொன்னார். வியாபாரி அலுப்புடன் பார்க்க, `அட கோபப்படாத தம்பி. இது மழைக்காலம். ரெண்டா வெட்டிப் போடும்போது மழைத்தண்ணீர் அதுல தேங்கி, கொசு வரலாம். பக்கத்துல வசிக்கிற வீடுகளுக்கு எல்லாம் டெங்கு, மலேரியானு நோய் பரப்பலாம். அதனாலதான் சொன்னேன். சிரமம் பார்க்காம பண்ணிடேன்’ என்று சொல்ல, வியா பாரியும் ஒப்புதலுடன் தலையாட்டினார். தாத்தாவின் சமூக அக்கறையை நாமும் பின்பற்றலாம்!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

அனுபவங்கள் ஆயிரம்!

சேமிக்கும் பழக்கம்!

பெங்களூரில் என் மகன் வீட்டுக்குச் செல்லும்போது, என் பத்து வயது பேத்தி வெளியில் போகும்போதெல்லாம் ஏதாவது பொருள் வாங்கித் தரச்சொல்லிக் கேட்பாள். ஆனால், சென்ற முறை சென்றிருந்தபோது அவளிடம் ஒரு மாற்றம். பொருளுக்கு பதிலாக, பணமாக வாங்கி தன் உண்டியலில் போட்டுக்கொண்டாள். பள்ளியில் அவள் வாங்கிய முதல் மதிப்பெண்கள், வீட்டில் அவள் செய்யும் நல்ல விஷயங்களை யெல்லாம் பாராட்டி, அவள் பெற்றோர் ஒவ்வொரு முறை பணம் கொடுப்பதையும், அவள் அதை உண்டியலில் சேர்ப்பதையும் பார்த்தேன். மேலும், அவள் ஏதாவது தவறு செய்யும்போது, அபராதமாக அவள் பெற்றோர் உண்டியலில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றதையும் பார்த்தேன். மருமகள் விளக்கினாள் விஷயத்தை... ‘வீடு முழுக்க விளையாட்டு சாமான்கள் இருந்தாலும், மறுபடி மறுபடி வாங்கிட்டே இருந்தா. அதான்... அந்தப் பழக்கத்தை மாத்தவும், சேமிப்பை கத்துக்கொடுக்கவும் இப்படி ஒரு பழக்கத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கோம். அவள் சேர்க்கும் பணத்துடன் கூடுதல் பணம் சேர்த்து, வங்கியில வைப்புத் தொகையில் போட்டு, ரசீதை ஜெராக்ஸ் எடுத்து ஃபைலில் போட்டு அவள் கையிலே கொடுத்துடுவோம். அதனால அவளுக்கு சேமிப்பில் ஆர்வம் ஏற்பட்டு, அனாவசியமான பொருள்களை வாங்குவதை நிறுத்திட்டா’ என்றார். அப்பா, அம்மா, மகள் மூவரையும் பாராட்டினோம்.

- தி.வள்ளி, திருநெல்வேலி-11

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com