தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

முறுக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
முறுக்கு

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

எத்தனை முறை ஏமாந்தாலும்!

என் தோழியின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். மாத மாதம் பணம் அனுப்பும்போதே, குடும்ப செலவுக்குத் தனியாகவும், சேமிக்கத் தனியாகவும் என்று பணத்தை அனுப்பி வந்தார். என் தோழி அவர் அனுப்பிய பணத்தை வங்கியில் சேமிக்காமல், ஒரு பெண்ணிடம் சீட்டு சேர்ந்தார். 30 மாத சீட்டு அது. சீட்டு முடிகின்ற நேரத்தில், சீட்டு நடத்திய பெண் தலைமறைவாகிவிட்டார். என் தோழியின் லட்சக்கணக்கான பணமும் போய்விட்டது. குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வேலைசெய்து கணவர் அனுப்பிய பணத்தை, அதிக தொகைக்கு ஆசைப்பட்டு தொலைத்துவிட்டு, இப்போது காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண் டிருக்கிறார் தோழி. அந்தச் சீட்டுக்கார பெண்ணிடம் ஏமாந்த பலரும் தோழி போலவே அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனை முறை சொன்னாலும் சீட்டு, ஃபைனான்ஸ் கம்பெனிகளில் நம் மக்கள் ஏமாறுவதை நிறுத்துவதே இல்லை. எப்போதும் பாதுகாப்பான சேமிப்பு, முதலீட்டையே தேர்ந்தெடுப்போம்!

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

அனுபவங்கள் ஆயிரம்!

பலகாரம் மீந்து விட்டதா?

தீபாவளிக்குச் செய்த பலகாரம் தூளாகி மீந்து போனால், அதை வீணாக்காமல் புது அயிட்டமாக செய்ய சில டிப்ஸ்:

* மைசூர்பாகு தூளாகி இருந்தால் அதோடு வேக வைத்த கேரட், ஏலக்காய்ப் பொடி, கொஞ்சம் பால், தேவைப்பட்டால் கொஞ்சமாகச் சக்கரை சேர்த்து கேரட் கீர் தயாரிக்கலாம்.

* எல்லா வகை ஸ்வீட் தூள்களையும் கலந்து, அதோடு கொஞ்சம் மசித்த சாதம், வெல்லப் பாகு சேர்த்துக் கிளறினால் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

* முறுக்கு வகைகளின் தூளோடு பொரி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கொஞ்சம் தக்காளி சாஸ் சேர்த்துக் கலந்து பேல்பூரி தயாரிக்கலாம்.

* முறுக்கு சற்று நமத்துப் போய்விட்டால், தயிரில் சேர்த்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் வெள்ளரி சேர்த்து, கடுகு, மிளகாய் தாளித்து சேர்த்தால் புதுசுவையில் தயிர்ப்பச்சடி ரெடி.

- ந.விசாலாட்சி, சென்னை-92

அனுபவங்கள் ஆயிரம்!

இது நல்ல ஐடியா!

உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது, அவரைக் காண நானும் கணவரும் சென்றிருந்தோம். அவர் மகன் ஒரு நோட்டில், காலை முதல் தன் அப்பாவுக்குக் கொடுக்கப்பட்ட உணவு, மருந்து விவரங்கள், இரண்டு முறை மூச்சுத்திணறல், ஒருமுறை டெம்ப்பரேச்சர் 100-ஐ தாண்டியது என எல்லா விவரங்களையும் நோட்டில் குறித்து வைத்திருந் ததைப் பார்த்தோம். ‘டாக்டர் ரவுண்ட்ஸ் வரும் போது, சில நேரங்கள்ல சில விஷயங்களை சொல்லாம விட்டுப் போயிடுது. இந்த விவரங்களை எல்லாம் நோட்ல குறிச்சுக்கிட்டா டாக்டர் கேக்குற எல்லா கேள்விகளுக்கும் குழப்பம் இல்லாம பதில் சொல்லிடலாம். மேலும், நமக்கு இதுல இருக்குற சந்தேகங்களையும் மறக்காம டாக்டர்கிட்ட கேட்டுட லாம்’ என்றார். நல்ல யோசனை!

- கிரிஜா ஸ்ரீனிவாசன், ஈரோடு

கடையில் பொருள்கள் வாங்கிய பின் நேராக வீட்டுக்கு!

அன்று சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு கட்டைப் பைகள் நிறைய பொருள்கள் வாங்கி, டூவீலரில் வைத்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் உள்ள மருத்துவ மனையில் தோழியின் அப்பா அட்மிட் ஆகியிருந்தது நினைவுக்கு வந்தது. ஹாஸ்பிட்டல் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, அவரைச் சென்று பார்த்து நலம் விசாரித்து, வீடு திரும்பினேன். வாங்கிய பொருள்களை எடுத்து வைத்த போது, 600 மதிப்புள்ள இரண்டு லிட்டர் நல்லெண்ணெய் பாக்கெட்டுகள் காணாமல் போயிருந்தன. ஹாஸ்பிட்டலில் யாரும் பொருள்களை எடுக்கமாட்டார்கள் என்று எண்ணி டூவீலரிலேயே பைகளை வைத்துச் சென்ற என்னை நானே திட்டிக்கொண்டேன். வாங்கிய பொருள்களை வீட்டில் சேர்த்து விட்டே பிற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பாடம் கற்றுக்கொண்டேன்.

- தீபா, பாளையங்கோட்டை

அனுபவங்கள் ஆயிரம்!

கடந்த காலம் மறவேல்!

தோழியின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் இருந்தது. அவர் மகன் நன்றாகப் படித்து, வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்று, பொறுப்பாக சம்பாதித்து, ஒரு வீட்டைக் கட்டினான். அந்த புது வீட்டுக்கு நான் சமீபத்தில் சென்றிருந்தபோது, வீட்டின் முன்புறம், அவர்கள் முன்பு வசித்த ‘கொட்டகை வீட்டின்’ புகைப்படத்தை மாட்டி யிருந்தனர். ஆச்சர்யமாகி நான் கேட்க, `இதைப் பார்க்குற மிடில் கிளாஸ் குடும்ப பிள்ளைகளுக்கு, நல்லா படிச்சா, உழைச்சா நாளைக்கு நாமளும் நல்லா வந்துடலாம்னு

ஒரு பாசிட்டிவிட்டி கிடைக்கும். நமக்கும், பழைய வாழ்க்கை மறக்காம, புது கர்வம் வராம இருக்கும்ல..’ என்று தாயும் மகனும் புன்னகை மாறாமல் சொல்ல, பாராட்டிவிட்டு வந்தேன்.

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

***

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com