பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

என் பணம் என் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
என் பணம் என் அனுபவம்

ஓவியங்கள்: பிள்ளை

கெட்ட பெயரை ஏற்படுத்திய ஆலோசனை!

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

நான் மியூச்சுவல் ஃபண்டில், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். ஓராண்டுக்கு முன்னர் என் வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் இரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘எங்களுக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய உதவுங்கள்’ என அவர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களை என்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரிடம் அழைத்துப் போனேன். அவர்களின் தேவை, இலக்குகளுக்கு ஏற்ற ஃபண்டுகளைத் தேர்வுசெய்து தந்தார் அவர். ஓராண்டு கடந்த நிலையில் சந்தைச் சரிவில் அவர்களின் முதலீடும் இறக்கத்தில் இருந்திருக்கிறது. நானும் என் ஆலோசகரும் சேர்ந்து அவர்களின் பணத்தை அபகரித்துக்கொண்டதாக இருவரும் சிலரிடம் சொல்லிப் புலம்பியது என் காதுக்கு வந்தது. இப்போதெல்லாம் முதலீட்டின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு நான் எந்த வழிகாட்டலையும் செய்வதில்லை.

- தாமஸ், காரைக்குடி

பி.எஃப்
பி.எஃப்

பி.எஃப் தொகையை எடுத்தது தவறு!

எனக்கு வயது 51. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆண்டு என் நண்பர் ஒருவர் சொந்த ஊரிலுள்ள நிலத்தை விற்றுவிட்டு, புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கினார். என்னையும் வாங்கச் சொன்னார். என்னிடம் பணம் இல்லை. `பி.எஃப் தொகையை எடுத்து வாங்கலாமே...’ என ஆலோசனையும் சொன்னார். உடனே 7 லட்ச ரூபாயை எடுத்து மனை வாங்கிவிட்டேன். அண்மையில் எனக்குத் திடீரென பக்கவாதம் ஏற்பட்டது; வேலைக்குப் போக இயலாத சூழல். இந்த நிலையில் என் மகளுக்கும் வரன் அமைந்தது. குடும்பச் செலவுக்கும், திருமணச் செலவுக்கும் பணமில்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். வாங்கிய மனையை உடனடியாக விற்கவும் முடியவில்லை. நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிக்க, எப்போதும் பணத்தை உடனடியாக எடுக்கக்கூடிய முதலீடுகளில் வைத்திருப்பதே நல்லது என இப்போது உணர்கிறேன். பி.எஃப் தொகையை எடுத்து மனை வாங்கியதைத் தவறாகவே கருதுகிறேன்.

- குணசீலன், கோவை

ஆட்டோமொபைல் நிறுவனம்
ஆட்டோமொபைல் நிறுவனம்

முன்யோசனை இல்லாவிட்டால் சிக்கல்தான்!

நான் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரிவில் பணியாற்றுகிறேன். என் உறவினர் ஒருவர், ‘செகண்ட் ஹேண்ட் கார், பைக்குகளை வாங்கி விற்கும் ஷோரூம் ஆரம்பித்தால் பெரிய வருமானம் பார்க்கலாம்; கம்பெனி நிர்வாகத்தை நான் கவனித்துக்கொள்கிறேன்’ என்றார். எனக்கும் அது சரியெனப்படவே குழந்தைகளின் படிப்புக்காக முதலீடு செய்துவந்த தொகை, பி.எஃப் தொகை என ஒட்டுமொத்தமாகப் போட்டு, பற்றாக்குறைக்கு, 10 லட்ச ரூபாய் பர்சனல் லோன் வாங்கினேன். இரண்டு முக்கியமான இடங்களில், பிரமாண்டமாக ஷோரூம்கள் தொடங்கினேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. புது வண்டிகளே விற்பனை ஆகாமல் தொழில் தள்ளாடும் சூழலில், ஷோரூமை ஆரம்பித்துவிட்டு, ஆட்கள் சம்பளம், லோன் இ.எம்.ஐ எனத் திண்டாடி நிற்கிறேன். இந்த நிலையில் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்ன என் உறவினர் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என ஒதுங்கிக்கொண்டார். தொழில் தொடங்குவது தவறில்லை; முன்யோசனை இல்லாமல் அகலக்கால் வைப்பதுதான் தவறு.

- ஆறுமுகம், மதுரை

தனியார் வங்கி
தனியார் வங்கி

விண்ணப்பத்தைத் தெளிவாகப் படியுங்கள்!

அண்மையில், தனியார் வங்கியொன்றிலிருந்து வங்கிக் கணக்குத் தொடங்குவது குறித்துப் பேசினார்கள். நான் சரியென்று சொன்னதும், அடுத்த நாளே வங்கித் தரப்பிலிருந்து வீட்டுக்கே ஆளை அனுப்பிவைத்தார்கள். வந்தவர் ஆதார் கார்டு, பான் கார்டு நகல்களைக் கேட்டு வாங்கிக்கொண்டார். விண்ணப்பப் படிவத்தில் ஏராளமான கையொப்பங்களை வாங்கினார். சில நாள்களில் வங்கிக் கணக்கு ஓப்பன் செய்து தரப்பட்டது. நான் வங்கியிலிருந்து அனுப்பப்படும் மெயில்களைப் பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஓராண்டு முடிந்த பிறகு என் வங்கிக் கணக்கிலிருந்து 800 ரூபாய்க்கு மேல் டீமேட் கணக்கு நிர்வாகக் கட்டணமாகப் பிடித்திருந்தார்கள். நான் டீமேட் ஓப்பன் செய்யவில்லையே என வங்கியில் சொன்னதும், நான் டீமேட் ஓப்பன் செய்ய ஒப்புதல் வழங்கிக் கையொப்பமிட்ட விண்ணப்பத்தைக் காட்டினார்கள். பல வங்கிகளில் கணக்குத் தொடங்கும்போதே இன்ஷூரன்ஸ், டீமேட் எனப் பல படிவங்களை இணைத்துக் கொடுப்பார்கள். விண்ணப்பத்தைப் படித்து, தேவையானவற்றில் மட்டும் கையொப்பம் இடுவதே நல்லது.

- காமராஜ், சென்னை

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.