Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

என் பணம் என் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
என் பணம் என் அனுபவம்

ஓவியங்கள்: பிள்ளை

என் பணம் என் அனுபவம்!

ஓவியங்கள்: பிள்ளை

Published:Updated:
என் பணம் என் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
என் பணம் என் அனுபவம்

அறிமுகம் இல்லாதவர்களுக்குக் கடன்... ஜாக்கிரதை!

என் பணம் என் அனுபவம்!

நான் மளிகைக் கடை நடத்திவருகிறேன். வட இந்திய இளைஞர்கள் மூன்று பேர் என் கடையில் மளிகைப் பொருள்கள் வாங்கினார்கள். ஒருகட்டத்தில் பொருள்களைக் கடனாக வாங்கிக்கொண்டு மாதம் ஒரு முறை மொத்தமாகப் பணம் கொடுத்தார்கள். அவர்கள் கணக்கில் மாதம் 5,000 ரூபாய் வரை வரக்கூடும். திடீரென ஒரு மாதம், `சம்பளம் வரவில்லை’ என்று சொல்லி அடுத்த மாதம் பணத்தைச் சேர்த்துத் தருவதாகச் சொன்னார்கள். நானும் நம்பிக் கடன் கொடுத்தேன். தொடர்ந்து நான்கைந்து நாள்களாக அவர்கள் யாரும் என் கண்ணில் படவில்லை. எனவே அவர்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தேன். ஒரு வாரத்துக்கு முன்னரே அவர்கள் அவசர அவசரமாக வீட்டைக் காலிசெய்துவிட்டு பீகாருக்குப் போய்விட்டதாகச் சொன்னார். அவர்கள் எனக்கு மொத்தம் 7,400 ரூபாய் தர வேண்டும். `இனி அறிமுகம் இல்லாதவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை’ என முடிவு செய்துவிட்டேன்.

- தர்மராஜ், திருப்பூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என் பணம் என் அனுபவம்!

பாகப்பிரிவினை... ஏமாற்றிய உறவுகள்!

என் அப்பாவுக்கு பூர்வீகச் சொத்தாக வீடு, நிலம் என மதுரைக்கருகில் ஒரு கிராமத்தில் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே சென்னையில்தான். மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்குச் சென்று வருவதுண்டு. கடந்த பத்து ஆண்டுகளாக நான் கிராமத்துப் பக்கம் போகவே இல்லை. எந்தச் சொத்து, எந்த இடத்தில், எவ்வளவு இருக்கிறது என்ற விவரங்களை நான் தெரிந்துவைத்திருக்கவில்லை. என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தாலும் பட்டா, பத்திரம் எதுவும் முறைப்படி பிரிக்கப்படவில்லை. இந்த நிலையில் அப்பா திடீரென இறந்துவிட்டார். கிராமத்திலுள்ள உறவினர்கள் சொத்துகளைப் பிரித்து எழுதும்போது அவர்கள் விருப்பப்படி செய்தார்கள். எனக்கு சொத்து விவரங்கள் தெரியாததால் எதுவும் கேட்க முடியவில்லை. `உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள்’ என்று சிலர் பரிதாபப்பட்டுச் சொன்ன போதுதான் ஓரளவு நிஜத்தை உணர முடிந்தது. பெற்றோரின் சொத்து விவரங்களை முழுமையாக அறிந்துவைத்திருப்பதே நல்லது.

- சுரேஷ், சென்னை-45

என் பணம் என் அனுபவம்!

ஹெல்மெட்... அலட்சியத்தால் நேர்ந்த அபராதம்!

அண்மையில் ஒரு நேர்முகத் தேர்வுக்காகச் சென்னைக்குச் சென்றிருந்தேன். நண்பனின் அறையில் தங்கியிருந்துவிட்டு, மறுநாள் காலையில் நேர்முகத் தேர்வுக்குக் கிளம்பினேன். நண்பன், அவனுடைய பைக்கில் என்னைக் கொண்டுபோய் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதாகக் கூறினான். ஹெல்மெட் போடாமல் வண்டியை எடுத்தான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தினான். அடுத்த மூன்றாவது சிக்னலில் போலீஸில் மாட்டிக்கொண்டோம். வேறு வழியில்லாமல் அபராதம் செலுத்திவிட்டுத்தான் கிளம்பினோம். `ஆட்டோவில் போயிருந்தால் கூடப் பரவாயில்லையே...’ என்று தோன்றியது. நண்பனின் அலட்சியத்தால் எனக்குத் தேவையில்லாத நஷ்டம்.

- கண்ணன், திருச்சி-3

என் பணம் என் அனுபவம்!

ஏ.டி.எம் மெஷின்... உஷார்!

அண்மையில் சிலர் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தபோது, எடுக்க நினைத்துப் பதிவுசெய்த தொகையைவிடக் கூடுதல் தொகை வந்ததாகச் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், எனக்கு நேர்ந்த அனுபவம் அதற்கு நேர்மாறானது. தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம்மில் ரூ.6,000 எடுப்பதற்காகப் பதிந்தேன். ஆனால், ரூ.1500 மட்டுமே வந்தது. எனக்குப் பிறகு பணம் எடுத்த இருவருக்கும் குறைவாகவே பணம் வந்தது. வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் என்பதால் உடனே மேலாளரிடம் புகார் செய்தோம். `அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே...’ என்று சொன்னார். அவரையும் பணம் எடுக்கச் சொன்னோம். அவருக்கும் பதிந்த தொகையைவிடக் குறைவாகவே வந்தது. பிறகு மெஷினை ஆராய்ந்து பார்த்துவிட்டு 2,000 ரூபாய்த் தாளைத் தள்ளும் நிலையில், 500 ரூபாய்த் தாள் தவறுதலாகத் தள்ளப்படுவதாகச் சொன்னார்கள். எழுத்துபூர்வமாக எங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட தொகையைக் குறிப்பிட்டு கையொப்பமிட்டுத் தந்தார் மேலாளர். அடுத்த சில நாள்கள் அலைந்து திரிந்துதான் என் பணம் வங்கிக் கணக்குக்கு வந்துசேர்ந்தது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்கள் அதே இடத்தில் எண்ணி சரிபார்த்துக்கொள்வது நல்லது.

- கேசவன், சென்னை-6

என் பணம் என் அனுபவம்!

துணி துவைக்கும் முன் பாக்கெட்டை பாருங்கள்!

ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது. வழக்கமாக நான் ஞாயிற்றுக்கிழமை துணி துவைப்பது வழக்கம். என் கணவரின் பேன்ட், சட்டை பாக்கெட்டுகளில் முக்கியமான பேப்பர், பணம் ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்துவிட்டுத்தான் அவற்றைத் தண்ணீரில் நனைப்பேன். அன்று துணிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டுப் பெண் எதற்காகவோ அழைக்க, நான் அவரிடம் பேசி அனுப்பிவிட்டு துணிகளை எடுத்துச் சென்றேன். ஏற்கெனவே முழுமையாகப் பார்த்துவிட்ட ஞாபகத்தில் அப்படியே தண்ணீரில் ஊறவைத்துவிட்டேன். பிறகு துவைக்கும்போதுதான் என் கணவர் உள் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸை எடுக்காமல் விட்டுவிட்டது தெரிந்தது. பணமாக 500 ரூபாய்த்தாள் கிழிந்திருந்தது. டெபிட், கிரெடிட் கார்டுகள் பாழாகிவிட்டன. பிறகு புதிய கார்டுகள் வாங்க என் கணவர் மெனக்கெட்டு அலைய வேண்டியிருந்தது. துணி துவைக்கும்போது ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாக செக் பண்ணிக்கொண்டால் வீணாக அல்லாட வேண்டியிருக்காது.

- சுதா, தஞ்சாவூர்-2

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.