Published:Updated:

அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா? - தளங்கள் மாறும் வாசிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா?
அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா?

ஜூ.வி 2020

பிரீமியம் ஸ்டோரி

லகப் புகழ்பெற்ற தொழிலதி பரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டிடம், ‘உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?’ என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு எளிமையாக, ‘தினமும் 500 பக்கங்கள் வாசியுங்கள். அந்த முதலீட்டில்தான் அறிவு வட்டிபோல தினம் தினம் பெருகிக்கொண்டே இருக்கும். எல்லோராலும் இதைச் செய்ய முடியும். ஆனால், பெரும்பாலானவர்கள் இதை நிச்சயம் செய்யமாட்டார்கள்!’ என்றார். மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவோ, ஒரு துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ளவோ, காலம் காலமாக வாசிப்பு ஒரு முக்கியக் கருவியாக இருந்துவருகிறது. ஆனால், தினம் தினம் புதுப் புதுப் பாய்ச்சல் காணும் டெக்னாலஜி யுகத்தில், இந்த வாசிப்பு எப்படி யெல்லாம் மாறியிருக்கிறது? பார்ப்போம்.

கிண்டில் புரட்சி!

இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் வரவால் நிகழ்ந்த மாற்றங்கள் வாசிப்பில் மட்டுமல்ல... அது சார்ந்த அனைத்துத் துறைகளிலுமே நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. குறிப்பாகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டால், இதற்கு முந்தைய தசாப்தத்திலேயே மின் நூல்கள் வெளியாகத் தொடங்கி விட்டன. அப்போதே இதற்கான பிரத்யேக சாதனங்களும் வரத் தொடங்கின. அவற்றுள் முக்கியானது, அமேசானின் கிண்டில் இ-ரீடர்.

அனைத்துப் பயன்பாடுகளுக்குமான ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களால் ஒரு நிஜப் புத்தகத்தை வாசிக்கும் உணர்வை ஒருபோதும் தர முடியாது. எனவே, அதற்கு ஈடான அனுபவத்தைத் தரும் ஒரு சாதனமாக இது இருக்கவேண்டும் என அமேசான் நிறுவனம் கிண்டிலை வடிவமைத்தது. 2007-ல் அறிமுகமானது தொடங்கி இந்த வரிசையில் வந்த கிண்டில் சாதனங்கள் ஒவ்வொரு வருடமும் மேம்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இந்தச் சாதனங்களில் புத்தகங்கள் படிக்க கிண்டில் ஆன்லைன் மின்னூல் ஸ்டோரும் இருக்கிறது. இதில் உங்களால் பணம் கொடுத்து புத்தகங்களைப் பதிவிறக்க முடியும்.

இந்த மின்னூல்களின் வெற்றி எதுவென்றால், எங்கும் எடுத்துச் செல்லும் அந்த போர்ட்டபிலிட்டி தான். ஆயிரக்கணக்கான புத்தகங் களைக்கூட ஒரே சாதனத்துக்குள் எடுத்துச்செல்ல முடியும். சிறிய பயணங்களிலும் படிப்பது, ஓய்வு இடைவேளைகளில் தேநீர் அருந்திக் கொண்டே வாசிப்பது, ஒரு புத்தகத் தில் தேவையானதை எளிதாகக் கண்டுபிடிப்பது என இந்தச் சாதனங்கள் வாசிப்பவருக்குத் தந்த வசதிகள் ஏராளம்.

அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா?
அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா?

எல்லோரும் பதிப்பாளரே!

மின்னூல்கள் கொண்டுவந்த இன்னொரு முக்கிய மாற்றம், சுயபதிப்புப் புத்தகங்களை அதிகரித்தது. பிரின்ட் போட வேண்டியதில்லை என்பதால், எழுத்தாளர்கள் எல்லோருமே பதிப்பாளர்களாக எளிதில் அவதாரமெடுக்கும் வாய்ப்பு உருவானது. இது இலக்கிய மொழியின் தரத்தைக் குறைப்பதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், புத்தகம் எழுதி வெளியிடுவதை அனைவருக்குமான ஒன்றாக்கியது; எழுத்தை ஜனநாயகப்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொரு பக்கம், பதிப்பகங்களும் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு என பிரின்ட் செய்ய வேண்டியதில்லை. மக்கள் வாங்கும்வரை இ-ஸ்டோரில் புத்தகங்கள் விற்றுக்கொண்டேதான் இருக்கும். ‘அசுரன்’ திரைப்படம் வெளியான பின், அதன் மூலக்கதை யான ‘வெக்கை’ நாவல் அதிகம் விற்றது அப்படித்தான். 2019-ல் கிண்டில் ஸ்டோரில் இந்திய மொழிப் புத்தகங்களில் அதிகம் விற்ற மின்னூல் ‘வெக்கை’தான் என அமேசான் குறிப்பிட்டுள்ளது.

புத்தகங்களும் மக்கள் மனநிலையும்!

இவற்றை எல்லாம் வைத்து, மொத்தமாக பிரின்ட்டை மக்கள் ஒதுக்கிவிட்டனர் என்று சொல்லிவிட முடியாது. இன்றும் புத்தகங்களை வாங்கி வாசிப்பதையே அதிகம் விரும்புகின்றனர் மக்கள். இது, படங்களை தியேட்டரில் பார்ப்பதற்கும், ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்ப்பதற்கும் இருக்கும் அதே வித்தியாசம்தான். என்னதான் மக்கள் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் எனப் பார்க்கத் தொடங்கிவிட்டாலும், தங்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்களின் படங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பிரமாண்ட திரைப் படங்களை திரையரங்கில் பார்க்கவே விரும்புவார்கள். அதே தான் இங்கேயும். சில படைப்புகளைப் புத்தகங்களாகப் படிக்கவே மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த சில வருடங்களில் மொத்தமாக சமூக வலைதளங்களும் மக்களின் வாழ்க்கையை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டன. இன்று சராசரியாக மக்கள் அதிகம் வாசிப்பது ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகளைத்தான். 2,000 வார்த்தை கட்டுரைகள்கூட வாட்ஸ்அப்பில் பெருமளவில் ஃபார்வேர்டு செய்யப்படுகின்றன. எந்த அளவுக்கு நாம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறோம் என்றால், சராசரியாக ஒருவர் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தில் வருடம் 500 புத்தகங்கள் படிக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. இதிலும் நிறை, குறை இரண்டுமே உண்டு. உடனடியாகச் செய்திகளையும் பலதரப்பு மக்களின் வாதங்களையும் கேட்கும் ஓர் இடமாக சமூக வலைதளங்கள் மாறியிருக்கின்றன. அதேசமயம் போலிச் செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள், அவதூறுகள் போன்றவையும் பரப்பப் படுகின்றன. ஏதேனும் போலிக் கணக்கின் பின் ஒளிந்துகொண்டு சிலர் தைரியமாக இவற்றைச் செய்கின்றனர்.

களத்தை மாற்றும் காட்சி ஊடகம்!

இப்படி, எங்கெல்லாம் எழுத்து வாசிக்கப்படுகிறது என்று ஒரு போட்டி ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எழுத்து வடிவமே மற்றொரு வடிவத்துடன் போட்டிபோட வேண்டிய சூழலும் வந்துவிட்டது. அது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கும் வீடியோ! மொபைல்களில் படம் எடுக்கும் அளவுக்கு இன்று வீடியோக்கள் எடுப்பதும் எளிதாகி யிருக்கிறது; மலிவான விலையில் இணையம் கிடைப்பதால் அதைப் பார்ப்பதும் எளிதாகியிருக் கிறது. இதனால் ஒரு செய்தியை வீடியோ வடிவில் பெறவே பெரும்பாலும் விரும்புகின்றனர். கலை, இலக்கியத்துக்கும் அதே நிலைதான். வெப் சீரிஸாகவோ, ஆவணப் படமாகவோ பார்த்து விடுகின்றனர். இந்த வடிவத்துடனான போட்டிதான் எழுத்துக்கும் வாசிப்புக்கும் பெரும் சவாலாக இருக்கப்போகிறது.

அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா?
அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா?

இதை முன்பே புரிந்துகொண்டு ‘ஆடிபில் (Audible)’ என்ற நிறுவனத்தை 2008-ம் ஆண்டே வாங்கியது அமேசான். ஆடியோ நிகழ்ச்சிகள் (பாட்கேஸ்ட்), ஆடியோ புத்தகங்கள் கிடைக்கும் சேவையான இது, இப்போது முழு வீச்சில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இது புத்தகம் படிப்பதை எளிதான ஒன்றாகவும் மாற்றியிருக்கிறது. இந்தியாவில், பாலிவுட் பிரபலங்களின் குரல்களில் கதைகள் கேட்கும் இடமாகவும் இது இருக்கிறது. விரைவில் இந்த ஆடியோ அலை தமிழ்ப் பக்கமும் திரும்பும் என எதிர்பார்க்கலாம்!

“தளம் எதுவானாலும் தரம்தான் வெல்லும்!”

வாசிப்பு மற்றும் டெக்னாலஜியின் போக்கு குறித்து, அச்சு மற்றும் மின்னூல் என இரண்டு வடிவங்களிலும் புத்தகம் வெளியிட்டுள்ள எழுத்தாளர் பாலகுமார் விஜயராமனிடம் பேசினோம். “அச்சு இதழ்கள் இன்று மின்னூல்களாகவும், ஆடியோ புத்தகங்களாகவும் மாறி நிற்கின்றன. இத்துடன் தற்போது மற்றொரு புதிய வடிவமும் பிரபலமாகி வருகிறது. ஒருவரின் கதையை இருவர் உரையாடல்களாகப் பேசி வெளியிடுகின்றனர். அச்சு இதழ்களை வாசிப்பதற்கென்று ஒரு படை இருக்கிறது என்றால், மின்னூல்களைப் படிக்கவும் தனி வாசகர் படை இருக்கிறது. மொபைல் பயன்பாடு அதிகமாகியிருப்பதால் இளைஞர்களுக்கு கிண்டில் வாசிப்பு எளிமையாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடுவதும் இதில் எளிமையாக இருக்கிறது.

பதிப்பகங்களில் புத்தகம் வெளியிடுகையில் வியாபாரம் உள்ளிட்ட காரணங்களால் நூல் வெளிவரத் தாமதமாகலாம். மின்னூல்களுக்கு அப்படியில்லை. எழுதும் ஆர்வமும், எழுத்துப் பயிற்சியும் இருந்தால் எவரும் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடமுடியும். ‘Pen To

Publish’ போன்ற போட்டிகள் தமிழில் நடத்தப் படுவதற்குக் காரணம், இங்கு வாசகர்கள் அதிகளவில் மின்னூல்களைப் படிக்கிறார்கள் என்பதால்தான். இதுபோன்ற போட்டிகளின் போது எழுத்தாளர்கள் தங்கள் நூலுக்கான மார்க்கெட்டிங் பணியையும் தாங்களே செய்ய வேண்டும்.

அச்சுக்கு மாற்றாக கிண்டில் வாசிப்பு எனப் பார்க்க வேண்டியதில்லை. இரண்டுக்கும் தனித்தனி வாசகர்கள் இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் பயன்பாட்டால் மின்னூல்களாக வாசிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால், தளமும் வடிவமும் எதுவாக இருந்தாலும் தரமான படைப்புகளே மக்களிடம் சென்று சேரும், புகழ் பெறும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு