Published:Updated:

“தொண்டாமுத்தூர் பாலைவனமாகிவிடும்!”

தொண்டாமுத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
தொண்டாமுத்தூர்

- செம்மண் கொள்ளைக்கு எதிராகக் கொந்தளிக்கும் சூழல் ஆர்வலர்கள்

“தொண்டாமுத்தூர் பாலைவனமாகிவிடும்!”

- செம்மண் கொள்ளைக்கு எதிராகக் கொந்தளிக்கும் சூழல் ஆர்வலர்கள்

Published:Updated:
தொண்டாமுத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
தொண்டாமுத்தூர்

‘‘செங்கல் சூளைகளால் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதியின் விவசாயத்தை அழித்தவர்கள், இப்போது தொண்டாமுத்தூர் பகுதியைக் குறிவைத்து செம்மண் வளத்தைச் சுரண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் விவசாய பூமியான தொண்டாமுத்தூர் பகுதியும் விரைவிலேயே பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது’’ என்று அலறுகிறார்கள் கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை, சிறுவாணி தண்ணீர், காடுகள் என்று இயற்கையாகவே வளங்கள் நிறைந்த பகுதி கோவை. அதனாலேயே கனிம வளங்கள் அதிகம் சுரண்டப்படும் பகுதியாகவும் இருக்கிறது. முக்கியமாக, தடாகம் பள்ளத்தாக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கிவந்தன.

சிறுதொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இவை நாளடைவில் ரோபோக்களைவைத்து தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்தன. நீர்நிலை, புறம்போக்கு, விவசாய பூமி என்று அனைத்து இடங்களிலும் பலநூறு அடிகளுக்குச் செம்மண் கொள்ளையடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இயங்கிவந்த இந்தச் சூளைகளால், வனவிலங்குகளும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது குறித்து, “கோவையைச் சுட்டெரிக்கும் செங்கல்சூளைகள்!’’ என்ற தலைப்பில் 2.9.2018 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பன்னீர்செல்வம், கணேஷ், நாகராஜன்
பன்னீர்செல்வம், கணேஷ், நாகராஜன்

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை சூழல் ஆர்வலர் டி.எம்.எஸ்.ராஜேந்திரன், சென்னை விலக்குகள் ஆர்வலர் முரளிதரன் உள்ளிட்ட எட்டுப்பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சட்டவிரோதமாக இயங்கிவந்த செங்கல்சூளைகளுக்குத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட நிர்வாகம் 186 செங்கல் சூளைகளுக்கு சீல் வைத்தது. ‘நீண்டகாலப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது’ என நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்குள், தடாகம் பகுதியிலிருந்து தொண்டாமுத்தூர் பகுதிக்கு ஜாகையை மாற்றிவிட்டார்கள் சூளை உரிமையாளர்கள். வடிவேலம்பாளையம், மத்திபாளையம், ஆலந்துறை, கரடிமடை, குப்பனூர், தேவராயபுரம், குப்பேபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு பகலாக செம்மண் சுரண்டப்படுகிறது.

தேவராயபுரம் அருகேயுள்ள குப்பேபாளையம் பகுதிக்கு நாம் சென்றபோது, அப்போதுதான் சுடச்சுடத் தோண்டி செம்மண்ணைக் கொட்டி வைத்த தடயங்களைப் பார்க்க முடிந்தது. புதிதாக, பிரமாண்ட செங்கல்சூளைகள் அமைக்கப்பட்டுவருவதையும் காண முடிந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரை சென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்துச் சென்றோம். மலைப்பகுதி தொடங்குவதற்குச் சில அடிகள் முன்பு வரை செம்மண் கொள்ளை நடந்துள்ளது. கிட்டத்தட்ட 20 முதல் 50 அடி ஆழத்துக்கு ராட்சதக் குழிகளையும், மண் திட்டுகளையும் காண முடிந்தது.

சட்டவிரோத செங்கல்சூளைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர் கணேஷ், ‘‘தொண்டாமுத்தூரில் ஏற்கெனவே சில சூளைகள் சிறிய அளவில் இயங்கிவந்தன. தற்போது இங்கு வந்திருக்கும் சூளைக்காரர்கள், கனரக வாகனங்கள் மூலம் இயற்கையைச் சுரண்டுகிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், சிறிய சூளைக்காரர்கள் 10 ஆண்டுகளில் எடுப்பதை, இவர்கள் ஆறு மாத காலத்துக்குள் முடித்துவிடுவார்கள். கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலங்கள் அபாயத்தில் உள்ளன. தடாகம் பகுதியை 80 சதவிகிதம் காலிசெய்து விட்டார்கள். தொண்டாமுத்தூர் பகுதியில் இதைத் தடுக்காவிடில், இது பாலைவனமாகிவிடும்.

நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம் தடை விதித்தும் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்போதும் செம்மண் சுரண்டலும், செங்கல் உற்பத்தியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரி கள் இப்போதும் செம்மண் கொள்ளையர்களின் பிடியில்தான் இருக்கிறார்கள். சில போலீஸ்காரர் களே சூளை களை நடத்தி, செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடும் எங்களைத்தான் சமூக விரோதிகள் போல் நடத்துகிறார்கள்’’ என்றார் குமுறலாக.

சமூகநீதிக் கட்சி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ‘‘தடாகம் பகுதியில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்குச் செம்மண் சுரண்டியிருக்கிறார்கள். அதில் அதிகாரிகள் செமையாக கல்லா கட்டியிருக்கிறார்கள். அங்கு 186 சூளைகள்தான் மூடப்பட்டுள்ளன. 26 சூளைகள் மூடப்படவில்லை. இப்போதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சட்டவிரோத மண்கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தடாகத்தில் செம்மண் எடுக்க முடியாதவர்கள், தொண்டாமுத்தூருக்குச் சென்று கொள்ளையடிக்கிறார்கள். யானைக் காடுகளிலும், பஞ்சமி நிலங்களிலும் கைவைத்தால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிப் பிரமுகர்களின் ஆதரவும் இருப்பதால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் காட்டில் மழைதான். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தச் சொல்லி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிடில் சட்டப் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

“தொண்டாமுத்தூர் பாலைவனமாகிவிடும்!”

‘‘உயரதிகாரிகள் மாறினாலும் லோக்கலில் இருக்கும் அதிகாரிகள் சூளை உரிமையாளர்களின் கைக்கூலிகளாகவே இருக்கிறார்கள். பல லோக்கல் அதிகாரிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு செங்கல் மாஃபியாக்கள்தான் காரணம். அரசியல் பலமும் அதிகமாக இருப்பதால்தான், தடாகம் பகுதிக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுத்தவர்களால், தொண்டாமுத்தூர் பகுதியை நெருங்க முடியவில்லை’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் கோவை மாவட்ட உதவி இயக்குநர் ரமேஷ்குமார், ‘‘தொண்டாமுத்தூர் பகுதியில் செம்மண் எடுப்பதாகப் புகார் வந்துள்ளது. அதிகாரிகளிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறோம். தவறு உறுதியானால் சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகளை மூடிவிடலாம்’’ என்றார்.

செம்மண் கொள்ளை தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், ‘‘யார் வேண்டுமானாலும் தைரியமாகப் புகார் அளிக்கலாம். விசாரணையில் தவறு உறுதியானால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

இயற்கைமீது நாம் கருணைகாட்டத் தவறினால், அது நம் மீது கருணை காட்டாது என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறோமோ?