Published:Updated:

“ஒற்றைக்கல்கூட வரவில்லை!” - ஆமை வேகத்தில் மீனாட்சியம்மன் கோயில் மண்டபப் பணிகள்...

மீனாட்சியம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனாட்சியம்மன் கோயில்

தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றுக்கு சாட்சியாகத் திகழ்கிறது மீனாட்சி அம்மன் கோயில்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பழைமை வாய்ந்த வீர வசந்தராயர் மண்டபமும், மண்டத்திலிருந்த பிரமாண்டமான கல் தூண்களும் சேதமடைந்தன. மண்டபத்தைச் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தூண்களுக்காகக் கற்களை வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டும் இதுவரை ஒற்றைக்கல்கூட கோயிலுக்கு வந்து சேராததால், அதிருப்தியில் இருக்கிறார்கள் பக்தர்கள்.

மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்தே மதுரை மாநகரம் நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றுக்கு சாட்சியாகத் திகழ்கிறது மீனாட்சி அம்மன் கோயில். கடந்த 2018, பிப்ரவரி 2-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலுக்குள் இருந்த 36 கடைகள் எரிந்தன. கூடவே, ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகிலிருக்கும் வீர வசந்தராயர் மண்டபமும் எரிந்து சேதமானது. தீயின் உக்கிரத்தால் பல நூறு ஆண்டுகள் உறுதியாக நின்றிருந்த கல் தூண்களும் சேதமாகின. கடைகளில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்தால் பக்தர்களும் வியாபாரிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

 “ஒற்றைக்கல்கூட வரவில்லை!” - ஆமை வேகத்தில் மீனாட்சியம்மன் கோயில் மண்டபப் பணிகள்...

இதையடுத்து, கோயிலில் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டதுடன், கோயில் மண்டபத்தில் கடைவைத்திருக்கும் வியாபாரிகளுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. அப்போது மூடப்பட்டதுதான் வீர வசந்தராயர் மண்டபம். `சேதமடைந்த தூண்களைப் புனரமைத்து விரைவில் மண்டபம் திறக்கப்படும்’ என்று அறிவித்தது தமிழக அரசு. ஆனால், விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தப் பணியும் தொடங்கப்படாத நிலையில், பக்தர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து மண்டபத்தைப் புனரமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு. ஆனாலும் இதுவரை பணிகளைத் தொடங்கவே இல்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் காளமேகம் இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசினார். “மிகவும் தாமதமாகத்தான் புனரமைப்புப் பணிகளையே ஆரம்பித்தார்கள். அப்படியும் பணிகளில் வேகம் இல்லை. சேதமடைந்த மண்டபத்தில் புதிய கல் தூண்களை அமைக்க, தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு செய்த சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்கள், கடைசியாக நாமக்கல் மாவட்டம், களரம்பள்ளி மலையில் தரமான கருங்கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்தக் கற்களை வெட்டி எடுப்பதற்காக, 2020-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அரசு சார்பில் பூமி பூஜை நடந்தது.

கற்களை வெட்டியெடுப்பதற்காக மட்டும் 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு கல்கூட மதுரைக்கு வரவில்லை. இந்தப் பணிகள் நடக்காததால், கோயில் கும்பாபிஷேகமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இனியும் தாமதிக்காமல், வேலைகளை விரைந்து முடித்து, பழைமை மாறாமல் வீர வசந்தராயர் மண்டபத்தைப் புனரமைக்க வேண்டும்” என்றார் அக்கறையுடன்.

 “ஒற்றைக்கல்கூட வரவில்லை!” - ஆமை வேகத்தில் மீனாட்சியம்மன் கோயில் மண்டபப் பணிகள்...

கோயில் பணியாளர்கள் சிலரோ, “மண்டபத்தைப் புனரமைக்க மொத்தம் 16 கல் தூண்கள் தேவை. இவை ஒவ்வொன்றும் 23 அடி உயரம்கொண்டவை. இதற்காக நாமக்கல் மாவட்டம், களரம்பள்ளி மலையில் ஒரு லட்சம் கன அடி அளவுக்குக் கற்களை வெட்டியெடுக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அந்தப் பணிகளைத் துரிதப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரிலிருந்து அதிகாரிகள்வரை அலட்சியமாக இருக்கிறார்கள். குவாரியைக் கண்காணிக்க இங்கிருந்து அனுப்பப்பட்ட கோயில் ஊழியர்களுக்கான சம்பளம், தங்கும் செலவு, உணவு செலவு என இதுவரை 20 லட்ச ரூபாய் செலவழிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், ஒற்றைக்கல்கூட கோயிலுக்கு வந்தபாடில்லை” என்று புலம்பினார்கள்.

மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் பேசினோம். “புனரமைப்பு வேலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பிரமாண்டமான கற்களைச் சேதமில்லாமலும் தரமாகவும் வெட்டியெடுத்து வர வேண்டும் என்பதால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. தவிர, வீர வசந்தராயர் மண்டபம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாலும் தாமதம் ஏற்படுகிறது. ஸ்தபதியின் கட்டுப்பாட்டில் இந்தப் பணிகள் நடப்பதால், நாங்கள் அதில் தலையிட முடியாது” என்றார்.

விரைவில் பழைமை மாறாமல் புதுப்பொலிவு பெறட்டும் மண்டபம்!