Published:Updated:

ரூ.25 கோடி டு 191 கோடி... கூடுதல் ஐ.ஜி-யை வீழ்த்திய பத்திரப்பதிவு மோசடி!

பரந்தூர்
பிரீமியம் ஸ்டோரி
பரந்தூர்

தனிமனை எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது என்பதைப் பிரத்யேகமாக ஆவணத்தில் குறிப்பிடாத நிலையில், இந்த ஆவணத்தை பதிவுக்காக அனுமதித்ததே முரணானது

ரூ.25 கோடி டு 191 கோடி... கூடுதல் ஐ.ஜி-யை வீழ்த்திய பத்திரப்பதிவு மோசடி!

தனிமனை எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது என்பதைப் பிரத்யேகமாக ஆவணத்தில் குறிப்பிடாத நிலையில், இந்த ஆவணத்தை பதிவுக்காக அனுமதித்ததே முரணானது

Published:Updated:
பரந்தூர்
பிரீமியம் ஸ்டோரி
பரந்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,751 ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. அதைத் தொடர்ந்து, விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், `நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்வுக்காக சந்தை விலையைவிட மிகவும் கூடுதலான இழப்பீடு வழங்கப்படும்’ எனவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 19-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது அறப்போர் இயக்கம். அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``பரந்தூரில் விமான நிலைய திட்டத்தில் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படுத்தும் வகையில் பத்திரப்பதிவுத்துறையில் மோசடி நடந்திருக்கிறது. இதில் ஈடுபட்ட கூடுதல் ஐ.ஜி கே.வி. ஸ்ரீனிவாசன், சார்பதிவாளர் ராஜதுரை மற்றும் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

ரூ.25 கோடி டு 191 கோடி... கூடுதல் ஐ.ஜி-யை வீழ்த்திய பத்திரப்பதிவு மோசடி!

இது குறித்து, நம்மிடம் விரிவாகப் பேசிய ஜெயராம் வெங்கடேசன், ``விமான நிலையத்துக்கு எடுக்கப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குகையில், ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்களைவிட, சதுரடி கணக்கில் இருக்கும் மனைகளுக்குக் கூடுதலாக இழப்பீடு கிடைக்கும். எனவே, பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் என்ற தனியார் நிறுவனத்தினர் பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் இருக்கும் தங்களது 73 ஏக்கர் நிலத்தில் ஒருசில பகுதிகளை சதுரஅடியில் பதிவுசெய்ய மார்ச் 12, 2020-ல் காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் (எண் 2) அலுவலகத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர். அப்போது சார்பதிவாளராக இருந்த ரா.பிரகாஷ், `இதைப் பதிவு செய்ய முடியுமா?’ என்று விளக்கம் கேட்டு காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளருக்கு மார்ச் 26, 2020-ல் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘இந்த ஆவணங்களை ஆய்வுசெய்ததில், பசுமை விமான நிலையம் அமைய கருத்துரு உள்ள நிலையில், இழப்பீட்டுத் தொகையை அதிகமாகப் பெறும் பொருட்டு இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இதனால் அரசுக்குப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த மாவட்டப் பதிவாளர் பாலசுப்பிரமணியன், `தனிமனை எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது என்பதைப் பிரத்யேகமாக ஆவணத்தில் குறிப்பிடாத நிலையில், இந்த ஆவணத்தை பதிவுக்காக அனுமதித்ததே முரணானது. சர்வே எண் விவரத்தைக் குறிப்பிடக் கோரி ஆவணத்தைப் பதிவுசெய்யாமலேயே திரும்ப வழங்கியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதம் ஜூன் 15, 2020 அன்று எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த நாளே (ஜூன் 16) கூடுதல் பதிவுத்துறை ஐ.ஜி கே.வி.ஸ்ரீனிவாசன், சொத்து விவரத்தில் சதுரஅடி எனக் குறிப்பிட்டுள்ள ஒரே காரணத்துக்காக இதற்குத் தடையின்மைச் சான்று கேட்கத் தேவையில்லை என்றும், பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தின் ஆவணங்களை விரைந்து பதிவுசெய்து விடுவிக்குமாறும் சார்பதிவாளர் பிரகாஷுக்கு கடிதம் அனுப்புகிறார். சார்பதிவாளரும், மாவட்டப் பதிவாளரும் இந்த முறைகேட்டுக்கு உடன்படாததால், அந்த நிறுவனம் நேரடியாக கூடுதல் பதிவுத்துறை ஐ.ஜி-யை அணுகியதே இந்த திடீர் தலையீட்டுக்குக் காரணம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கத்தினர்...
பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கத்தினர்...

இதைத் தொடர்ந்து, பத்திரப்பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த பிரகாஷை இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடத்தில் ராஜதுரை என்பவரை நியமனம் செய்திருக்கிறார்கள். பிறகு, கூடுதல் ஐ.ஜி ஸ்ரீனிவாசனும், சார்பதிவாளர் ராஜதுரையும் கூட்டுச் சதி செய்து ஆவணங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். அதாவது, ரூ.8.71 லட்சமாக இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை, சதுரஅடி மதிப்பீட்டில் ஏக்கர் ரூ.64.45 லட்சம் என்று நிர்ணயித்து பதிவுசெய்திருக்கிறார்கள். இதனால், ரூ.25 கோடி இழப்பீடு வழங்கவேண்டிய இடத்துக்கு, அரசு ரூ.191 கோடி வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், `கிராமப்புறங்களிலுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பதன் அடிப்படையில் அரசுக்கு ரூ.165 கோடி கூடுதலாக இழப்பு ஏற்படும். எனவே, மேலே சொன்ன மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினோம். கூடுதல் பதிவுத்துறை ஐ.ஜி கே.வி.ஸ்ரீனிவாசன் இந்த மாதத்துக்குள் பணி ஓய்வு பெறவிருப்பதால், அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்” என்றார்.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் விளக்கம் கேட்டபோது, ``இது என்ன எங்கள் ஆட்சியிலா நடைபெற்றது... அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முறைகேட்டை ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்... வேறு எந்தத் துறையிலும் ஊழல் நடைபெறவில்லையா... ஐந்தாறு வருடமாக அறப்போர் இயக்கத்தினர் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?” என்று கோபமாகக் கேட்டார். `தவறு அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றிருந் தாலும், இப்போது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தங்களுக்குத்தானே இருக்கிறது?” என்பதை நினைவூட்டியதும், ``எதுவாக இருந்தாலும் எங்கள் முதல்வர்தான் முடிவெடுப்பார்” எனக் கூறி வெடுக்கென அழைப்பைத் துண்டித்தார்.

மூர்த்தி
மூர்த்தி

நாம் பேசிய அன்றிரவே அமைச்சர் மூர்த்தி, அதிரடியாக ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ``சென்னை விமான நிலையம் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டால், அரசிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகை பெறும் நோக்கில்தான் இந்த ஆவணங்கள் பதியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வர வலுவான முகாந்திரம் உள்ளது. அதேசமயம் இந்த ஆவணங்கள் அனைத்தும் 2020-ம் ஆண்டு முந்தைய ஆட்சிக்காலத்தில் எழுதிப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணப் பதிவைக் காரணம் காட்டி, தற்போது அமையவிருக்கும் விமான நிலையத்துக்கு செய்யப்படவிருக்கும் நில எடுப்புக்கு மிக அதிக அளவில் அரசுப் பணத்தைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது. அரசுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் நேர்வுகளில் இது போன்ற அதிக மதிப்புடைய ஆவணங்கள், ‘பகட்டு மதிப்பு ஆவணங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுவிடும். அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும், நில உடைமையாளர்களுக்குச் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆவணங்களைப் பதிந்த பதிவாளர், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அதற்கு உதவிய ஓர் உயர் அலுவலர் (கூடுதல் ஐ.ஜி ஸ்ரீனிவாசன்) மீது உரிய நடவடிக்கை எடுக்க ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறைக்கு ஏற்கெனவே கடிதம் எழுதப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி ஸ்ரீனிவாசன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அறிக்கை தந்ததைத் தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

``சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதுமா... எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரணை நடத்தி சிறையில் அடைக்க வேண்டாமா... அப்போதுதானே தவறு செய்யும் மற்ற அதிகாரிகளுக்கும் பயம் வரும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அறப்போர் இயக்கம்.

நியாயமான கேள்வி!