Published:Updated:

பத்திரப்பதிவு... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

பத்திரப்பதிவு
பிரீமியம் ஸ்டோரி
பத்திரப்பதிவு

பட்டா இல்லாத சொத்து, அரசு நிலமாக, புறம்போக்காக, கோயில் நிலமாகக்கூட இருக்கலாம். சில வகை நிலங்களுக்குப் பட்டா வாங்க முடியும்.

பத்திரப்பதிவு... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

பட்டா இல்லாத சொத்து, அரசு நிலமாக, புறம்போக்காக, கோயில் நிலமாகக்கூட இருக்கலாம். சில வகை நிலங்களுக்குப் பட்டா வாங்க முடியும்.

Published:Updated:
பத்திரப்பதிவு
பிரீமியம் ஸ்டோரி
பத்திரப்பதிவு
சொத்துப் பத்திரம் பதிவு தொடர்பாக வாசகர்களின் சந்தேகங்களுக்கு வழக்கறிஞர் மற்றும் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்) ஆ.ஆறுமுக நயினார் பதில் அளித்துள்ளார்.

1978-ம் ஆண்டு என் தந்தையால் நிலம் வாங்கப்பட்டு அதே ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 1984-ல் பட்டா வேறொருவர் பெயருக்கு மாற்றமாகியுள்ளது. இதை வைத்து 2013-ல் அவர்கள் அந்த நிலத்துக்குப் பத்திரப்பதிவு செய்துள்ளார்கள். நிலம் பத்திரப்பதிவு செய்த ஆண்டிலிருந்து (1978) எங்கள் அனுபவத்தில் உள்ளது. இதை எவ்வாறு சரிசெய்வது?

- ரமேஷ், மாங்குடி

“உங்கள் நிலத்துக்குத் தவறாக வழங்கப்பட்ட பட்டாவை வருவாய் கோட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்து, ரத்து செய்ய வேண்டும். இது முடிந்தவுடன் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றி, அதை வைத்து குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தவறாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைச் செல்லாது என்று ஆணை பெற்று, உடனடியாக அந்த ஆணையின் நகலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தால், சொத்து மீண்டும் உங்கள் பெயருக்கு வந்துவிடும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆ.ஆறுமுகநயினார்
ஆ.ஆறுமுகநயினார்

எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?

- செங்குட்டுவேல், பழனியப்பன்

“பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.’’

பத்திரப்பதிவு... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?

- சி.கார்த்திகேயன், சாத்தூர் – 626 203

“ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலபரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்கினேன். விற்றவர் தாய்ப்பத்திரம் தரவில்லை. என் நிலத்துக்கு அடுத்த இடத்தில் வீடு கட்டியவரிடம் தாய்ப்பத்திரம் வாங்கினால் செல்லுமா? விளக்கம் தரவும்.

- ராஜு, இ-மெயில் மூலம்

“தேவையில்லை. பெரும் பரப்பைப் பிரித்து பிளாட் போட்டுவிட்டால் தாய்ப்பத்திர நகல் மட்டுமே தருவார்கள். நீங்கள் வைத்திருக்கும் 3,600 சதுர அடிக்கு உரிய விற்பனைப் பத்திரத்துக்கு தாய்ப்பத்திர நகலே போதும்.”

பத்திரப்பதிவு... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

ஒரு வீடு விலைக்கு வருகிறது. அந்த வீட்டுக்கு பட்டா இல்லை. ஆனால், அந்த வீட்டுக்கு மின்சாரக் கட்டணம், வீட்டு வரி போன்றவை கடந்த 10 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. பட்டா இல்லாமல் இருக்கும் இந்த வீட்டை வாங்கலாமா? அப்படி வாங்கினால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

- சதீஷ்குமார், இ-மெயில் மூலம்

“பட்டா இல்லாத சொத்து, அரசு நிலமாக, புறம்போக்காக, கோயில் நிலமாகக்கூட இருக்கலாம். சில வகை நிலங்களுக்குப் பட்டா வாங்க முடியும். சிலவற்றுக்கு பட்டா கொடுக்க மாட்டார்கள். அந்த நிலத்தைப் பற்றி கிராம நிர்வாக அதிகாரியிடம் விசாரித்து தெரிந்து கொண்டு, பின்னர் செயல்படவும்.”

எனது மூதாதையர் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலப் பத்திரம் ஒன்று கிடைக்கப் பெற்றேன். அப்பத்திரத்தில் குறிப்பிட்ட நிலம் எங்கு இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்பதையும் (காரணம் அந்த நிலத்தின் நான்கு எல்லைகள் மூன்று தலைமுறைக்கு முந்தைய அடையாளம் இன்று இல்லை) வேறு எவரேனும் அந்த நிலத்தை அனுபவித்து வரும்பட்சத்தில் அதை மீட்டெடுக்க என்ன வழி என்பதையும் கூறுங்கள்.

- ராம் பிரசாத், மெயில் மூலம்

“தனியார் நிலத்தை 12 ஆண்டுகளுக்குமேல் வேறு ஒருவர் வரி வகையறாக்கள் செலுத்தி ஆண்டு அனுபவித்து வரும்பட்சத்தில் அதை மீட்க வழியில்லை. சர்வேயரிடம் விண்ணப்பித்து நிலத்தை அளக்க ஏற்பாடு செய்தால் கண்டுபிடிக்கலாம். அதை வேறு ஒருவர் கையகப்படுத்தியிருக்காத நிலையில், வருவாய் துறை அல்லது நீதிமன்றம் வழியாக அதை மீட்க முயற்சி செய்யலாம்.”

வீட்டு மனையைப் பத்திரப்பதிவு செய்யும்போது அதனுடன் லே அவுட் சேர்த்து பதியப்படவில்லை. இப்போது பட்டா மாற்றம் செய்ய பதியப்பட்ட லே - அவுட் காப்பி கேட்கிறார்கள். என்ன செய்வது?

- சங்கர், பாண்டி

“புரமோட்டரிடம் லே-அவுட் காப்பி இருக்கும். அதை வாங்கிக் கொடுக்கலாம்.”

முறையான அப்ரூவல் இல்லாத வீட்டு மனை வாங்கினால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்?

- கோமதி ரவிக்குமார், மதுரவாயல், சென்னை

“அந்த நிலத்தில் வீடு கட்ட உள்ளாட்சி அனுமதி தரமாட்டார்கள். எனவே, மின் இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு கிடைக்காது. சிலசமயம் சாலைகூட போட்டுத் தர மாட்டார்கள்.”

நாங்கள் மூன்று சகோதரர்கள். நாங்கள் இருக்கும் வீட்டு சொத்துப் பத்திரம், என் பெற்றோர் மற்றும் எங்கள் மூவர் பெயரில் இருக்கிறது. பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை. எங்களுக்கு நான்கு சகோதரிகளும் உள்ளனர். இப்போது என் பெற்றோர் பெயரை நீக்கிவிட்டு, சொத்தை எங்கள் மூவர் பெயரில் மறுபதிவு செய்துகொள்வது எப்படி?

- கிருஷ்ணகுமார், மெயில் மூலம்

“தற்போதைய இந்து வாரிசுரிமைச் சட்டப்படி அனைத்து சகோதரிகளுக்கும் பெற்றோர் சொத்தில் சம உரிமை உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். ஒருவேளை, உங்கள் சகோதரிகள் சொத்தை விட்டுத் தர விரும்பினால், முதலில் அவர்களிடமிருந்து நீங்கள் மூவரும் விடுதலைப் பத்திரம் பதிவு செய்தபிறகு, பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்து சொத்தை மூன்று பங்காகப் பிரித்து தனித்தனியே அடையலாம்.”

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் என் மாமனார், என் மாமியார் பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கினார். மனை பதிவு செய்யப்பட்ட பெயரும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டில் உள்ள பெயரும் வேறுவேறாக இருக்கிறது. என் மாமியார், என் மனைவிக்கு இந்த வீட்டை அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

- ராஜன்.எஸ், மெயில் மூலம்

“எது சரியான பெயர் என்று நீங்கள் முதலில் கூறவில்லையே! உங்கள் மாமியார் சரியான பெயரை சார்பதிவாளரிடம் ஆதாரத்துடன் நிரூபித்து பிழைத் திருத்தல் ஆவணம் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் அதன் அடிப்படையில் மகளுக்கு தான ஏற்பாடு ஆவணம் பதிவு செய்துகொடுக்கலாம்.”

சொத்தின் உரிமையாளர் கோயம்புத்தூரில் இருக்கிறார். சொத்து மதுரையில் இருக்கிறது. மதுரையில் இருக்கும் நான் சொத்தை வாங்க உள்ளேன். கொரோனா காரணமாக சொத்தின் உரிமையாளர் கோயம்புத்தூரில் பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் என்கிறார். அப்படிச் செய்ய முடியுமா?

- ஏ.எஸ்.அழகர்சாமி, இ-மெயில் மூலம்

“மதுரையில் உள்ள சொத்துக்கு கோயம்புத்தூரில் கிரயப் பத்திரம் பதிவு செய்ய முடியாது. ஆனால், சொத்தைப் பதிவு செய்ய கோயம்புத்தூரில் பொது அதிகார ஆவணம் பதிவு செய்து, அதன் அடிப்படையில் மதுரையில் பொது அதிகார ஏஜென்ட் மூலம் கிரயப் பத்திரம் பதிவு செய்துகொள்ளலாம்.”

ஐந்து வீடுகள் கொண்ட எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் உள்ள பொது இடத்தில், ஒரு படுக்கை அறையை ஒரு வீட்டுக்கு எங்கள் அனுமதி இல்லாமல் பில்டர் கட்டிவிட்டார்.அந்த அறையைத் தற்போது ரெஜிஸ்டர் செய்து விற்க முயற்சி செய்கிறார். அவ்வாறு பத்திரப்பதிவு செய்ய முடியுமா?

- டி.பிரபு, அம்பத்தூர், சென்னை

“பல பில்டர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். இதுபற்றி எனது ‘ரியல் எஸ்டேட் குற்றங்கள்’ என்ற ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளேன். பில்டர்கள் எல்லோருக்கும் சதுர அடிகளாகப் பிரித்து விற்றபின் மீதம் இருந்தால், அந்த அடிப்படையில் அவர், அவ்வாறு கட்டி விற்க முடியும். மீதம் இல்லாமல் மொத்த பரப்பளவையும் விற்றிருந்தால், இல்லாத பிரிக்கப்படாத பாகத்தில் வீடு கட்டி அதை விற்பது ஒருவகையில் ரியல் எஸ்டேட் மோசடி. இதற்கு காவல்துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கலாம்.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பத்திரப்பதிவு... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

மூத்த குடிமக்களுக்கான முதலீடுகள் குறித்து உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கக்கூடும். இவற்றுக்கு நிதி ஆலோசகர் கே.ராமலிங்கம் (Holisticinvestment.in) பதில் அளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.