Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 10 - முதுமைப் பருவத்தினருக்கு ஏற்ற முதலீடு எது?

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - நிதி ஆலோசகர் ஏ.கே.நாராயண்

முதுமைக்கு மரியாதை! - 10 - முதுமைப் பருவத்தினருக்கு ஏற்ற முதலீடு எது?

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - நிதி ஆலோசகர் ஏ.கே.நாராயண்

Published:Updated:
முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

`அனுபவ் ஃபவுண்டேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த வர்கள் காவல்துறையில் முறையீடு!’

`ஸ்ரீதேவி கோல்டு பேலஸ் நிறுவனம் ஓட்டம்... தங்கநகை சேமிப்பில் முதலீடு செய்தவர்கள் பரிதவிப்பு!’

`ஆர்.பி.எஃப் நிதி நிறுவனம் மூடப் பட்டது... முதலீடு செய்தவர்கள் தலையில் இடி!’

- இதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன் தினசரிச் செய்தி.

பணி ஓய்வு பெற்றபோது கிடைத்த பணம், கையிலிருந்த சேமிப்பு என மொத் தத்தையும் மோசடி முதலீட்டு நிறுவனங் களின் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி முதலீடு செய்துவிட்டு, அதன்பிறகு கையேந்தும் நிலைக்குப் பலர் ஆளா னார்கள்.

இப்படி ஏமாந்தவர்களில் பெரும் பாலானவர்கள் முதியவர்களே. அதன் பிறகு, ‘பாதிக்கப்பட்டோர் சங்கம்’ என்கிற பெயரில் பல்வேறு சங்கங்களை ஆரம் பித்து, சென்னை நகரின் பல்வேறு பூங்காக் களையே சங்க அலுவலகமாக்கிக் கொண்டு, இழந்த பணத்தை மீட்பதற்காக சட்டப்போராட்டம் நடத்திய பலரும் நடைபிணமாகிப் போனார்கள்.

மகளின் திருமணத்துக்காக, மகளின் படிப்புக்காக, பேரன்களின் வாழ்க்கைக் காக, ஓய்வுகாலத் தேவைக்காக என்று பல காரணங்களுக்காக முதலீடு செய்த இவர் களில் பலரின் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக சூன்ய மாகிப்போனது. இந்த ஏமாற்றுக்கதை இன்றும் தொடரத்தான் செய் கிறது.

இந்த நிலையில், பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக் கும் பணத்தை சரியான வழியில், சரியான இடத் தில், சரியான முறையில் முதலீடு செய்வது எப்படி என்ற கேள்விகளுடன் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஏ.கே. நாராயணை சந்தித்தோம்.

 ஏ.கே.நாராயண்
ஏ.கே.நாராயண்

முதலீடு... மூன்று விஷயங்கள் முக்கியம்

“முதுமைப் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைத்து வயதினருமே முதலீடு என்பதில் மூன்று முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில், முதலீடு செய்த பணம் பாது காப்பாக இருக்க வேண்டும். இரண்டாவது, நம்முடைய முதலீட்டுப் பணம் நமக்குத் தேவைப்படும்போது எளிதாகத் திரும்ப எடுக்கும்படி இருக்க வேண்டும். மூன் றாவது, முதலீடு செய்த பணத்தைவிட கூடுதலான தொகை, சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும்.

பல வருடங்கள் உழைத்து ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகையை முதலீடு செய்யும்போது, அந்தத் தொகை இனிவரப் போகும் நாள்களுக்கும் பயன்படும் வகை யில், அதே நேரத்தில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். உதாரணமாக,

10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய நினைக் கிறோம் என்றால், அந்தப் பணம் ஐந் தாண்டுகள், பத்தாண்டு களுக்குப் பிறகும் பாது காப்பாக, நமக்கானதாக இருக்க வேண்டும். அந்தப் பணத்தின் மூலம் மாதந் தோறும் அல்லது ஆண் டுக்கு ஒருமுறை கிடைக் கும் பணம் பற்றி பின்னர் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

அதிரடி ஆஃபர்... அதிக வட்டி... ஆபத்து!

சமீபத்தில் அதிரடி ஆஃபரை அறிவித்த ஒரு நிறுவனத்தின் விளம் பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் பலர். அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டதும் முதலீடு செய்த பணம் வருமா, வருதா என்ற நிலையில் பலர் தவித்துக்கொண்டிருக் கிறார்கள்.

வங்கியில் முதலீடு செய்யப்படும் முத லீட்டுக்குக் கிடைக்கும் வட்டி 5% என்கிறபோது, 18%, 24%, 32% என்கிற தனியார் நிறுவனங்களின் விளம்பரத்தை நம்பி ஏமாந்தவர்கள் அதிகம். நகை வாங்கும் திட்டம், மரம் வளர்க்கும் திட்டம், ஈமு கோழி திட்டம் என்று வகை வகையான, விதம் விதமான திட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

இடமா.... தங்கமா... எது பெஸ்ட்?

உங்கள் நண்பர் சொல்கிறார் என்பதற் காக, அவர் ஏதாவது ஒரு திட்டத்தில், ஒரு நேரம் பலனடைந்து விட்டார் என்ப தற்காக, நீங்களும் அந்தத் திட்டத்தில் சேர்ந்து ஏமாந்துவிடக் கூடாது. உங்கள் பணத்தை எந்த இடத்தில் முதலீடு செய் தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அடுத்து, கையில் இருக்கும் பணத்துக்கு இடம் வாங்கலாமா, தங்க நகை வாங்க லாமா என்று சிலர் யோசிக்கிறார்கள். ஆனால், இப்படி வாங்கப்படும் இடமும் பொருளும் முதுமைப்பருவத்தில் இருப் பவர்களுக்குத் தேவைப்படும்போது உடனே கிடைப்பது என்பது சற்று சிரமம்தான்.

இன்றைய நிலையில், நகர எல்லைக்குள் நாம் எதிர்பார்க்கும் விலையில் நிலம் கிடைப்பது கடினம். நகரத்தை விட்டு வெளியே வாங்கப்படும் சொத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி வாங்கப்படும் சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது உடனே விற்கவும் முடியாது.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர், நிலம் வாங்கிப்போட்டால் நல்ல லாபம் கிடைக் கும் என்று நினைத்து ஓர் இடத்தை வாங்கியிருந்தார். அவர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது குறிப்பிட்ட தொகை தேவைப்பட்டது. ஆனால், இந்த இடத்தை உடனடியாக அவரால் விற்க முடிய வில்லை. இதனால் மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லாமல் கடைசியில் இறந்தே போனார். அவர் இறந்த பிறகுதான் அவர் நிலம் வாங்கிய விஷயம் அவர் பிள்ளை களுக்கே தெரிந்திருக்கிறது.

முதுமைக்கு மரியாதை! - 10 - முதுமைப்  பருவத்தினருக்கு 
ஏற்ற முதலீடு எது?

அடுத்து, தங்கத்தின் விலையேற்றம் உயர்ந்து கொண்டே இருக்கும்நிலையில், பணம் இருக்கும்போது தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொண்டால் தேவையான போது விற்கலாம் என்று பலர் நினைக் கிறார்கள். இதில் ஓரளவு லாபம் கிடைத் தாலும், எதிர்பார்க்கும் அளவு லாபம் கிடைப்பது சிரமம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, வெளி நாட்டில் இருந்துதான் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. பணவீக்கத் தைப் பொறுத்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுமே தவிர, இன்றைய பணவீக்கத்தைப் பொறுத்து பெரிதாக லாபம் இருக்காது. வாங்கிய தங்கத்தைத் தேவையான நேரத்தில் விற்கும்போது பழைய நகை, சேதாரம் என்று வாங்கிய விலைதான் கிடைக்கும்.

உங்கள் பயன்பாட்டுக்காக தங்க நகை களை வாங்கிப் பயன்படுத்துவதில் தவ றில்லை. அதை முதலீடாகக் கருதுவதுதான் தவறு. இன்றைய சூழ்நிலையில், மொத்த மாக நகைகளை வாங்கி வீட்டில் பாதுகாப் பாக வைத்துக்கொள்வதும் சிரமம்.

தற்போது மத்திய அரசு தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சில திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டில் இருப்பதால், பாதுகாப்பானவை என்பதுடன், முதலீடு செய்த பணத்துக் கேற்ற வட்டியும் கிடைக்கும். தேவையான போது பணமாகவும் பெறலாம்.

வங்கியில் தற்போது மூத்த குடி மக்களுக்கு 6 சதவிகிதத்துக்குமேல் வட்டி கிடைப்பதில்லை. இந்த முதலீடு பாது காப்பானதுதான் என்றாலும், வங்கி தரும் வட்டி நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு மிகக் குறைந்த தொகையாக இருக்கும்.

குடும்ப டாக்டர், குடும்ப லாயர்.... குடும்ப நிதி ஆலோசகர்!

சரி, மூத்த குடிமக்கள் இனி என்ன செய்யலாம்? கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்தால் பாதுகாப்பானதாக இருக்கும், தேவையானபோது கிடைக்கும், எதிர்பார்க்கும் வருமானமும் கிடைக்கும் என்று நிதானமாக யோசிக்கலாம். அதிக வருமானம் கிடைக்கிறதே என்று ஆசைப் பட்டு, அவசரப்பட்டு இதுநாள் வரை சம் பாதித்த பணத்தை முதலீடு செய்துவிடக் கூடாது. நஷ்டமடைந்த பிறகு யோசிக்கக் கூடாது.

முதுமைப் பருவத்தில் அடியெடுத்து வைப்பவர்கள் தங்களுக்கான முதலீட்டு விஷயத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நிச்சயம் கலந்தாலோசிக்க வேண்டும். நாம் எதில் பணத்தைப் போட்டு முதலீடு செய்தாலும், அது தொடர்பான விவரங் களை நம்முடைய குடும்ப உறுப்பினர் களிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். அப்போதுதான், முதலீட்டுத் தொகையை நாம் இல்லாத நிலையிலும் திரும்பப் பெற முடியும்.

தற்போது முதலீடு பற்றி நிறைய விழிப் புணர்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. பத்திரிகைகளில் முதலீடு பற்றி விரிவான செய்திகள் வருகின்றன. அவற்றின் அடிப் படையில் தெளிவான முடிவை எடுக்க லாம். நம் குடும்பத்துக்கென்று ஃபேமிலி டாக்டர், ஃபேமிலி லாயர் என்று இருப்பது போல, நம்பிக்கையான குடும்ப நிதி ஆலோசகர் ஒருவரை அணுகலாம். அவர், உங்களுக்குள்ள சொத்து விவரம், கையில் உள்ள இருப்பு, முதலீடு செய்ய நினைக்கும் தொகை, இனிவரும் வாழ்க்கைத் தேவைக்கான பணம் முதலியவற்றை விசாரித்து சில யோசனைகளை வழங்கி உதவுவார்” என்று நிறுத்தியவர்,

“முதலீடு என்பது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். அது, முதுமைப் பருவத்தில் உள்ளவர்களுக்கான பலம். எனவே, ஓய்வு பெற்றபிறகு வரும் தொகையை வைத்து முதலீடு செய்வது என்ற எண்ணத்தை மாற்றி, சம்பாதிக்கத் தொடங்கியவுடனே சேமிக்கத் தொடங்குவதுதான் சிறப்பு” என்று முடித்தார்.

- துணை நிற்போம்...

*****

தமிழக அரசின் சிறப்புத் திட்டம்

சீனியர் சிட்டிசன்களுக்கு கடந்த சில ஆண்டு களாக வருமானம் குறைந்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TNPFC (Tamilnadu Power Finance and Infrastructure Development Corporation) நிறுவனம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங் களுக்கு வங்கிகளைவிட கூடுதல் வட்டி வழங்குகிறது.

முதுமைக்கு மரியாதை! - 10 - முதுமைப்  பருவத்தினருக்கு 
ஏற்ற முதலீடு எது?

மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் https://www.tnpowerfinance.com/tnpfc-web இணையதளத்துக்குச் சென்று அறியலாம்.

வாசகர்களின் முதுமை அனுபவங்கள்...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ஏராளமான அனுபவங்கள், அறிவுரைகள்... அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில...

ஹாய்... ஹேவ் எ குட் டே...

சமீபத்தில் என் மகளின் பிரசவத்தின்போது அவளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா சென்றிருந் தேன். ஒருநாள் ஹைப்பர் மார்க்கெட்டுக்குச் சென் றேன். பொருள்கள் வாங்கிய பிறகு பில் போடும் இடத்தில் நல்ல கூட்டம்.

அந்த கவுன்ட்டரில் இருந்த 60 வயதைத் தாண் டிய பெண்மணி ஒருவர், கச்சிதமான உடையணிந்து, மாறாத புன்சிரிப்புடன் கஸ்டமர்கள் வாங்கி வந்த பொருள்களை மேஜையில் வைத்து உற்சாகமாக பில் போட்டுக்கொண்டிருந்தார். அவருடைய செய லைப் பார்த்த எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

நம் ஊரில் மின்சாரத்துறை, ரேஷன் கடைகள் போன்ற இடங்களில் அதிகம் கூட்டம் சேரும் கவுன்டர்களில் இப்படிச் செயல்படுபவர்களைப் பார்ப்பது அரிது. இந்த நிலையில் அமெரிக்கப் பெண்மணியின் சுறுசுறுப்பு ஆச்சர்யத்தை ஏற் படுத்தியது.

அதேபோல் நகர வீதிகளில் செல்லும் மூத்த பருவத் தினரைப் பார்த்து தெரியாதவர்களாக இருந் தாலும்கூட ‘ஹாய்... ஹேவ் எ குட் டே’ என்று சிரிப்புடன் சொல் கிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பின் இப்போதெல்லாம், புன்சிரிப்புடன் செயல்படுகிறேன். என்னைப் போன்றவர்களைப் பார்த்தால் ‘ஹாய்’ சொல் கிறேன்.

- எஸ்.உஷா, மதுரை-17

முதுமைக்கு மரியாதை! - 10 - முதுமைப்  பருவத்தினருக்கு 
ஏற்ற முதலீடு எது?

ஓய்வு முடிவல்ல!

மகள், மகன்கள் எல்லாரும் திருமணம், வேலை, படிப்பு என்று பறந்துவிட்ட பின் தினம் வேலைக்காகப் பறந்து கொண்டிருந்த நான், ரிட்டையர்மென்ட் என்ற பெயரில் கூட்டில் அடங்கும் நிலை வந்தது. மகள் பிரசவம், மகனுடன் வாசம் என்று வெளிநாட்டுப் பயணங்களில் சில காலம் சென்றது. எனக்கு வெறுமை யுணர்வு நீடிக்காவண்ணம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்வாய்ப்புகள் எதிர்வந்து நின்றன என்றே கூறலாம்.

எனக்கு நல்ல நூல்கள், புதினங்கள் படிப்பதில் ஈடுபாடு உண்டு. எழுதிப் பார்ப்போமே என்று தோன் றியது. இந்த நிலையில்தான் ஒரு வலைதள மாதப் பத்திரிகைக்கு கதை, கட்டுரை, கவிதை என்று எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். சில படைப்புகள் பிரசுரமும் ஆயின.

பின்னர் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தோம். விழிக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மேல்மட்டக்கல்வி, வேலை வாய்ப்பு உதவி எனப் பணியாற்றும் ஒரு தொண்டு நிறுவனம், பல கொடையாளிகளின் பேருதவி யால் எங்கள் பகுதியிலேயே சொந்தக் கட்டடமும் தங்குமிட வசதியுமாக நிலைப்பெற்றது. அங்கு நூல்களை விழியற்றோர் செவியுற்று அறிவு பெறவும், பல மொழி பல்கலைக்கழகங்களின் தேர்வுகளில் பங்கேற்கவுமான பணியில் என்னையும் இணைத்துக் கொண்டேன். பிரபல ஆசிரியர்களின் நூல்கள், பள்ளிகளின் பாட நூல்கள், புதினங்களை ஒலியாக்கம் செய்தல், அவற்றை திருத்தம் செய்தல் போன்ற பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண் டேன். பத்தாண்டுகளுக்கு மேலாக இப்பணியில் உள்ளதால் எனக்கும் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன.

நான் படிக்க விரும்பிய நல்ல நூல்கள் பல இங்கு கிடைத்தன. அங்கு படிக்கும் மக்கள் எல்லோருடனும் இனிமையாக பொழுதுபோக்குவதால் மனமும் லேசாக உள்ளது. பல மாணவ மாணவியர் பட்டப்படிப்பு, முதுநிலை என்று இந்த நூல்களின் வாயிலாக தேர்வடைந்து ‘ஆன்ட்டி, உங்கள் ரெக்கார்டிங்கில் படித்தால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது’ என்று மிகவும் ஒட்டுதலுடனும் பாசத்துடனும் பழகுகையில், வயிற்றுப்பாட்டுக்காக பல ஆண்டுகள் உழைத்ததைவிடவும், இந்த நல்ல உள்ளங்களுக்கு சிறு உதவியாக ஏதோ செய்ய முடிகிறதே என்ற மன நிறைவும் உண்டாகிறது.

ஓய்வுக்குப்பின் மனம் ஓயாது வைத்துக்கொள்ள இறைவன் கொடுத்த இந்த நல்ல வாய்ப்புக்கு என்றும் நன்றி கூறுவேன்.

- டி.அம்புஜவல்லி, பெங்களூரு-102