மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 3 - “நேரம் போகலையே என்பது நரகம்... நேரம் போதலையே என்பதே சொர்க்கம்!”

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
News
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

“வளமான முதுமைப் பருவத்துக்கு எது மிகவும் அவசியம்?

  • போதுமான நிதி வசதியா?

  • நல்ல உடல் நலமா?

  • உண்மையான உறவுகளா?

`முதுமையில் சற்று நிம்மதியாக இருக்க போதுமான நிதி வசதி தான் அவசியம்' என்று அதிகம் பேர் கருத்து தெரிவிப்பார்கள்.

`எவ்வளவு காசு இருந்தும் என்ன பயன், பல நோய்களினால் நான் சிரமப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது' என்பார்கள் சிலர்.

தனிக்குடித்தனம் அல்லது முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள், `எங்களுக்கு உறவுதான் முக்கியம்' என்பார்கள்.

சிலர், தங்களுக்கு எது இல்லையோ அல்லது குறைவோ அதுதான் அவசியம் என் பார்கள்.

சரி... இம்மூன்றில் எது தான் மிகவும் அவசியம்?

உண்மையைச் சொன் னால், வளமான முதுமைக்கு பணம், உடல்நலம், உறவு ஆகிய மூன்றுமே அவசியம். இம்மூன்றையும் கிடைக்கப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என் கிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் வெற்றி பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன். முதுமைப் பருவத்தில் உள்ளவர்களை, வீட்டில் இருப்பவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர், நம்மிடம் உற்சாகமாகப் பேச தொடங்கினார்.

“எல்லாரும் வயசானால் முதுமை கொடுமை என்பார்கள். நான் முதுமையை இனிமை என்றுதான் சொல்வேன். ஆயிரம் பிறை கண்டவர்களை எண்பது வயது நிரம்பியவர்கள் என்பார்கள். நான் அந்த ஆயிரம் பிறைகளைக் கண்டுவிட்டு 2022 ஏப்ரல் 7 அன்று - 88-ம் வயதில் அடியெடுத்து வைத்துவிட்டேன். என்னை பார்ப்பவர்கள் 88 என்றால் நம்ப மாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.

முதுமைக்கு மரியாதை! - 3  - “நேரம் போகலையே என்பது நரகம்... நேரம் போதலையே என்பதே சொர்க்கம்!”

அது வேண்டும், இது வேண்டும் என்று எதையும் எதிர்பார்க்க மாட்டேன். கிடைக்காமல் போனால் மனம் கஷ்டப் படும். முதலில் இருப்பதை வைத்து திருப்தியடைய வேண்டும். ‘ஆசைப்படு, பேராசை படாதே’ என்பார் வேதாத்ரி மகரிஷி. போதும் என்ற மனம் ஒருவருக்கு வந்துவிட்டாலே போதும்.

ரஜினியுடன் 25 படங்கள், கமலுடன் 10 படங்கள், சிவாஜியுடன் 3 படங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் உதவி இயக்குநர் என்று 70 படங்கள்...

65 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்தாலும் எந்த ஒரு செருக்கும் வராமல் பார்த்துக்கொண்டேன். அதற்கு காரணம் என் பெற்றோர் இராம.சுப்பையா - விசாலாட்சி. அடுத்து காரைக்குடியில் நான் படித்த பள்ளி. எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தவை இவை. நான் இந்த வயதிலும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் தன்னம்பிக்கை. நான் சினிமா துறையில் இருந்தாலும் ஒற்றுமையாகவும் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டதால் தான் வெற்றி பெற முடிந்தது. நான் நன்றாக இருக்கிறேன் என்பதைவிட என்னை சார்ந்தவர்கள் நன்றாக இருக் கிறார்கள் என்பதில்தான் எனக்கு திருப்தி.

ரஜினி ஒரு கூட்டத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது... ‘எஸ்பிஎம் சாருக்கு அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு சொத்து இருக்கிறது என்று தெரியாது. ஆனால், அதைப் பற்றி அவர் கவலையும் படமாட்டார். காரணம் அவருக்குள்ள நட்பு வட்டம். அவருடைய நட்புலகம் மிகப் பெரியது. அதுவே அவரை நிலைத்திருக்கச் செய்யும்’ என்றார். அந்த நட்பு வட்டம் இன்றும் தொடர்கிறது. அது முதுமையிலும் எனக்கு இன்பத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்குத் தொழில் எவ்வளவு முக்கியமோ... குடும்பமும் மிக முக்கியம். தொழிலில் வெற்றி அடைந்த நான், என் மனைவி கமலா திடீரென்று இறந்தபோது குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டேன் என்றுதான் நினைத்தேன்” என்றவர் சிறிது நேரம் அமைதியானார்.

அறைக்குள் இருந்து எட்டி பார்த்த குழந்தை ஒன்று, நாம் பேசிக்கொண்டிருந் ததைப் பார்த்து, “தாத்தா ஷூட்டிங்கா... நான் அப்புறம் வர்றேன்” என்று மறைய... “இதோ இந்த உறவுகள்தான் என் முதுமைப் பருவத்தை இனிமையாக்கிக் கொண்டிருக் கின்றன” என்று தொடர்ந்தார்.

“பிசியாக இருந்த நிலையில் என் மகள்களோ, என் மனைவியோ என்ன படிக்கிறார்கள் என்றுகூட தெரியாது. குடும்பச் சுமை அனைத்தையும் தாங்கி யவர் என் மனைவி கமலா. என் வெற்றிக் குப் பின்னால் இருந்தவர் அவர்தான். குடும்பத்துக்கு கணவன் செய்ய வேண்டிய பணிகளையும் சேர்த்துப் பார்த்தவர். அவர் இறந்த பிறகு எனக்கேற்பட்ட வெற்றிடம் அதிகம். அதை நிரப்பியவர்கள்... இதுவரை பணியாற்றிய ஏவி.எம். நிறுவனத் தினர், நண்பர்கள், என் பிள்ளைகள்.

ஏவி.எம். நிறுவனத்தில், ‘நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம். எப்ப வேண்டுமானாலும் போகலாம்’ என்று எனக்கு ஓர் அறையை ஒதுக்கினார்கள். என் பிள்ளைகள் ஒரு மாற்றத்துக்காக குடும்பத்துடன் வெளியூர் செல்வோம் என்று அழைத்துச் சென்றார்கள். கோவைக்கு நான் சென்றபோது ஆழி யாறில் உள்ள வேதாத்ரி மகரிஷியின் இடத்தைப் பார்க்க நேர்ந்தது. அங்கு மன திடத்தை அதிகமாக்கும் பயிற்சியைத் தருவதாகச் சொன்னார்கள். அங்கு தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் சென்னையில் இருக்கும் கிளையின் மூலம் மனப் பயிற்சியுடன் எளிமையான உடற் பயிற்சியையும் கற்றுக்கொண்டேன். எனக்கேற்பட்ட வெற்றிடத்தில் இருந்து வெளியே வந்தேன். இன்றைக்கும் வருடத்தில் பத்து நாள்கள் அங்கு சென்று விடுகிறேன்.

 வி.எஸ். நடராஜன்
வி.எஸ். நடராஜன்

அடுத்து என் நண்பர்கள்... குறிப்பாக கம்பன் கழக விழாக்களை ஆர்.எம்.வீரப்பன் சார் என் மேற்பார்வையில் நடத்திக்கொண்டிருக்கிறார். அடுத்து கண்ணதாசன் அறக்கட்டளையின் நிர்வாகத்தை ஏவி.எம். சரவணன் சார் கவனிக்கச் சொன்னார். உரத்த சிந்தனை என்ற அமைப்பு ஆண்டுதோறும் பாரதி விழாவை நடத்துகிறது. அதில் நிறைய மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவருடனும் கலந்து கொண்டு பேசுவது, பணியாற்றுவது இன்பம்.

இரண்டு மகள்கள், ஒரு மகன் என்றிருந்த என் குடும்பத்தில் இன்று எனக்கு நான்கு கொள்ளுப்பேரன்கள், நான்கு கொள்ளுப் பேத்திகள். 50 பேருக்கு மேல் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கென்று ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்த இணைப்பு மிகவும் உதவியது. நினைத்ததைப் பகிர்ந்து கொள்வோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடுவோம்.

இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து தாத்தா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என்று உறவுகளை அழைக்கும்போது கிடைக்கும் பேறு, என் முதுமைக்குக் கிடைத்த பேறு.

மகள் மீனாவும், மருமகன் நாச்சியப்பனும் உடைகள் வாங்கித் தருவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்றவற்றை கவனித்துக் கொள் கிறார்கள். அடுத்த மகள் விசாலாட்சி, மருமகன் முத்தையா, பேத்தி முத்துலட்சுமி மூன்று பேரும் மருத்துவர்கள்... என் உடல் நிலையைப் பார்த்துக்கொள்கிறார்கள். மகன் அசோக், மருமகள் வசந்தி... உணவு, உறைவிடம் அவர்களுடன்தான்.

யாரும் யாரையும் பாரமாக நினைப்பது கிடையாது. ஒருவனுக்கு நேரம் போகலையே என்பது நரகம். நேரம் போதலையே என்பதே சொர்க்கம். அந்த நிலையில்தான் நான் இன்று முதுமையில் இனிமையை அனுபவிக்கிறேன். முது மைக்கு மரியாதை என்பது இளைஞர்கள், முதுமைப் பருவத்தில் இருப்பவர்களுக்குத் தருவதோ... முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள், இளைஞர்களிடம் கேட்டு வாங்குவதோ இல்லை. இரண்டு கைகள் தட்டினால்தான் ஓசை. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனதிருப்தி நிறைவுடன் வாழ வழி வகுக்கும்” என்றார் நிறைவாக.

- துணை நிற்போம்...

*****

சம்மரை சமாளிக்க...

உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் வறட்சியாவதை `டீஹைட்ரேஷன்’ என்பார்கள். இது வயதானவர்களை எளிதில் பாதிக்கும். இதற்கு உடனடி சிகிச்சை தேவை. முதியவர்கள் டீஹைட்ரேஷன் பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள்...

1. வெயில் உச்சத்திலிருக்கும் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. நீர்ச்சத்தைப் பெற தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் அவற்றின் சாறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. அன்றாட உணவை ஐந்து வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடலாம்.

4. நீரிழிவு, ரத்த அழுத்தம், புராஸ்டேட் கோளாறு இருப்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறை வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தப் பிரச்னைகள் உள்ளவர்கள் எந்தச் சூழலிலும் மருந்து, மாத்திரைகளைத் தவிர்க்கக் கூடாது.

5. அதிக வியர்வை வெளியேறும் எந்த வேலை யையும் செய்ய வேண்டாம். காற்றோட்டமாக உள்ள இடங்களில் வசிப்பது அவசியம்.

14567-இந்த நம்பரை மறக்காதீங்க!

14567 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு மூத்த குடிமக்களுக்கான கீழ்க்காணும் சேவைகளைப் பெறலாம்.

  • மருத்துவர்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் செயல்பாட்டு மையங்கள் பற்றிய தகவல்கள்.

  • மூத்தோருக்கான பராமரிப்புச் சட்டம் தொடர்பான, ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள்.

  • வாழ்க்கையைப் பற்றிய கவலை, ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான ஆதரவு தகவல்கள்.

  • முதியோர்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பது மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியவர்களை மீட்பது.

இந்தச் சேவை வாரத்தின் ஏழு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கிறது.

அவசர மருத்துவ உதவிக்கு...

உடல்நலம் திடீரென்று பாதிக்கப்படும் முதுமைப் பருவத்தில் உள்ளவர்கள் 99949 02173 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டால் உடனடியாக அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப் படுகின்றன. தேவைப்பட்டால், பாதிக்கப் பட்டவர்களின் இல்லத்துக்கு மருத்துவரே நேரில் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களால் நிறுவப்பட்ட முதியோர் நல அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இந்தச் சேவை தற்போது சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் தமிழகம் முழுக்க கிடைக்கும். அதற்கான பணிகள் நடக்கின்றன.