Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 6 - “அன்று கண்ட மேனி... அழியாம இருக்கேய்யானு சொல்லுவாக!” - சாலமன் பாப்பையா

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமைக்கு மரியாதை! - 6 - “அன்று கண்ட மேனி... அழியாம இருக்கேய்யானு சொல்லுவாக!” - சாலமன் பாப்பையா

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

Published:Updated:
- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமை என்பது உடலின் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவின் வளர்ச்சி, அனுபவத்தின் வளர்ச்சி, பொறுப்புணர்வு ஆகியவை அடங்கியதே முதுமைப் பருவம். பல ஆண்டுகளாக குடும்பத்துக் காக உழைத்து எல்லோரையும் கரை சேர்த்துவிட்டு இளைப்பாறும் இனிய காலம் அது. தனிமையில் இனிமை காணவும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், பல இடங்களுக்குப் போய் வரவும், கிடைக்கப் பெற்ற பொன்னான பருவம். அப்படி வாழ்ந்துகொண்டிருப் பவர்களில் ஒருவர் சாலமன் பாப்பையா. படித்தவர்கள் மட்டுமல்ல, பாமரர்களும் ரசித்துக் கேட்கும் வகையில் பட்டிமன்றங் களை தமிழின் தரம் குறையாமல் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். மேடைகள் மூலம் கிராமங்களை அளந்தவர், தொலைக்காட்சி மூலம் உலகத் தமிழர்கள் வரை சென்றவர்.மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் 34 வருடங்கள் பேராசிரியராகப் பணிபு ரிந்த போதும், ஓய்வுபெற்ற பின்பும் 7,000 பட்டிமன்றங்கள் வரை நடத்தி சாதனை புரிந்திருப்பவர். தமிழ் பணிக்கு பல விருதுகள் பெற்றிருந்தாலும் மகுடமாக ‘பத்ம’யால் கௌரவிக்கப்பட்டவர். 85 வயதைக் கடந்துவிட்டபோதிலும் இந் நொடிவரை தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்துகொண்டு துருதுருவென்றிருக் கிறார். மதுரையில் உள்ள தன் வீட்டில், தன் ஓய்வுக்காலத்தை, ஒரு மழை மாலை தேநீர்போல ரசித்து ருசித்துப் பருகிக் கொண்டிருப்பவரை சந்தித்தோம்.

‘’வாங்கய்யா வாங்க...’’ என்று வரவேற்கும்போதே, அந்தக் குரலும் தமிழும் நமக்கும் அந்த உற்சாகத்தை கடத்துகிறது. ‘`என்னையப் பாக்குற சிலர், முதுமையில துவண்டிருப்பீகனு நெனச்சா சிரிச்சமேனிக்கா இருக்கீகளே’னு ஆச்சர் யமா கேப்பாக. முதுமைனு ஒண்ணை மனசுல நினைச்சா, அனுமதிச்சாதானே அது முகத்துல பிரதிபலிக்கும்’’ என்கிறார் பெரிய சிரிப்புடன்.

‘`நான் ஆசிரியர். அதனால, பணி முடிஞ்ச பிறகும், இப்போ வரைக்கும் படிச்சுக்கிட்டேதான் இருக்கேன். விடிஞ் சிருச்சுன்னா படிப்புத்தேன். அப்புறம் எழுதுவேன். காலை, மாலை செய்தித்தாள், தொலைக்காட்சினு பொழுது போகும். கூட்டங்கள் இருந்தா போவேன். அங்க கூடியிருக்குற மனுசங்களை எல்லாம் பாக்கும்போது சந்தோசமா இருக்கும். இப்போ கொரோனா சூழல்ல அதிகம் வெளிய போறதில்ல. தெனமும் கை, கால்களை நீட்டி சின்னச் சின்ன பயிற்சிகள் செய்யுறேன். பெரும்பாலும் சைவ உணவுதேன். வாரத்துக்கு ஒரு தடவை மட்டும் அசைவ சூப். மனைவி, புள்ளைங்க, பேரப்புள்ளைகளோட, நோய் நொடியில்லாம போகுது காலம். அக்கம்பக்கத்துல இருக்குற புள்ளைங்க எல்லாம், வயசானவங்க ரெண்டு பேரு இங்க இருக்காகளேனு அப்பப்போ என்ன, ஏது வேணும்னு விசாரிச்சு உதவு செஞ்சுட்டுப் போகுதுக. சில நண்பர்களும், இளம் பிள்ளைகளும் வந்து போவாக. வேற என்ன வேணும்?’’ என்று தன் தினசரியை சொன்னவர், முதல் நாள் பள்ளிக்குக் கிளம்பும் குழந்தையின் உற்சாகத்துடன், தான் முதுமைக்குத் தயாரான ஆரம்பக்காலம் பற்றி பகிர்ந்தார்.

முதுமைக்கு மரியாதை! - 6 - “அன்று கண்ட மேனி... அழியாம இருக்கேய்யானு சொல்லுவாக!” - சாலமன் பாப்பையா

‘`நான் கல்லூரிப்பணியில இருந்து ஓய்வு பெற்றப்போ, ஓய்வூதிய விண்ணப்பத்துக்கு என் மனைவிகூட சேர்ந்து படம் எடுத்துக் கொடுக்கச் சொன்னாக. அந்தப் படத்தை பார்த்த எங்க கல்லூரி முதல்வர், ‘என்னய்யா இந்த போட்டோவுக்கும் சிரிக்கிற, வருத்தம் இல்லையா?’னு கேட்டார். ‘இதுல வருத்தப்பட என்ன இருக்குது? வாலிபம் நான் வான்னு கூப்பிட்டா வந்துச்சு? அது தானா வந் துச்சு. இளமை என்னைக் கேக்காமத்தான் என்கூட இருந்துச்சு. அந்தக் காலகட்டத்துல நான் எவ்வளவு அனுபவிச்சிருக்கேன்? அதுவும் இந்தக் கல்லூரியில 34 வருஷம் எவ்வளவு உற்சாகமா வேலைபார்த்திருக் கேன்? எந்த உற்சாகத்தோட கல்லூரிக்குள்ள வந்தேனோ, அதே உற்சாகத்தோட வெளி யில போகணும். அப்பத்தான் வாழ்க் கையை முழுமையா வாழ்ந்திருக்கேன்னு அர்த்தம்’னு சொன்னேன்.

கல்லூரியை விட்டு வெளியேறினப்போ, இந்த வாழ்க்கையை நல்லா வாழ்ந்திருக் கோம்னு ஒரு நிறைவு இருந்துச்சு. நல்ல குடும்பம் அமைஞ்சிருக்கு. நல்ல நட்பு கிடைச்சிருக்கு. மக்கள் மத்தியில் நல்லதொரு மரியாதை கிடைச்சிருக்கு. இதைவிட வேற என்ன வேணும்னு அந்த நிறைவை உணர்ந்தப்போ, ‘இது போதும் இந்த ஆயுசுக்கு’னு தோணிடுச்சு. எனக்கு, நான் ரொம்ப தகுதியான ஆளு, ஆனாலும் எனக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கலனு எல்லாம் எந்த எண்ணமும் இல்ல. மாறா, நம்ம தகுதிக்கு மேல வாழ்க்கை யில எல்லாம் கிடைச்சிருக்குனு தோணும். அதனாலதேன் முதுமையில இம்புட்டு நிம்மதி’’ என்றவர்,

‘`தொல்காப்பியர் என்ன சொல்றார் தெரியுமா?

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே


அதாவது, கிழவனும் கிழத்தியும் அவுகளோட காமம் நிறைவடைஞ்ச இறுதி நிலையை ஏற்றுக்கொள்ளுற காலத்துல, இது வரை அவுக செஞ்ச செயல்கள்ல எல்லாம் சிறந்ததை இளையவுகளுக்குச் சொல்லிக் கொடுக்குறதுதான், அவுக இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கான பயன்.

பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர்ங் கிறதை எல்லாம் விட்டுடுங்க. வாழ்க்கையில நல்லது, கெட்டது நெறைய பார்த்த மூத்தவனா சொல்றேன் கேளுங்க. உங்களுக்கு என்ன வயசுனாலும் சரிதேன்... மனசுக்குள்ள ஆசைகளப் போட்டு அங்கலாய்க்காம, அது வேணும், இது வேணும்னு எதிர்பார்க்காம, ஐயோ எதுவும் கிடைக்கலயேனு ஏங்காம, இருக்குறதுல சந்தோஷப்பட்டு வாழுங்க. நாளைக்கு நடக்கப்போறதை நினைச்சு நிகழ் காலத்தை வாழாம விட்டவுக இங்க பல பேரு.

60 வயசுக்கு மேல வீடு, காரு, பேங்க்ல காசுனு இருக்கலாம். ஆனா, 30, 40, 50 வயசுல வாழ வேண்டிய வாழ்க்கை கரைஞ்சொழுகிப் போயிருக்கும். அதனால, 30 வயசுகள்ல அசுர உழைப்பு, 40 வயசுல பயணங்கள்னு அந்தந்த வயசுக்கான சந்தோஷங்களை வாழ்ந்து முடிச்சுட்டு 60-ல காலடி எடுத்து வையுங்கப்பு. ஒரு பூ பிஞ்சாகி, காயாகி, கனியும்போது... இனிக்கணும். அப்படிப் பார்த்தா, முதுமைதேன் இனிப்பு’’ என்கிறார் வாஞ்சையுடன்.

‘`நான் எங்க வீட்டுல ஒன்பதாவது பிள்ளைங்கிறதால, எங்க தகப்பானருக்கு நான் பொறந்தப்போ 45 வயசுலயிருந்து 50 வயசுவரை இருந்திருக்கலாம். நான் சின்னப்புள்ளையா இருந்தப்போவே நரைச்ச முடியோட இருந்த எங்கப்பாவை பார்க்கும்போது, தாத்தா மாதிரி இருக்கா ரேனு தோணும். அம்மாகூட என்னை அடிச்சிருக்காக, அப்பா தொட்டதில்ல. யார்கூடவும் தேவையில்லாத பேச்சு பேசாம, குளிக்கிறது, சாப்பிடுறதுனு எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கை கடைப் பிடிச்ச, கடைசி காலம் வரை படிச்சுக் கிட்டிருந்த எங்கப்பாவை மாதிரிதான் நானும் வாழப் பழகிக்கிட்டேன். இப்புடி, பெற்றோரா இருக்கும்போது புள்ளை களுக்கு நல்லதை விதைச்சுட்டா, தாத்தா, பாட்டி ஆகும்போது அந்த விதை நல்லா வளர்றதை பார்த்துட்டு நிம்மதியா இருக்கலாம்.

நான் வாழ்க்கையில கடைப்பிடிச்ச இன்னொரு முக்கியமான விசயம், நம்மள காரணமே இல்லாம யாராவது பகைக் கிறாங்களா அதையே நினைச்சுக்கிட்டு இருக்கக் கூடாது; சிரிச்சுட்டுக் கடந்து போயிடணும். நம்மள பகைக்கிறதுல அவுகளுக்கு ஏதோவொரு சந்தோசம் இருக்கலாம். பதிலுக்கு நாமளும் அவுகள பகைக்கிறதால நமக்கு கிடைக்குறதெல் லாம் மன உளைச்சலாதான் இருக்கும். எவரோடும் பகையில்ல, எல்லாரோடயும் நட்பு உண்டுனு போயிடணும். குறிப்பா முதுமையில, பழைய பஞ்சாயத்து, பகையை எல்லாம் மனசுல இருந்து கழுவிவிட்டுட்டு சாந்தியை மட்டும்தான் தேடணும்.

சாந்திக்கு எத்தனையோ வழி. சாமி கிட்டயும் போகலாம். சர்ச்சு, கோயில்னு நான் எல்லா சாமியையும் கும்பிடுவேன். நாலு பேரு கூடிக்கும்பிடுற கோயில் எதுவா இருந்தாலும், அது எனக்கும் சாமிதேன். கோயில்ல, ‘நல்ல போராட் டத்தை போராடினேன்’னு சொல்லுவாக.

அப்புடி நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக் கேன். இதுல நான் நன்றி சொல்லணும்னு நினைக்கிறது, எனக்குக் கெடைச்ச நல்ல நண்பர்களுக்கும், என்னை ஏத்துக்கிட்ட மக்களுக்கும். என்னைப் பார்க்குறவங்க சிலர், ‘அன்று கண்ட மேனி அழியாம இருக்கிறான்யா இந்த ஆளு’னு சொல்லு வாக. காரணம்... மனசுல எந்தக் கரைச்சலும் இல்ல’’ எனும்போது, ஆசை, ஏக்கம், புலம்பல், வருத்தம் எனப் பிறவி யின் கனத்தையெல்லாம் கழற்றி வீசியவ ராய் ஒரு பஞ்சைபோல மிதக்கிறார் பாப்பையா.

- துணை நிற்போம்...

முதுமைக்கு மரியாதை! - 6 - “அன்று கண்ட மேனி... அழியாம இருக்கேய்யானு சொல்லுவாக!” - சாலமன் பாப்பையா

பாதுகாப்பை பலப்படுத்துங்கள்!

சமீபத்தில் சென்னையில் நடந்த மூத்த தம்பதியரின் கொலை... பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், வீட்டில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து காவல் துறையினரிடம் பேசினோம். அவர்கள் அளித்த முக்கிய முன்னெச்செரிக்கை தகவல்கள்...

மூத்த குடிமக்கள் தனியே வசிக்கும் வீடுகள், அப்பார்ட்மென்ட்கள், ஃபிளாட்டுகளில் பாதுகாப்புக் குத் தேவையான பாதுகாப்பு கேமரா, அலாரம் போன்ற சில எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பொருத்துதல் வேண்டும்.

வீட்டுக்கு வரும் அந்நிய நபர்களை ஜன்னல் வழியாகவோ, கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு நுண்துளை கேமரா வழியாகவோ அடை யாளங்கள் பார்த்த பின்பே கதவைத் திறக்க வேண்டும்.

முன் விவரங்கள் தெரியாத நபர்களை வீடுகளில் குடியிருக்க அனுமதிக்கக் கூடாது.

வீட்டுக்கு வரும் அந்நிய நபர்கள் கண் பார்வையில் படும்படியாக வீட்டின் கார் சாவி, வீட்டு சாவி ஆகியவற்றை வைத்தல் கூடாது. வீட்டின் சாவியை ஜன்னல் ஓரம், கதவின் மேல் வைத்து விட்டு வெளியில் செல்லக் கூடாது.

வீட்டுக்கு வேலை செய்ய வரும் பிளம்பர், எலெக்ட்ரீஷியன் பற்றிய விவரங்கள், போட்டோக்கள், முகவரி மற்றும் இதர விவரங்களை அறிந்த பின்பே அனுமதிக்க வேண்டும்.

வீட்டுக்கு வெளியே விற்பனைக்காக வரும் நபர் களை வீட்டின் உள்ளே அனுமதித்தல் கூடாது.

சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வீட்டுக்கு / ஃபிளாட்டுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தினால் அது பற்றி உடனடியாகப் பக்கத்து வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கோ, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தெரியப்படுத்துதல் வேண்டும்.

வீட்டுக்கு இரும்பினாலான கிரில் கதவுகளை அமைத்தல் வேண்டும். பகுதியாக கதவுகள் திறக்கும் வகையில் இரும்பு செயின் அமைத்தல் வேண்டும்.

விலையுயர்ந்த நகைகள், பணம் ஆகியவற்றை அதிக அளவில் வீட்டில் வைத்திருத்தல் கூடாது. பாதுகாப்புப் பெட்டக வசதி செய்து கொள்ளுதல் வேண்டும்.

அந்நிய நபர்களை அதிகமாக நம்புதல் கூடாது. அடையாளம் தெரியாத நபர்களுக்காகக் கதவைத் திறந்து பதில் கூறக் கூடாது.

உங்களது வீட்டில் வேலை செய்யும் நபர்களுக்கு தெரிந்தவர்களை வீட்டில் அனுமதித்தல் கூடாது.

வீட்டில் பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் அல்லது ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற போர்டை மட்டுமாவது வீட்டின் கேட்டில் மாட்டி வைக்கலாம்.

வீட்டின் முன்கதவில் `மேஜிக் கண்’ எனப்படும் லென்ஸ் கண்ணாடிகளை பொருத்துதல் வேண்டும்.

வீட்டில் உள்ள அதிக அளவிலான பணம், நகை ஆகியவற்றைப் பற்றி அந்நிய நபர்களிடம் பேசுதல் கூடாது. மேலும் அடுத்தவர்கள் பார்வையில் படும்படியாக வைத்தல் கூடாது.

வீட்டில் குடியிருப்பவர்களின் முன் விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்.

வீட்டில் வேலை பார்க்கும் நபர்களின் முன்பாக வீட்டில் உள்ள பணம் மற்றும் நகை விவரங்களைப் பேசுதல் கூடாது.

வாடகைக்கு கார், பொருள்கள் ஆகியவை எடுக்கும்போது அவர்களைப் பற்றிய முன் விவரங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

வேலைக்கு ஆட்களை அமர்த்தும்போது அவர்களைப் பற்றிய விவரங்கள், போட்டோக்கள், முகவரி மற்றும் இதர விவரங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

நன்கு பிரகாசமான வெளிச்சம் தரும் பல்புகளை வீட்டின் முன்புறம் பொருத்துங்கள்.

தங்கள் வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் போன் நம்பர் அறிந்திருத்தல் மிகவும் அவசியம்.

சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் அவர்களது நடவடிக்கை குறித்து அறிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

மூத்த குடிமக்களின் அவசர உதவிக்கு சென்னை மாநகரக் காவல் போன்: 1090. முக்கிய தொடர்புக்கு காவல் கட்டுப்பாட்டு அறை: 100. தீயணைப்புத் துறை: 101 அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு: 108. மேற்படி தொலைபேசி எண்களைத் தங்களின் மொபைல்போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது.

முதியோர்மீதான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

ஐக்கிய நாடுகள் சபை, முதியோர்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை முதியோர்மீதான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளாக 2006-ம் ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது.

‘வயதானவர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது கற்பனை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, முதியோர்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமை பரவலான ஒரு பிரச்னையாக உள்ளது. முதியோர்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் அவர்களை நிதிரீதியாகச் சுரண்டுவதை நோக்கமாகக் கொண்டவை. முதியவர்களைக் குறிவைக்கும் மோசடிகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்படுகிறோம்.

சில இடங்களில் சத்தான உணவு, தகுந்த மருந்து, பாதுகாப்பு அல்லது சுகாதார உதவி போன்ற அடிப்படைத் தேவைகளை முதியோருக்கு வழங்குவதில்லை. அப்படிப்பட்ட தகவல்கள் உங்களுக்குத் தெரியவந்தால் நிச்சயம் அதை பொதுவெளிக்குக் கொண்டு வாருங்கள். அறிகுறிகளைக் கண்டறிந்தால், அவற்றை ஆவணப்படுத்துங்கள். அவர்கள் தாக்கப்பட்ட காயங்கள் அல்லது காயங்களின் படங்களை எடுக்கவும். மேலும், சந்தேகத்துக்கிடமான நடத்தை அல்லது சூழ்நிலைகளைப் பதிவு செய்யவும். காவல்துறையினரிடம் தொடர்பு கொள்ளவும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவற்றை வெளியே கொண்டுவரலாம்’ என்கிறது முதியோர்மீதான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தின் இந்த ஆண்டுக்கான ஐ.நா-வின் செய்தி.

அனுபவங்களைப் பகிரலாமே!

சாலமன் பாப்பையாவின் கூற்றுப்படியும்... உடலின் வளர்ச்சி, அறிவின் வளர்ச்சி, அனுபவத்தின் வளர்ச்சி, பொறுப்புணர்வு ஆகியவற்றில்தான் இளமைக்கும் முதுமைக்கும் வித்தியாசம். இதை யெல்லாம் உணர்ந்துவிட்டவர்கள், நிச்சயமாக முதுமைப் பருவம் என்பதை சுமையாகவே நினைக்க மாட்டார்கள். அப்படி முதுமையையும் மனதார ஏற்றுக் கொண்டு நடை போடுபவர்களில் நீங்களும் ஒருவ ரென்றால், உங்களுடைய அனுபவங்கள் மற்றவர் களுக்கும் பயன்படட்டுமே!

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் இங்கே பகிரலாம். பிரசுரமாகும் ஒவ்வொன்றுக்கும் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

முதுமைக்கு மரியாதை, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism