Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 7 - அவள் விகடனின் ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சியில் ‘ஹேப்பி சீனியர்ஸ்’!

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமைக்கு மரியாதை! - 7 - அவள் விகடனின் ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சியில் ‘ஹேப்பி சீனியர்ஸ்’!

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

Published:Updated:
முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

முதியோரை குழந்தைகளுக்கு நிகராகச் சொல்வார்கள். குழந்தைப் பருவம் போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் முதியோருக்கான அன்பும் அக்கறையும் முழுமையாகக் கிடைக்கிறதா என்றால், இல்லை. இதுபோன்ற ஒரு காலச் சூழலில், முதியோர்களுக்கான உணர்வு, உணவு, உதவி, உடல்நலம், மனநலம், பாதுகாப்பு, பரிவு என அத்தனையையும் பேசும் பகுதியாக... அவர்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்கும் வழிகாட்டியாக... ‘முதுமைக்கு மரியாதை’ தொடர் அவள் விகடன் இதழில் ஆரம்பமானது.

தொடர் ஆரம்பித்த இரண்டு மாதங் களில், முதுமைக்கு மேலும் மரியாதை தரும் வகையில் அவள் விகடன் – தமிழக காவல்துறையுடன் இணைந்து நடத்திய `ஹலோ சீனியர்ஸ்...’ நிகழ்ச்சி, மே 28 சனிக்கிழமையன்று வெற்றிகரமாக சென்னையில் அரங்கேறியது.

`உங்கள் பாதுகாப்பு… உங்கள் நலம்… உங்கள் பணம்… ஆலோசிக்கலாம், அலர்ட் ஆகலாம் வாங்க’ என்று நாம் அழைத்திருந்த நிகழ்ச்சியின் நோக்கம்… முதியவர்களின் பாதுகாப்பு... உடல் நலம்... மற்றும் பணநலம். நிகழ்ச்சி ஒத்துழைப்பு... `The Chennai Homes - Premium Retirement Community'.

தனியாக இருக்கும் முதியவர்களின் சொத்துகள் மற்றும் பணத்தைக் குறி வைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன் சென்னையில் முதிய தம்பதியர், அவர்களுடைய டிரைவராலேயே கொடூர மாகக் கொல்லப்பட்டதை நாம் மறந் திருக்க முடியாது. இத்தகைய சூழலில்தான், முதியவர்களுக்காக இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் ரவி ஐ.பி.எஸ்ஸை தொடர்புகொண்டோம்.

முதுமைக்கு மரியாதை! - 7 - அவள் விகடனின் ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சியில் ‘ஹேப்பி சீனியர்ஸ்’!

அவள் விகடனின் பொறுப்பை உணர்ந்து கொண்டவராக, காவல்துறையை யும் இந்த முயற்சியில் சேர்த்துக்கொள்ள உதவினார். இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்த குமாரி ஆகியோர் கைகோத்தனர். சிறப்புரையாற்ற முதியோர் நல மருத்துவர் பத்ம வி.எஸ்.நடராஜன், நிதி ஆலோசகர் டி.இ.திருவேங்கடம் இசைந்தனர். சென்னை, குரோம்பேட்டை, வசந்தம் திருமண மாளிகை நிறுவனத்தினர் நம் நிகழ்ச்சிக்கு இலவசமாக அரங்கை அளித் தார்கள். அரங்கை நிறைத்திருந்த கூட்டம் முதல் வெற்றியாக நமக்கு உற்சாகம் கொடுத்தது.

`நான் நல்லாதானே இருக்கேன்’ என்று நினைக்காதீர்கள்!

இன்றைய முதியோர், நாளைய முதியோர் என்று வயது வித்தியாசமின்றி அமர்ந்திருந்தவர்களுக்கு இடையில், ‘ஹெல்த் இஸ் வெல்த்’ தலைப்பில் தன் உரையைத் தொடங்கினார் முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்... “முதுமை - இளமை... இந்த மூன்று எழுத்துகளுக்கு இடையில் நடக்கும் வாழ்க்கையில் மடுவுக் கும் மலைக்கும் உள்ள வித்தியாசத்தை அனுபவிக்கிறோம். எல்லா வய திலும் சந்தோஷமாக வாழ முடியும். அதற்குத் தேவை ஆரோக்கியமான வாழ்க்கை. வயது என்பது உடல் அளவில் இருக்கலாமே தவிர, மனதுக்குள் இருக்கக் கூடாது. முதுமைப் பருவத்தில் அடியெடுத்து வைப்பவர்களால் தவிர்க்க முடியா தது, நோய். பரம்பரையாக வரும் நோய்களை முன்கூட்டியே கணித்து அலர்ட் ஆக இருந்து சிகிச்சையை எடுத்துக் கொண்டால் போதும். தற்போதைய நவீன மருத்துவ உலகில், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் நிலை பற்றியும் அறியலாம். முதுமையில் மறைந்திருந்து தாக்கும், அறிகுறி இல்லாமல் தாக்கும் நோய்களை அலட்சியம் செய்து, ‘நான் நல்லாதானே இருக்கேன். எனக்கு எதற்கு சிகிச்சை?’ என்று ஒருபோதும் நினைக் காதீர்கள்’’ என சூப்பர் எனர்ஜி கொடுத் தார் 80 வயதைக் கடந்த இளைஞர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.

முதுமைக்கு மரியாதை! - 7 - அவள் விகடனின் ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சியில் ‘ஹேப்பி சீனியர்ஸ்’!

பிள்ளைகளின் எதிர்காலமா, உங்கள் நிகழ் காலமா?

இன்றைய வாழ்வியல் முறையில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பணம் பிரதான விஷயமாக இருக்கிறது என்பதை மையப்படுத்தி ‘முதியோரும் முதலீடும்’ பற்றி தன் உரையைத் தொடங்கினார் நிதி ஆலோசகர் டி.இ.திருவேங்கடம்... ``அனைத்து வயதில் உள்ளவர்கள் வாழ்வதற்கும் பணம் வேண்டும். அந்த வகையில் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பணத்தை சரியான வழியில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல்... சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். 20 வருடங்களுக்கு முன் நடந்த தி.நகர் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஓய்வு பெற்ற போது வந்த பணம், கையிலிருந்த காசு என மொத்தத்தையும் மோசடி முதலீட்டு நிறுவனங்களின் கவர்ச்சி விளம்பரங்களை நம்பிக் கொடுத்துவிட்டு... அதன்பிறகு கையேந்தும் நிலைக்குப் பலர் ஆளானார்கள். இந்த ஏமாற்றுக்கதை இன்றும் தொடரத்தான் செய்கிறது.

பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் உங்களுக்கான செலவுகளுக்கு பணம் அவசியம். அதற்கான உங்கள் பணத்தைச் சரியான முறையில், தகுதியான இடத்தில் முதலீடு செய்யுங்கள். பிள்ளை களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் நீங்கள் சந்தோஷமாக வாழுங்கள்” என்றார்.

 வி.எஸ்.நடராஜன்
வி.எஸ்.நடராஜன்

அனுபவத்தால் நல்வழிப்படுத்துங்கள்!

நிகழ்ச்சி நடந்த அன்று காலை சென்னை, குரோம்பேட்டையை அடுத்த பொழிச்சலூரில் ஐடி ஊழியர் ஒருவர் மனைவி, மகன், மகளை ரம்பத்தால் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந் திருந்திருந்தது. தற்கொலைக்கு முன், ‘இந்த முடிவுக்கு யாரும் வற்புறுத்தவில்லை; நாங்களே எடுத்த முடிவு’ என ஆங்கிலத்தில் கடிதம் எழுதி சுவரில் ஒட்டப் பட்டிருந்தது. கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவிட்ட நிலையில், மூத்தோர்களின் அறிவுரை இல்லாமல் சிதறும் குடும்பங்கள் பற்றி அந்தக் குடும்பத்தின் துயரமான முடிவு நினைக்க வைத்தது.

இந்தச் சம்பவத்தையும் சுட்டிக்காட்டி பேசிய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம்.ரவி ஐபிஎஸ், “இன்று காலை நடந்த சம்பவம் மட்டுமில்லை; சமீபத்தில் மயிலாப்பூரில் நடந்த சம்பவ மும் பணத்தை மையமாக வைத்து நடந்த அசம்பாவிதங்கள்தான். நீங்கள் அனைவரும் பல சுக - துக்கங்களைக் கடந்து வந்திருப்பீர்கள். உங்கள் அனுபவங் களை இளைஞர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களை நல்வழிப்படுத்துங்கள். குழந்தைகள் ஏன் மகிழ்ச்சியாக இருக் கிறார்கள்? அவர்களுக்கு கடந்த காலம் பற்றி தெரியாது; எதிர்காலம் குறித்து கவலையில்லை. அந்த மனநிலையுடன் வாழுங்கள். வயோதிகத்தால் உடல் தளர லாம்... உள்ளம் தளரக்கூடாது. மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் உடல் அதுவாகவே நலமாகிவிடும். இந்த அரங்கில் நுழைந்தபோது சீனியர் சிட்டிசன்களை பார்த்ததுமே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை உணர்ந்தேன். அதுவே இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி” என்றவர், தாம்பரம் நகரவாசி களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

 டி.இ.திருவேங்கடம்
டி.இ.திருவேங்கடம்

இனி நீங்களும் வழிகாட்டலாம்!

இதற்கிடையில் விருந்தினர்களின் இருக்கையைத் தேடி ஸ்நாக்ஸ் வர, மேடையில் அடுத்து கலக்கினார் திரைப்பட நடிகர் தாமு. வந்திருந்த அனைவரையும் தன் உரையின் போது பங்கேற்கும் விதமாக அழைத்து, தாமு எழுப்பிய ரயில் இன்ஜின் ஒலி சிறப்பு. ``எனக்கு வயது 57; உள்ளத்தால் 37 வய தாகவே உணர்கிறேன். அதற்கு மிமிக்ரி உதவுகிறது. அதற்காக என் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்து கிறேன். அது உங்களாலும் முடியும். மற்றவர்களை சிரிக்க வைப்பதன் மூலம் நாமும் இளமையாக வாழலாம். நாம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ப தற்காக ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறோம். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ப தற்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுகிறோம். அப்படி தனியாக வாழ்கிறவர்கள், தன்னால் தனித்து இருக்க முடியும் என்று நினைத்து, பெற்றோரை புறம்தள்ளுகின்றனர். நம்முடைய ஆசைகளுக்காகப் பிள்ளை களின் அன்பை இழந்துவிடுகிறோம். உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு, குழப்பங்களுக்கு எல்லாம் இந்த `ஹலோ சீனியர்ஸ்’ விடை தரும். இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பலருக்கும் வழிகாட்டலாம்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அமர்ந்தார்.

 எம்.ரவி ஐபிஎஸ்
எம்.ரவி ஐபிஎஸ்
 தாமு
தாமு
 மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

`நடக்க முடியாது என்றார்கள்..'!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன் உரையில், ``2004-ல் ஒரு விபத்தில் காரில் இருந்து தூக்கியெறியப்பட்டேன். முன் இருக்கை யில் அமர்ந்திருந்த என் மண்டை இரண் டாகப் பிளந்திருந்தது. பின் இருக்கையில் இருந்த நண்பர் இறந்து கிடந்தார். என் வலது கால் அசைக்க முடியாத அளவுக்கு கூழாகியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இனி நான் நடப்பது சந்தேகம்தான் என்றார்கள். சம்மணமிட்டு உட்கார முடியாது என்றார்கள். ஜாக் கிரதையாக இருக்கச் சொன்னார்கள். விடாமுயற்சியால் இரண்டே வாரங்களில் நடக்க ஆரம்பித்தேன். உட்கார முடியாது என்று சொன்ன டாக்டர் எதிரில் 25 நாள்களில் பத்மாசனம் போட்டு அமர்ந்தேன்.

ஏற்கெனவே நடைப்பயிற்சியில் இருந்த எனக்கு, இன்னும் அதிகமாக நடக்க வேண்டும் என்று தோன்றியது. மாரத் தானில் பங்கேற்றேன். இந்தியாவில் 36 மாநிலங்களில் 22 மாநிலங் களின் மாரத்தான்களில் என் கால் தடங்கள் பதிந்துள்ளன. மீதியுள்ள 14 மாரத்தான் களிலும் கலந்துகொள்வேன் என்கிற மன உறுதி என்னிடம் உள்ளது. உலக அளவில் 12 மாரத்தான்களில் கலந்து கொண்டிருக் கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களில் வெற்றியடைந்து பாராட்டு கள் பெற்றாலும், இந்த மாரத்தான் ஓட்டங்களை என் முகநூலில் பார்த்து, ‘சார்... உங்களைப் பார்த்து இப்ப நாங்களும் நடக்க ஆரம்பிச்சுட்டோம்’ என்று யாராவது சொல்லும்போது நான் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. இது எல்லோராலும் முடியும்.

இந்த விழாவில், முதியோர்களுக்கு என்று பிரத்யேகமாக திறக்கப்பட இருக்கும் மருத்துவமனை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். அதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று முத்தாய்ப்புடன் முடித்தார்.

குறித்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு முடிந்தது நிகழ்ச்சி. நம் விருந்தினர்கள் ஹேப்பி சீனியர்களாக விடைபெற்றனர்.

- துணை நிற்போம்...

 தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்

வெறும் காலுடன் வயல் வரப்பில்!

“கூட்டுக் குடும்பங்களின் அருமையை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும்’’ என்று சிறப்புரையாற்றிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “வெளிநாட்டிலிருந்து கிராமத்துக்கு வந்திருந்த பேரன் தினமும் காலை யில் எழுந்ததும் கண்ணுக்கு ஐ டிராப் விட்டுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பாட்டி, ‘எதுக்குடா இது’ என்று கேட்டார். ‘கண்ணுல எரிச்சல்’ என்றான். ‘நாளைக்குக் காலையிலே நம்ம வயல் வரப்புல பனி விழுந்திருக்கும், செருப்பு இல்லாம அதுல நட’ என்று சொன்னார். நடந்தான். நான்கு நாள்களில் கண் எரிச்சல் காணாமல் போனது. கூட்டுக் குடும்பங்களில் யாராவது ஒருவருக்கு பிரச்னை என்றால் முதலில் பதறிப்போவது மூத்தோர்தான். ஆனால், இன்று கல்யாணமானதும் தனியாகப் போய்விட நினைக்கிறார்கள். அது அவர் களுக்குத்தான் நஷ்டமே தவிர, உங்களுக்கில்லை. நீங்கள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழுங்கள். என்றாவது ஒருநாள் அவர்கள் உங்களைத்தான் தேடி வருவார்கள்” என்றார்.

 க.வசந்தகுமாரி
க.வசந்தகுமாரி

மகனைப் பார்த்ததும் ஓடிய அம்மா!

தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி பேசும்போது, “வார்டு எலெக்‌ஷனுக்காக ஓட்டு கேட்கப்போனபோது ஒரு பாட்டியைச் சந்தித்தேன். அந்தப் பாட்டி, ‘என் பையன் குடும்பத்தோட இருக்க முடியலை. என்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துல சேர்த்துடு’ என கேட்டார். நான் மேயரான பிறகு அவரை ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த நிர்வாகி. ‘இவங்களுக்குக் குடும்பம் இருக்கறதாலே நேரடியா சேர்த்துக்க முடியாது. பையன்கிட்ட ஒப்புதல் வாங்கணும்’ என்று சொல்லி அந்தப் பாட்டியின் மகனை போன் செய்து வரவழைத்தார். பையனைப் பார்த்ததும் அந்தப் பாட்டி ஓடிப்போய் கட்டிப்பிடிக்க, மகன் அழ ஆரம்பித்துவிட்டார். ‘நான் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறேன். பத்திரமா பார்த்துக்கறேன்’ என்றார். பிள்ளைகள் பெரியவர்களை அனுசரித்து வாழ வேண்டும், நாம நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பதில் அவர்களுக்கு இணை யாருமில்லை’’ என்றார்.

அனுபவங்களைப் பகிரலாமே!

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந் தாலும் பகிரலாம். பிரசுரமாகும் ஒவ்வொன்றுக்கும் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

முதுமைக்கு மரியாதை, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism