Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 9 - உயில் எழுத நினைக்கிறீர்களா... சட்டம் சொல்வதைக் கேளுங்கள்!

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - சென்னை, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலா

முதுமைக்கு மரியாதை! - 9 - உயில் எழுத நினைக்கிறீர்களா... சட்டம் சொல்வதைக் கேளுங்கள்!

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - சென்னை, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலா

Published:Updated:
முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

உச்சி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் காலில் செருப்பு கூட அணியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து கொண்டிருந்தார் தாயுமானவர். மனம் வெறுப்பில் வெம்பிக் கொண்டிருந்தது. அவர் பின்னால் அவர் மனைவி இமையாள், ‘உனக்கு சொத்தாக நான் இருக்கிறேன். உன் பிள்ளைதானே ஏமாற்றினான். போனால் போகட்டும் நீ வா’ என்று கெஞ்சியபடி ஓடிக் கொண்டிருந் தார்.

தாயுமானவரின் ஓட்டத்தின் காரணத்தை அறிந்துகொள்ளாமல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த தாகச் சொல்லி காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது.

தாயுமானவரிடம் நீதிபதி விவரம் கேட்டபோது, ‘ஒரே பிள்ளை... அவனே உலகம். அவனுக்கு இல்லாத சொத்து வேறு யாருக்கு... என் பிள்ளை இருக்கும் போது எனக்கு எதற்கு சொத்து என்று யோசித்து என் சொத்து முழுவதையும் என் பிள்ளை பெயருக்கு எழுதி வைத்துவிட்டேன். நாங்கள் இருப்பது இடையூறு என்று சொல்லி என்னையும் என் மனைவியையும் வீட்டைவிட்டு என் மகன் துரத்திவிட்டான். என் பிள்ளையை நார்நாராகக் கிழிக்க முடியாமல் நான் என் சட்டையைக் கிழித்துக்கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

நீதிபதி தனக்கே துரோகம் நடந்து விட்டதுபோல வருத்தப்பட்டு, காவலரிடம், ‘தாயுமானவரை நீங்கள் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அவரை சிறைக்கு அனுப்ப முடியாது’ என்று சொல்லிவிட்டு, தாயுமானவரை வீட்டுக்குப் போகச்சொன்னார்.

எஸ்.விமலா
எஸ்.விமலா

தாயுமானவர், ‘இருக்க இடமில்லை, உடுக்க உடை இல்லை, பசிக்கு உணவு இல்லை. என்னையும் என் மனைவியையும் சேர்த்தே சிறைச்சாலைக்கு அனுப்பி விடுங்கள். நாங்கள் அங்காவது சாப்பிடு கிறோம்’ என்றார்.

தினம் தினம் பல சட்டங்கள் வந்து கொண்டிருக்க, அத்தனை சட்டங்களையும் தெரிந்துகொள்வது வழக்கறிஞர்களுக்கே சவாலாக இருக்கும்போது சாமானிய மனிதனுக்கு சட்டம் தெரிந்திருக்க என்ன வாய்ப்பிருக்கிறது?

சட்டம் தெரியாத மனிதனுக்கு சட்டப்படி சரியான வழியைக் காட்டுவது நீதிமன்றத்தின் கடமை என்று நீதிபதி யோசித்தார். ரத்தின சுருக்கமாக தாயுமானவருக்கு சட்டத்தின் பாதுகாப்பு எப்படி கிடைக்கும் என்பதைச் சொல்லி விட்டு அவரது அலுவலக வளாகத்தில் இருந்த சட்ட உதவி மையத்துக்கு அனுப்பி வைத்தார்.

விளிம்புநிலை மக்களுக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இலவச சட்ட உதவி மையத்தில் எந்த வித கட்டணமும் இல்லாமல் சட்ட ஆலோசனையும் சட்ட உதவியும் வழங்கப்படுகின்றன. அங்கு பணியாற்றிய வழக்கறிஞர், தாயுமானவருக்கும் அவருடைய மனைவிக்கும் மூத்த குடி மக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்டத்தின் சாரத்தை எளிதாக எடுத்துரைத்தார்.

இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்ட தாயுமானவர் தானே ஒரு மனுவை எழுதி கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்தார். இரண்டே மாதங்களில் தாயுமானவர் அவரின் மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்து மாற்றம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

கம்பீரமாக நடை போட்டு வீட்டுக்குச் சென்ற அவரை அவருடைய பேரன் மகிழினி கொண்டாடி வரவேற்றான். தாயுமானவர் தன் வீட்டு வாயிற்படியில் மூத்த குடிமக்களுக்கு சட்ட ஆலோசனை தரப்படும் என்று எழுதி வைத்தார்.

வீட்டை விட்டு தாயுமானவரின் மகனும் மருமகளும் வெளியேறினர். அவர்களோடு செல்ல பேரன் மகிழினி விரும்பவில்லை. தன் பெற்றோர்களிடம் மகிழினி சொன்னான்... ‘நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எனக்கு எதுவும் இல்லை’.

முதுமை அடையும் வரை உழைப்பு அனைத்தையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து, உழைப்பினால் பெற்ற சொத்தையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு ஏமாற்றத்தின் உச்சியில் நிற்கும் மூத்த குடிமக்கள் அநேகர். அத்துடன் சொத்துகளை எழுதிவைக்கும் மூத்த குடிமக்களை, பயன்படாமல்போன பொருள்களைபோல நடத்தும் நிலையும் நிலவி வருகிறது. இதற்கான தீர்வுதான் என்ன?

முதுமைக்கு மரியாதை! - 9 - உயில் எழுத நினைக்கிறீர்களா... 
சட்டம் சொல்வதைக் கேளுங்கள்!
Spiderplay

சென்னை, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலாவிடம் பேசினோம்...

“ ‘உலகம் உண்ண உண்! உடுத்த உடுப் பாய்!’ என்பார் கவிஞர் பாரதிதாசன். உலகம் உண்டுவிட்டதா என்று பார்க்கா விட்டாலும்கூட தங்கள் குழந்தைகளே உலகம் என்று வாழ்வை அர்ப்பணித்த பெற்றோர்கள் / முதியோர்கள் உண்டு விட்டார்களா என்று பார்க்கும் மானுடம் கூட தொலைத்து விட்டோம்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, சமுதாயத்தின் பல தரப்பினரைப் பல விதங்களில் பாதித்துள்ளது. கண்ணுக்குத் தெரியாமலும் கவனத்தில் வராமலும் போன பாதிப்பு, முதியோர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பே ஆகும். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின்போது, ‘உலகில் எல்லோரையும் போலவே முதியவர்களுக்கும் வாழ் வதற்கும் ஆரோக்கியத்துக்குமான சம உரிமைகள் உள்ளன’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை இயக்குநர் அன்டோனியோ குட்டெரஸ் சொல்லி யுள்ளார்.

சமுதாயத்தின் புறக்கணிப்பு, முதியவர் களை மனரீதியான பிரச்னைகளுக்கு ஆட்படுத்துகிறது. `பிள்ளைகள் கறிவேப்பிலையாய் எங்களைப் பயன்படுத்தினார்கள். அதாவது பயன்பாடு முடிந்ததும் தூக்கி எறிந்து விட்டார்கள்’ என்பதுதான் பல முதியவர் களின் மனக்குமுறல்.

சட்டம் என்ன சொல்கிறது?

சொத்துகளை உயில் எழுதுவது அல்லது தான செட்டில்மென்ட் (பரிசாக வழங்குவது) மூலமாகவோ எழுதி வைப்பது அதிகம். ஏன், அந்த இரண்டு விதமான முறைகளை மூத்த குடிமக்கள் கையாள்கிறார்கள்?

உயில் எழுதுவதற்கு ஸ்டாம்ப் பேப்பர் என்று அறியப்படும் முத்திரை தாள் (பத்திரம்) வாங்க வேண்டிய அவசியம் இல்லை. முத்திரை தாள் (பத்திரம்) உயிலை ரிஜிஸ்டர் அலுவலகத் தில் பதிவு செய்தால் அதற்கு மதிப்பு அதிகம்தான். ஆனால், பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. எப்போதுமே உயில் எழுதிய உடனே அமலுக்கு வராது. உயில் எழுதி வைத்தவரின் உயிர்போன பிறகுதான் அமலுக்கு வரும்.

உயிர் போன பிறகுதான் அமலுக்கு வரும் என்றால் அந்த உயிரை போக வைத்து விட்டால் என்ன என்று பயனாளிக்குத் தோன்றும்போது, எழுதி வைத்தவருக்கு ஆபத்து ஆரம்பிக்கும். தங்களுக்கு நன்மை செய்பவரின் உயிரைக்கூட பறித்துக்கொண்டு தான் நன்மை அடைய வேண்டும் என்று நினைக்கும் சுயநல கிருமிகளுக்கு தயவுசெய்து உயில் எழுதாதீர்கள்; உயிரை விட்டு விடாதீர்கள்.

செட்டில்மென்ட்டை பொறுத்தவரை அந்த ஆவணத்தில் `அன்பினாலும் பாசத்தினாலும்’ என்ற இரண்டு வார்த்தைகள் இல்லாமல் இருக்காது. செட்டில்மென்ட் எழுதி வாங்கும் வரை அன்பு, கரை புரண்டு ஓடுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அந்த அன்பு ஆவணம் எழுதிக்கொடுத்த பிறகும் நீடிக்குமா என்பதுதான் கேள்விக்குறி.

மூத்த குடிமக்களுக்கு உடலுழைப்பு இயலாமல் போகும் நிலையில் சொத்துகளில் இருந்து வரும் வருமானம் அல்லது பிள்ளைகள் கடமையை உணர்ந்து கொடுக்கும் பணம் இந்த இரண்டும் முக்கியமானதாக இருக்கும்.

தன்னுடைய சொத்துகளை பிள்ளைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கொடுக்கும் மூத்த குடிமக்களுக்கு சொத்துகளைப் பெறுபவர்கள், தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்த எதிர் பார்ப்புதான் சொத்து மாற்றத்தின் அடிப்படையாக இருக்கும்.

தன்னைப் பராமரிப்பது தொடர்பான நிபந்தனையைச் சேர்ப்பது சட்ட ரீதியாக கட்டாயமில்லை. நிபந்தனை இல்லாமலேயே பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாலும், பத்திரங்களில் அந்த நிபந்தனையைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

தங்களுடைய அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை சொத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் அதைக் குறிப்பிட்டு எழுதி சொத்து மாற்றம் செய்பவர்களும் உண்டு.

அப்படி எழுதியும் மூத்த குடிமக்கள் நிராகரிக்கப்பட்டால், பராமரிப்பு மறுக்கப்பட்டால், தேவைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டால் சொத்துகளைத் திரும்பப் பெற முடியுமா?

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல உறுதி சட்டம் 2007 அமலுக்கு வந்த பிறகு தனது சொத்தை அன்பளிப்பாகவோ அல்லது வேறுவிதமாகவோ அவரின் அடிப்படை வசதிகளையும் தேவைகளை யும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு மூத்த குடிமகன் ஒருவர் மாற்றம் செய்து கொடுக்கிறார். அதன் பிறகு சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட பயனாளி, மூத்த குடிமக்களின் அடிப்படை வசதிகளையும் தேவை களையும் வழங்கத் தவறினால் அந்த சொத்து மாற்றம் செல்லத்தக்கதா?

இப்படிப்பட்ட நிலையில் அந்த சொத்துப் பரிமாற்றம் மோசடியின் காரணமாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாக அல்லது தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி செய்யப் பட்டதாகவோ கருதப்பட வேண்டும். சொத்தை எழுதிக் கொடுத்தவரின் விருப்பத்திற்கு உட்பட்டு அத்தகைய சொத்து மாற்றம் செல்லாது என்று தீர்ப்பாயம் அறிவிக்கலாம்.

மனு செய்தல் முறை

இச்சட்டத்தின் கீழ் உதவி கோரி மனு அளிக்க நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியது இல்லை. கோட்டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யலாம். இதற்கென தீர்ப்பாயங்கள் உட்கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பாயங்கள் ஓர் உரிமையியல் நீதி மன்றத்துக்கு உள்ள அனைத்து அதிகாரங் களையும் பெற்றிருக்கின்றன.

விண்ணப்பிக்கும் முறை

பெற்றோர்களோ அல்லது மூத்த குடிமக்களோ தங்கள் இயலாமையின் காரணமாக நேரடியாகச் சென்று தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ய இயலவில்லை என்றால் தங்களுக்கு பதிலாக வேறொருவரையோ அல்லது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ மனு தாக்கல் செய்யலாம்” என்று நிறுத்தியவர்,

“முதியவர்கள் ஒரு சமுதாயத்தின் அடையாளம். அவர்களைப் பராமரிப்ப தும் அவர்கள் கண்ணியமான வாழ்க் கையை எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் வாழ உதவுவதும் நம் ஒவ்வொருவரின் கடமை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி முடித்தார்.

- துணை நிற்போம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முதுமைக்கு மரியாதை! - 9 - உயில் எழுத நினைக்கிறீர்களா... 
சட்டம் சொல்வதைக் கேளுங்கள்!

ஓய்வூதியதாரருக்கு வாழ்நாள் சான்றிதழ் அளிக்கும் தபால்துறை!

மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சுதந்திரப் போரட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் எனப் பல தரப்பினரும் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கு அடையாளமாக ஒவ்வோர் ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். கொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2022-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமாக, அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டுக் கருவி

(Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி (Jeevan Pramaan Face App) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.

இந்த நிலையில் இந்திய அஞ்சல் துறை வங்கியின் (India Post Payments Bank) சேவை யைப் பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப் பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மின்னணு வாழ்நாள் சான்று (Digital life certificate) பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டியவை...

ஆதார் எண்

ஓய்வூதியத்துக்கான ஆணை எண் (Pension Payment Order - P.P.O. No)

வங்கி கணக்கு எண்

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்

மேற்படி விவரங்களை அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ, போஸ்ட்மேனிடமோ கொடுக்கலாம். ஓய்வூதியதாரருக்கான வாழ்நாள் சான்றினை உடனே பதிவிறக்கம் செய்து தபால் துறை அளித்து விடும். அதை ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர்/துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாக, சம்பந்தப்பட்ட ஓய்வூதிய அலுவல கத்துக்கு அனுப்பினால் போதும். மூத்தோருக்கான ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பலன்கள்!

முதியோரைப் பலவிதமான பிரச்னைகள் பாதிக்கின்றன. பலவீனம், ஞாபக மறதி, காரண மில்லாத எரிச்சல், கோபம், நோய், முதுமையால் ஏற்படும் உடல் தளர்வு, புறக்கணிக்கப்படுதல், தனிமை, வறுமை, சமூக அந்தஸ்தில் சரிவு போன்றவை முதியோர் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்னைகள்.

பராமரிப்பின்றி அவதிப்படும் முதியோருக்கு உதவும் நோக்கில் 2007-ல் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்’ இயற்றப்பட்டு, அதற்கிணங்க தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009-ல் வகுக்கப்பட்டன.

பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் தங்களைப் பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதியோ, சொத்துகளோ எதுவும் இல்லாதபோதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையென்றால் இந்தச் சட்டத்தின்கீழ் அவர்களுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக மாதம் 10,000 ரூபாய்க்கு மிகாத வகையில் பாரமரிப்புத் தொகை பெற்றுத் தர வழி வகை செய்யப்படும்.

தீர்ப்பாயத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக் கிணங்க பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ தகுந்த காரணமின்றி செயல்படவில்லை எனில் ஒரு மாதத்துக்கான சிறைத் தண்டனையோ அல்லது பணம் செலுத்தும் வகையில் சிறைத் தண்டனையோ எது அதிகமோ அந்தக் காலம் வரை தண்டனை வழங்கப்படும்.

மூத்த குடிமக்களை ஆதரவற்ற நிலையில் விட்டுச் சென்றால், அந்த மூத்த குடிமக்களை பராமரிக்கத் தவறியவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கப்படும்

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத மூத்த குடிமக்களுக்கு, முதியோர் பாதுகாப்பு இல்லங்கள் அமைத்துப் பராமரிக்கவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யவும், அரசாங்கத்தை வலியுறுத்த இந்தச் சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகள்!

மூத்த குடிமக்களுக்கு நீண்ட தூரம் பயணங்களில் கட்டண சலுகைகள் மற்றும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி.

ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு உணவு, தங்குமிடம், சுகாதார வசதிகள் போன்றவற்றை வழங்கு வதற்காக, மூத்த குடிமக்கள் இல்லங்களைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் / சங்கங்கள் / அறக்கட்டளைகள் / தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் போன்றவற்றைச் செயல்படுத்தும் நிறுவனங் களுக்கு மானியம். தொடர் பராமரிப்பு இல்லங்கள், நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் முட நீக்கியல் சிகிச்சை மையங்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் அமைப்ப தற்கான ஏற்பாடுகள்.

முதியோர்களின் குறைகளைத் தெரிவிக்க...

முதியோர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும் மற்றும் சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசின் உதவி எண்கள்:

தொலைபேசி எண்: 044 - 24350375,

செல்பேசி/வாட்ஸ்அப் எண்: 93612 72792