Published:Updated:

பெரியார், அண்ணா நினைவிடங்கள் முதல் சென்னையின் பிரமாண்டங்களை வடிவமைத்த அட்சுத்... நினைவு நாள் சிறப்பு பகிர்வு!

அட்சுத் ஆர் சுண்டூர்
அட்சுத் ஆர் சுண்டூர்

அறிஞர் அண்ணா மறைந்த தருணத்தில் இரவோடு இரவாக நினைவிடத்தை அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர் நெடுஞ்செழியனின் அலுவலகத்திலேயே அமர்ந்து யானை தந்தம் வடிவிலான நுழைவுவாயிலை அமைக்க திட்டம் தீட்டிக் கொடுத்தார்.

கோபாலபுரத்தில் உள்ள ஹோட்டல் மாரிஸ், ராயப்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஸ்வாகத், எக்மோரில் உள்ள ஹோட்டல் காஞ்சி, மெரினா சாலையில் இருக்கின்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கட்டடம்... இவையெல்லாம்தான் பழைமையான சென்னையின் முகங்கள்.
இவை அனைத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அட்சுத் ஆர் சுண்டூர்! இந்தக் கட்டடங்கள் அனைத்தையும் வடிவமைத்தவர், இவர்தான்.
அமைச்சர் ராஜாராமுடன் அட்சுத் ஆர் சுண்டூர்
அமைச்சர் ராஜாராமுடன் அட்சுத் ஆர் சுண்டூர்

இவை மட்டுமல்ல... அண்ணா நினைவிடத்தில் இருந்த யானை வடிவ தந்தம், பெரியார் நினைவிடம் ஆகியவற்றையும் உருவாக்கியவர் இவர்தான். 'ஹோட்டல் ஆர்கிடெக்ட்' என்று அழைக்கப்பட்ட பெருங்கலைஞரான இவரின் நினைவு நாள் இன்று. 2010 ஆகஸ்ட் 30 அன்று இவர் இயற்கை எய்தினார். சென்னையின் எழில்மிகு கட்டடங்களை உருவாக்கிய அட்சுத்தை, அவரது பத்தாவது நினைவாண்டில் நினைவுகூர்வது மிகவும் அவசியமாகும்.

கட்டடக் கலையின் பிதாமகனான அட்சுத், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சத்ய சாய் பாபா ட்ரஸ்டில் தலைமை கட்டடக்கலை நிபுணராகவும் இருந்து, புகழ்பெற்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்களை எழுப்பியிருக்கிறார்.

"பரோடாவுல கட்டடக்கலை படிப்பை முடிச்சார். அவங்க அப்பா சிவில் இஞ்சினியர். அவர் உருவாக்கிய ஆர்வத்துலதான் இவர் கட்டிடக்கலை படிச்சார். பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வாங்கினார். மெட்ராஸ் வந்து பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில் கொஞ்சக்காலம் வேலை பாத்தார். அப்புறம் 'அட்சுத் அண்ட் அசோசியேட்ஸ்'ன்னு சொந்த நிறுவனத்தை ஆரம்பிச்சார். முதல் வாய்ப்பே பெரிய வாய்ப்பா அமைஞ்சது. சென்னைப் பல்கலைக்கழகத்தோட நூற்றாண்டு விழா கட்டடத்தை வடிவமைக்கிற வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் பெரிய திருப்புமுனையா இருந்துச்சு என்கிறார் அட்சுத்தின் மனைவி ஜோதி.

அட்சுத்தின் மனைவி ஜோதி
அட்சுத்தின் மனைவி ஜோதி
அட்சுத்தின் குடும்பம்
அட்சுத்தின் குடும்பம்

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கட்டடத்தை அமைப்பதற்கான திட்ட மாதிரிகளை அப்போதைய அரசு பொதுவெளியில் கோரியிருந்தது. பெரும்பாலானோர் திட்டங்களை வழங்கினார்கள். ஆனால், இளம் கலைஞரான இவர் கொடுத்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இயல்பிலேயே ஓவியங்களை நுட்பமாக வரைவதில் கைதேர்ந்தவராக இருந்தார் அட்சுத். ஒரு திட்டத்தை பற்றி சொன்னால் சில நிமிடங்களிலேயே வரைந்து காட்டிவிடுவார். அந்தத் திறன்தான் சென்னையின் வரலாற்றில் அவர் பெயரை இடம்பெறச் செய்தது.

அண்ணா சமாதி
அண்ணா சமாதி
Aravind Sivaraj / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/3.0)
அறிஞர் அண்ணா மறைந்த தருணத்தில் இரவோடு இரவாக நினைவிடத்தை அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர் நெடுஞ்செழியனின் அலுவலகத்திலேயே அமர்ந்து யானை தந்தம் வடிவிலான நுழைவுவாயிலை அமைக்க திட்டம் தீட்டிக் கொடுத்தார். இது அமைச்சரவையில் உள்ள எல்லாருக்கும் பிடித்துப்போக, உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுவாக கல்லறை வடிவமைப்பில் முகாலயர்களின் தாக்கம் இருக்கும். அதை மாற்றியமைக்கும் வகையில் அப்போதே யானை தந்தங்கள் வடிவிலான வாயிலை உருவாக்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள திரைக்கலைஞர்கள் மஞ்சுளா - விஜயகுமார் வீட்டையும் இவர்தான் வடிவமைத்தார். அடையாறில் உள்ள நடிகை அஞ்சலிதேவியின் இடத்தில் இவர்தான் சுந்தரம் பில்டிங்கை கட்டியெழுப்பினார். தமிழக அரசு நடத்தும் காமதேனு சூப்பர் மார்க்கெட்டை முதன்முதலில் இவர்தான் வடிவமைத்தார். அட்சுத், பல கல்வி நிலையங்களையும் வடிவமைத்துள்ளார். ஓய்எம்சிஏவிற்கு பிரதான ஆர்கிடெக்டாக இருந்தார்.

புட்டபர்த்தி சாய்பாபாவுடன் அட்சுத்
புட்டபர்த்தி சாய்பாபாவுடன் அட்சுத்

ஆந்திராவிலும் அம்மாநிலத்தின் அடையாளமாக உள்ள பல கட்டடங்களை அட்சுத் வடிவமைத்துள்ளார். புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கல்வி நிலையங்களும் இவரது மேற்பார்வையில்தான் வடிவமைக்கப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள அபெக்ஸ் ப்ளாசா, ஜாவர் ப்ளாசா ஆகியவையும் இவரது மேற்பார்வையிலேயே உருவாகின. ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த ஜெமினி ஸ்டூடியோவை பார்ஸன் காம்ப்ளெக்ஸாக மாற்றி உருவாக்கியவர் இவர்தான். வாழ்ந்த காலம் வரை பாங்க் ஆஃப் பரோடாவின் அனைத்து கட்டடங்களையும் இவரே வடிவமைத்தார். ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கியும் இவரது கைவண்ணத்தில்தான் உருவானது. தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் பிரபலமாகாத சமயத்திலேயே 'அனுக்ரஹா அபார்ட்மென்ட்ஸ்' என்ற பெயரில் ஒரு குடியிருப்பைக் உருவாக்கினார். இப்போதும் இவர் வடிவமைத்த ஹோட்டல்கள், எந்த மாற்றமுமின்றி அவரது கலைத்திறனுக்குச் சான்றாக நிற்கின்றன.

"கோண வடிவங்கள், வளைவுகள் மற்றும் வளைந்த மேற்பரப்புகள் கொண்ட கட்டடங்களை உருவாக்குவதில் அப்பா தனித்திறன் பெற்றிருந்தார். தொழிலில் இவர் காட்டிய ஆர்வமும், நேர்மையும் நிறைய வாடிக்கையாளர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது. வாழும் காலம் வரை வரைந்துகொண்டேயிருந்தார். அவரை முன்மாதிரியாகக் கொண்டே நாங்கள் வளர்ந்தோம். இன்றைக்கு சென்னை சாலைகளில் பயணிக்கையில் அவரால் உருவாக்கப்பட்ட கட்டடங்களைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது" என்கிறார் அட்சுத்தின் மகன் பிரேம்சாய். இவர், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர். மகள் ரோஷினியும் கட்டடக்கலை நிபுணர்தான்.

பிரேம்சாய்
பிரேம்சாய்

கலைஞர்கள் தங்கள் படைப்பின் மூலம் தங்கள் வாழ்ந்த காலத்தைப் பதிவு செய்து செல்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் காலமெல்லாம் நினைவுகூறப்படுகிறார்கள். சென்னை போன்ற ஒரு பிரமாண்ட நகரத்தில் அதன் தொன்மையையும் வரலாற்றையும் உணர்த்திக்கொண்டிருக்கும் கட்டடங்களை வடிவமைத்த மகா கலைஞன் அட்சுத்தை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்.

சென்னை உள்ள வரை அட்சுத் உருவாக்கிய வானுயர கட்டடங்கள் எழிலோடு நின்று அவர் பெயர் சொல்லும்!
அடுத்த கட்டுரைக்கு