Election bannerElection banner
Published:Updated:

கும்பகோணம்: துரத்திச் சென்ற போலீஸ்; மர்மமான முறையில் இறந்து கிடந்த ரவுடி - நடந்தது என்ன?

மர்மமான முறையில் உயிரிழந்த சிலம்பரசன்
மர்மமான முறையில் உயிரிழந்த சிலம்பரசன் ( ம.அரவிந்த் )

தாராசுரத்தில் ரவுடியின் மர்ம மரணம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணம், அருகே தாராசுரத்தில் பகுதியில் போலீஸ் துரத்திச் சென்ற ரவுடி ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ரவுடியின் தாய் தனது மகனை போலீஸார் அடித்துக் கொன்றதாக வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் புதைக்கப்பட்ட ரவுடியின் உடலை, தோண்டி எடுத்து மீண்டும் உடற் கூறாய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடற்கூறாய்வு செய்யப்பட்ட இடத்தில்
உடற்கூறாய்வு செய்யப்பட்ட இடத்தில்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் வசித்தவர் சிலம்பரசன் (30). இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் மீது சீர்காழி,மன்னார்குடி,கும்பகோணம் உள்ளிட்ட பல போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை,கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் போலீஸாரின் ரவுடிகள் பட்டியலில் இவர் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிலம்பரசனை கைது செய்ய போலீஸார் தேடி வந்திருக்கின்றனர். அவர் வீட்டுக்கு வருகிறாரா என்பதையும் நோட்டமிட்டபடியே இருந்தாகத் தெரிகிறது. இதையடுத்து சிலம்பரசன் கடந்த 9-ம் தேதி தனது பெற்றோரை பார்க்க தாராசுரம் வந்திருக்கிறார். இதையறிந்த தாலுகா காவல் நிலைய போலீஸார், அன்றிரவே சிலம்பரசனை கைது செய்யச் சென்றனர்.

கும்பகோணம்: லாரி உரிமையாளரைக் கடத்திய கும்பல்; 6 மணி நேரத்தில் மீட்பு, 6 பேர் கைது! - நடந்தது என்ன?

போலீஸை பார்த்ததும் சிலம்பரசன் தப்பித்து ஓடினார். அவரைப் பிடிக்க போலீஸார் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது போலீஸார், சிலம்பரசன் மீது கற்கள் வீசியதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க சிலம்பரசன் எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள குளத்துக்குள் குதித்திருக்கிறார். இரவு நேரம் என்பதால் கொஞ்ச நேரம் நின்று விட்டு போலீஸார் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த நாளான 10-ம் தேதி காலை உடலில் ரத்தக் காயங்களுடன் சிலம்பரசன் இறந்து நிலையில் குளத்திற்குள்ளேயே கிடந்ததை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிலம்பரசன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்து உடலை குடும்பத்தினரிடம் கொடுத்தனர். அப்போதே சிலம்பரசனை போலீஸார் அடித்துக் கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். சிலம்பரசனின் சந்தேக மரணம் அவரின் உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.

மர்மமான முறையில் உயிரிழந்த சிலம்பரசன்
மர்மமான முறையில் உயிரிழந்த சிலம்பரசன்
ம.அரவிந்த்

இதையடுத்து அவரது உடல் தாராசுரம் மையானத்தில் புதைக்கப்பட்டது. பின்னர் சிலம்பரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மறு உடல்கூறாய்வு செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிலம்பரசனின் தாய் வள்ளி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் சிலம்பரசன் உடலை மறுகூறாய்வு செய்யவும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் சிலம்பரசனின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே மறு உடற்கூறாய்வு செய்தனர். இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது குறித்து சிலம்பரசனின் குடும்பத்தார் தரப்பில் பேசினோம். ``போலீஸார் சிலம்பரசனை துரத்திக் கொண்டு செல்லும் போதே கற்களை எடுத்து அடித்தனர். இதனை பலரும் பார்த்துள்ளனர். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. காலையில் உடல் முழுக்க காயங்களுடன் சிலம்பரசன் சடலமாகக் கிடந்தார்.

சென்னை: செயின் பறிப்பில் ஈடுப்பட்ட இன்ஜினியர் - சிறை நண்பர்கள் சிக்கிய கதை!

போலீஸ் தான் சிலம்பரசனை அடித்து கொன்றதாக கருதுகிறோம். அவரின் மரணத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும். இதில் தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். போலீஸ் தரப்பில் பேசியதில், ``நாங்கள் துரத்திய போது எங்களிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்தார். அப்போது தலையில் அடிப்பட்டு இப்படி நடந்திருக்கும் என நினைக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

சிலம்பரசனின் மர்ம மரணம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் தாராசுத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு