அரசியல்
Published:Updated:

பிரிந்த மாவட்டங்கள்... குவியும் கோரிக்கைகள்!

பிரிந்த மாவட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரிந்த மாவட்டங்கள்

ஆட்சியர் அலுவலகத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஆயிரப்பேரி கிராமத்தில் அமைக்கத் திட்டமிடுகிறார்கள்.

நான்கு ஆண்டுகளில், ஆறு புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. `நிர்வாக வசதிக்கு...’ என்று அரசு சொல்கிறது. மக்கள் என்ன சொல்கிறார்கள்..?

திருப்பத்தூர்

“வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘வாணியம்பாடியைத் தலைமையிடமாகக்கொண்டு ஏலகிரி மாவட்டத்தை உருவாக்குவேன்’ என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், திருப்பத்தூரை மாவட்டமாக அறிவித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கலெக்டர் அலுவலகமும் திருப்பத்தூர் நகருக்குள்ளேயே கட்டப்படவிருப்பதால் கடும் நெரிசல் ஏற்படும். அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர் கபில் ஆகியோரின் தொகுதிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் இருக்கின்றன. இவர்களின் அதிகார மோதலும் புதிய மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் என்கிறார்கள். ஆகஸ்ட் 20-ம் தேதி வேலூர் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் அமையவிருக்கும் புதிய கட்டடங்களுக்கான விவரங்களை அறிவித்தார். ஆனால், ‘திருப்பத்தூரில் பாதாளச்சாக்கடைப் பணிகளை விரைந்து முடிப்போம்’ என்று மட்டுமே அறிவித்தார். இந்த பாரபட்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!’’

கள்ளக்குறிச்சி

“விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது கச்சிராயப்பாளையம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தற்காலிகமாக ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. அதிகாரிகள் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரைதான் அங்கு இருக்கிறார்கள். இது எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது.

கள்ளக்குறிச்சி - சென்னை சாலையில், வீரசோழபுரம் பகுதியில் புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கு இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சியிலிருந்து அங்கு செல்லும் வழியில் டோல்கேட் இருக்கிறது. இதனால், 6 கி.மீ தூரத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லவே கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்!”

தென்காசி

“திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியைப் பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்திருக்கிறார்கள். ஆட்சியர் அலுவலகத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஆயிரப்பேரி கிராமத்தில் அமைக்கத் திட்டமிடுகிறார்கள். அங்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டால், சுற்றுச்சாலை அமைக்க வேண்டியிருக்கும். அதற்குப் பல ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். திருவேங்கடம், மேலநீலிதநல்லூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மூன்று பேருந்துகள் மாறி தென்காசி வந்து, அங்கிருந்து ஆட்டோ பிடித்துத்தான் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். இது மாற்றம் அல்ல... ஏமாற்றம்!”

ராணிப்பேட்டை

“வேலூரிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இன்னொரு புதிய மாவட்டம் ராணிப்பேட்டை. வரவிருக்கும் ஆட்சியர் அலுவலகம் ராணிப்பேட்டையில் அமையவிருப்பதாகச் சொல்கிறார்கள். அரக்கோணத்திலிருந்து ராணிப்பேட்டைக்கு 55 கி.மீ. இவ்வளவு தூரம் பயணிக்க முடியுமா? எனவே, அரக்கோணம் - ராணிப்பேட்டை ஆகிய இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். தவிர, இந்த மாவட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பில், கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல், ஏற்கெனவே கிடப்பில் கிடந்த சிறிய திட்டங்களை மட்டும் அறிவித்திருப்பது ஏமாற்றமாக உள்ளது.”

பிரிந்த மாவட்டங்கள்... குவியும் கோரிக்கைகள்!

செங்கல்பட்டு

“சென்னை மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து, செங்கல்பட்டு மாவட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அரசின் அனைத்து அடையாள அட்டைகளிலும் சென்னை அல்லது காஞ்சிபுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை, `செங்கல்பட்டு மாவட்டம்’ என்று மாற்றாததால், பல்வேறு குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. தனி மாவட்டமாக அறிவித்திருப்பதால், முன்பைவிட தற்போது தொழிற்சாலை உள்ளிட்ட வெவ்வேறு பயன்பாடுகளுக்கு விவசாய நிலங்கள் விலைபோவது அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்த மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும்.”

மயிலாடுதுறை

“நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையைப் பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் திருமலைராஜன் ஆற்றுக்கு வடபுறம் உள்ள பேரளம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட சில கிராமங்களை மயிலாடுதுறை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். அதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கதிராமங்கலம், திருப்பனந்தாள், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளையும் மயிலாடுதுறையுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால், திருவாரூர் மற்றும் தஞ்சாவூரைவிட மயிலாடுதுறையே இப்பகுதிகளுக்கு அருகில் உள்ளது. இவற்றை இணைத்தால் மட்டுமே மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக உருவாக்கியதற்கு உண்மையான பலன் கிடைக்கும்.”