இந்தியாவின் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்குழுவை முடக்குவதாகவும், அந்த நிறுவனத்தை இந்திய திவால் சட்டத்தின் கீழ் தீர்வுக்காகப் பரிந்துரைக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி 20.11.2019 அன்று அறிவித்தது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநரான சுப்ரமணிய குமாரை இந்த நிறுவனத்தின் நிர்வாகியாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி முடிவின் பின்னணி மற்றும் திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் வருங்காலம் குறித்து இங்கு விவாதிப்போம்.

இந்தியாவின் லேமன் தருணங்கள்

ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் கடன் சந்தையில் நம்பிக்கைக் குறைபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு பக்கம் ஒட்டுமொத்த வங்கிசாரா நிதித் துறையும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. திவான் ஹவுஸிங் நிறுவனம் நிதி நெருக்கடியுடன், மோசடிப் புகார்களையும் சேர்த்துச் சந்தித்தது. நிதித்துறை வரலாற்றிலேயே இல்லாதவிதமாக ரூ.31,000 கோடி அளவுக்கு திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் நிதி மோசடி புரிந்திருப்பதாக புலனாய்வு இதழான `கோப்ராபோஸ்ட்’ வர்ணித்தது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில், வங்கிகளால் நியமிக்கப்பட்ட கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் சிறப்புத் தணிக்கை, திவான் ஹவுஸிங் குழும நிறுவனங்களுக்கு மோசடியான முறையில் கடன் வழங்கியிருப்பதை வெளிப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.88,000 கோடிக்கும் மேலான தொகையை பொதுமக்கள் டெபாசிட்டாகவும், வங்கிக் கடனாகவும், கடன் பத்திரங்களாகவும் பெற்றுள்ள திவான் ஹவுஸிங் நிறுவனம், வட்டி மற்றும் கடனை உரியகாலத் தவணைகளில் திரும்பச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து தர நிர்ணய நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை ‘டிஃபால்ட்’ என்ற நிலைக்குக் குறைத்தனர். பங்குச் சந்தையிலோ திவான் ஹவுஸிங் பங்குகள் கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. கடந்த 15 மாதங்களில் மட்டும் பங்கு விலை 650 ரூபாயிலிருந்து 21 ரூபாய் வரை சரிவடைந்திருக்கிறது.

வங்கிகளின் கடன் சீரமைப்பு முயற்சிகள் மற்றும் நிறுவனப் புனரமைப்பு முயற்சிகள் பலனளிக்காமல் போயின. வங்கிகளின் கடனைப் பங்குகளாக மாற்றி, நிர்வாகத்தை வங்கிகளின் கீழ் கொண்டுவரும் முயற்சியும் மியூச்சுவல் ஃபண்டுகளின் எதிர்ப்பின் காரணமாக வெற்றியடையவில்லை. இதற்கிடையே உத்தரப்பிரதேச மின்வாரிய ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து சுமார் ரூ.2,600 கோடி வரை திவான் ஹவுஸிங் நிறுவனத்தில் மோசடியான முறையில் முதலீடு செய்திருப்பதாக வெளிவந்த தகவல்கள் அரசியல் வானில் புயலைக் கிளப்பின. ஒருபக்கம் அமலாக்கப் பிரிவு திவான் ஹவுஸிங் நிர்வாகிகளிடம் விசாரணையைத் தொடங்க, மறுபக்கம் கடன் வசூலிப்பு நடவடிக்கைக்காகப் பலரும் நீதிமன்றத்தை நாடினர்.

திவால் சட்டத்தின் கீழ் வங்கிசாரா நிதி நிறுவனங்கள்

சொத்து மதிப்பு ரூ.500 கோடிக்கும் மேலுள்ள நிதிச் சேவை நிறுவனங்கள் திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதாக 15.11.2019 அன்று மத்திய அரசு அறிவித்தது. புதிய அறிவிப்பின்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிதி நிறுவனங்களின் தீர்வுக்காக தீர்வாணையங்களை அணுக முடியும். அதேநேரம், அமைப்புரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நிதி நிறுவனங்கள் தடாலடியாக முடக்கப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, `ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் மட்டுமே திவால் சட்டத்தின் கீழ் கடன் தீர்வுக்காக முன்மொழிய முடியும்’ என்றும் மத்திய அரசால் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி முதல் நடவடிக்கையாக, தற்போது ரிசர்வ் வங்கி திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் இயக்குநர்குழுவை முடக்கியது; நிறுவனத்தை திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவரவும் முடிவுசெய்திருக்கிறது. நிர்வாகக் குளறுபடி, கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாதது ஆகியவை இந்த முடிவுக்குக் காரணங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் வருங்காலம்..?

திவான் ஹவுஸிங் நிறுவனத்தில் நெடுங்காலமாக நிலவிவந்த நிச்சயமற்ற தன்மையை ரிசர்வ் வங்கியின் தற்போதைய நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. கடன் தீர்வு நடவடிக்கையின்போது வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் கடனில் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை அப்படிப் பெருமளவு கடன் தள்ளுபடி நடந்தேறும்பட்சத்தில், திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வசீகரமாக அமைய வாய்ப்புள்ளது. அதே நேரம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது, குழும நிறுவனக் கடன் ஊழல் ஆகியவை கடன் தீர்வைச் சிக்கலாக்கும். மேலும், அமைப்புரீதியாகப் பெரிய நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் திவான் ஹவுஸிங் நிறுவனத்தைக் கையகப்படுத்த அதானி, பிரமல், அப்போலோ போன்ற குழுமங்கள் முன்வந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன. இந்தத் தகவல்களால் பங்குச் சந்தையும் உற்சாகமடைந்திருக்கிறது.

ஆக, சட்டரீதியான புலனாய்வு விசாரணையின் போக்கு, கே.பி.எம்.ஜி தணிக்கை அமைப்பின் ஆய்வறிக்கை, உள்மோசடியால் ஏற்பட்ட உண்மையான இழப்பு, வங்கிக் கடன் தள்ளுபடியின் அளவு, புதிய முதலீட்டாளர்களின் ஆளுமைத்திறன் ஆகியவையே திவான் ஹவுஸிங் நிறுவனத்தின் எதிர்காலத்தையும் பங்குகளின் போக்கையும் தீர்மானிப்பவையாக இருக்கும்.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே)