Published:Updated:

அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்! - நெகிழும் மாடசாமி!

மாடசாமி!
பிரீமியம் ஸ்டோரி
மாடசாமி!

வாழ்க்கை

அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்! - நெகிழும் மாடசாமி!

வாழ்க்கை

Published:Updated:
மாடசாமி!
பிரீமியம் ஸ்டோரி
மாடசாமி!
``நாங்க வாழ்ந்த வாழ்க்கையை யாருமே வாழ்ந்திருக்க மாட்டாங்க. என்னை தெய்வமா மதிச்சு கண்ணுக்குக் கண்ணாப் பார்த்துகிட்ட என் தெய்வத்துக்கு சிலை வச்சு வழிபடுறேன். சிலையாக்கூட நாங்க பிரிஞ்சுடக்கூடாதுன்னு அவளோட சிலைக்குப் பக்கத்துல எனக்கும் சிலை வச்சிருக்கேன்” என நெகிழ்கிறார் மாடசாமி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் மாடசாமி. ஓய்வுபெற்ற ராணுவவீரரான இவர், தன் வீட்டின் முன்பு மண்டம் எழுப்பி தன் மனைவி வள்ளியம்மாளுக்குச் சிலை எழுப்பியதுடன், தனக்கும் சிலை வைத்துள்ளார். இந்த மண்டபத்தை வைத்து முடிவைத்தானேந்தல் ஊரில் விலாசங்களுக்கு அடையாளம் சொல்லும் அளவிற்கு நினைவுச்சின்னமாக மாறிவிட்டது.

நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே இந்த ஊருதான். முடிவைத்தானேந்தல் ஊருக்காரன்னு சொன்னாலே மிலிட்டரில வேலை செஞ்சிங்களா, இல்ல, உங்க வீட்ல யாராவது மிலிட்டரியில வேலை செய்யுறாங்களான்னு கேட்பாங்க. ஏன்னா, வீட்டுக்கு ஒருத்தர் மிலிட்டரி சர்வீஸ்ல இருப்பாங்க. இந்த ஊருக்கே மிலிட்டரிக்காரங்க ஊருன்னுதான் சொல்லுவாங்க.

அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்! - நெகிழும் மாடசாமி!

10-ம் வகுப்பு முடிஞ்சதுமே ராணுவத்துக்கு விண்ணப்பிச்சு, ’மெட்ராஸ் இன்ஜினீயரிங் குருப்’-ல வயர்லெஸ் ஆபரேட்டரா சேர்ந்தேன். 1961-ல் கோவா மாநிலம், 1965-ல் பாகிஸ்தான், 1971-ல் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடந்த ஆபரேஷன்களில் கலந்துகிட்டேன். 15 வருஷம் சர்வீஸுக்குப் பிறகு 1975-ல் விருப்ப ஓய்வு கொடுத்து ஊருக்கு வந்துட்டேன். தூத்துக்குடியில மத்திய கனநீர் ஆலையில் 25 வருஷம் வேலை செஞ்சு 2000-ல் ஓய்வு பெற்றேன்.

எனக்கு 25 வயசுல கல்யாணம் ஆச்சு. மூணு நாலு வருஷம் ஊரைச் சுத்தி பொண்ணு தேடினோம். கடைசியில உள்ளூர்லயே பொண்ணு அமைஞ்சுது. அந்தப் பொண்ணுதான் என் மனைவி வள்ளியம்மாள். எங்களுக்குக் கல்யாணம் ஆகும்போது அவளுக்கு வயசு 17. அந்த வயசுலயும் அவ்வளவு பொறுப்பா, பக்குவம் தெரிஞ்சுது. எனக்கு ஒரு மகன், ரெண்டு மகள்கள் இருக்காங்க. எனக்குள்ள குறைபாடே முன்கோபம்தான். எதுக்குக் கோபம் வருதுன்னே தெரியாம, படார் படார்னு கோபப்படுவேன். ஆனாலும் என்னை அதிகமா நேசிச்சு ரொம்ப அனுசரிச்சு நடந்துக்கிட்டா.

இத்தனை வருஷ வாழ்க்கையில ஒருமுறைகூட என்னை எதிர்த்துப் பேசுனதே கிடையாது. பல விஷயங்களில் அவளிடம் கருத்து கேட்காம தன்னிச்சையாவே முடிவெடுத்திருக்கேன். ஆனா, ஒரு சின்ன விஷயம்னாலும்கூட எங்கிட்ட கேட்காம வள்ளியம்மா எதுவும் செஞ்சதில்ல. கல்யாணம் முடிஞ்ச அடுத்த மாசமே சர்வீஸுக்குக் கிளம்பிட்டேன். வாரத்துக்கு நாலைஞ்சு லெட்டர் வள்ளிகிட்ட இருந்து வந்துடும். அவள் லெட்டர் எழுதினா 10 நாளு கழிச்சுத்தான் எங்கையில கிடைக்கும்.

அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்! - நெகிழும் மாடசாமி!

ஆபரேசன் டைம்லயெல்லாம் 20 நாள் வரைக்கும் ஆகும். ஒரு லெட்டர்ல 30 வரி எழுதியிருந்தான்னா.. அதுல மாமாங்குற வார்த்தை முப்பது இடத்துல இருக்கும். அவள் எழுதின 10 லெட்டருக்கு என்னால ரெண்டு லெட்டருக்குத்தான் பதில் எழுத நேரம் இருக்கும். கேம்புக்கு போஸ்ட்மேன் வந்தாலே ‘மாடசாமிக்கு எத்தனை லெட்டர் வந்திருக்கு?’ன்னு கிண்டலாக் கேட்பாங்க. அந்தப் பதினைஞ்சு வருச சர்வீஸுல 500 லெட்டருக்கு மேல எழுதியிருப்பா. லீவுல ஊருக்கு வந்தாலும் ஆனந்தக்கண்ணீரா இருக்கும்.

``நாட்டைக் காக்குற தியாகப் பணியில நீங்க அங்க இருக்கீங்க. வீட்டையும் உங்க பிள்ளைகளையும் காத்துக்கிட்டு வீட்டுக்குள்ளயே நான் இங்க கிடக்கேன். ஊருக்குத் திரும்ப வந்துருங்க. நாலு பால்மாடு வாங்கி வளர்த்து பால் கறந்துனாலும் உங்களை நான் ராசா மாதிரி பார்த்துக்கிறேன். எனக்காக இல்லாட்டாலும் உங்க மூணு பிள்ளைகளுக்காகவாவது ஊருக்கு வாங்க மாமா”ன்னு அவள் எழுதின கடைசி லெட்டரைப் படிச்ச பிறகுதான் ஊருக்கு வந்தேன்.

என் மனைவிக்கு அசைவம் பிடிக்காது. சுத்தமான சைவம். ஆனா, மீன், கோழி, ஆடுன்னு எனக்காக அசைவம் சமைச்சுப் போடுவா. மண்சட்டியில சாம்பார் வச்சாலும், மீன் குழம்பு வச்சாலும் எட்டு வீடு மணக்கும்யா. நான் பைக்கை எடுத்துட்டுப் பக்கத்துத் தெருவுக்குப் போனாக்கூட வீட்டுக்குத் திரும்பி வர்ற வரைக்கும் வாசலிலயே காத்து நிப்பா வள்ளியம்மை.

என் உடம்புக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு கண்ணும் கருத்துமா என்னை அக்கறையோடு பார்த்துக்கிட்ட வள்ளியம்மை, அவளோட உடம்பை சரியாக் கவனிக்கல. 2016-ல் என்னைத் தவிக்கவிட்டுப் போயிட்டா. `நம்ம ரெண்டு பேருல நான்தான் முந்தணும். உங்களைப் பிரிஞ்சி என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது. எனக்குதான் முதல் சாக்காளம் (இறப்பு) வரும் மாமா’ன்னு அடிக்கடி எங்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பா. அவா சொன்ன மாதிரியே முந்திக்கிட்டா.

வள்ளியம்மை என்னைவிட்டுப் பிரிஞ்ச மூணு மாசம் பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தேன். நாலாவது மாசமே மனைவிக்குச் சிலை வைக்கணும்னு முடிவெடுத்தேன். ‘ஒரு வருசம் ஆகுறதுக்குள்ள எதுவுமே செய்யக்கூடாது. கொஞ்சம் பொருத்திருப்பா’ன்னு ஊருல பெரியவங்க சொன்னாங்க. ஆனா, 8வது மாசமே கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடிக்குப் போயி, அவ போட்டாவக் கொடுத்து சிலை செய்யக் கொடுத்தேன்.

11வது மாசமே மண்டப வேலைகளை ஆரம்பிச்சேன். வள்ளியம்மை என்னை விட்டுப் பிரிஞ்ச தை மாசம் 12-ம் தேதி சிலையை நிறுவி ஊர் மக்களுக்கு அன்னதானம் போட்டேன். பூஜை செய்ய வந்திருந்த அர்ச்சகர், ‘என்னய்யா மண்டபத்தின் நடுவுல சிலையை வைக்காம, வலது ஓரமா சிலை வச்சிட்டீங்களே’ன்னு என்னிடம் கேட்டார். ‘அடுத்த வருசம் என்னோட சிலையை வைப்பதற்காக இடம் ஒதுக்கியிருக்கன்யா’ன்னு சொன்னதும் மனுசன் நெகிழ்ந்துட்டாரு.

அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்! - நெகிழும் மாடசாமி!

தினமும் காலையில வள்ளியம்மே சிலைக்கு அபிசேகம் செஞ்சு, சேலை மாத்தி, மாலை போட்டு சாமி கும்பிட்டுட்டுதான் அடுத்த வேலையைத் துவக்குவேன். வள்ளியம்மை என்னை விட்டுப் பிரிஞ்சது சனிக்கிழமை. அதனால, ஒவ்வொரு சனிக்கிழமையும் கறுப்புச்சட்டை போடுறது என்னோட வழக்கம். அவளோட பிறந்தநாள், என்னை விட்டுப் பிரிந்தநாள் (இறந்தநாள்) ரெண்டு நாள்லயும் வீட்டுப்பக்கத்துல உள்ள மண்டபத்துல அன்னதானம் செய்வேன். இல்லாதவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்வேன்.

“நாங்க வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் அடையாளம்தான் இந்தச் சிலைகள். கொற்கை, ஆதிச்சநல்லூர் மாதிரி ஊரே அழிஞ்சு போனாலும், சிலைகளாகவே இந்த மண்ணுக்குள்ள புதைஞ்சு கிடப்போம்” என்கிறார் மாடசாமி.