Published:Updated:

திருப்பி அனுப்பப்பட்டதா பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிதி?

பழங்குடியின மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
பழங்குடியின மக்கள்

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் அளித்த பணத்திலிருந்து 927 கோடி ரூபாயைச் செலவு செய்யாமல் திருப்பி ஒப்படைத்திருக்கிறார்கள்

திருப்பி அனுப்பப்பட்டதா பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிதி?

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் அளித்த பணத்திலிருந்து 927 கோடி ரூபாயைச் செலவு செய்யாமல் திருப்பி ஒப்படைத்திருக்கிறார்கள்

Published:Updated:
பழங்குடியின மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
பழங்குடியின மக்கள்

நலிவடைந்த நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகளின் சார்பாக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த மக்களின் கல்வி, சுகாதாரம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளைச் செய்துதருவதற்காகப் பயன்படுத்தவேண்டிய அந்த நிதியை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுமையாகச் செலவு செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக பழங்குடியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,310 கோடி ரூபாய் நிதியில் 1,045 கோடியை மட்டும் செலவு செய்துவிட்டு, மீதமுள்ள 265 கோடி ரூபாயை அரசு கஜானாவுக்கே திருப்பி அனுப்பப் பட்டதாக பதில் அளித்துள்ளனர் அதிகாரிகள்.

இது பற்றி நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக், ‘‘அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலும் கைதூக்கிவிடவேண்டிய நிலையில் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள் என்றாலும், அடிப்படை வசதிகள்கூட இன்னும் கிடைக்காமல் அதிகம் அல்லல்படுவது பழங்குடியின மக்கள்தான். கல்வி, மருத்துவம், குடியிருப்பு, சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி என்று எதுவுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.

திருப்பி அனுப்பப்பட்டதா பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிதி?

ஒவ்வொரு வருடமும் அவர்களின் மேம்பாட்டுக்கென ஒதுக்கப்படும் நிதியே மிகக் குறைவுதான். ஆனால், அந்தச் சொற்பத் தொகையைக்கூட முழுமையாகச் செலவு செய்யாமல் திருப்பியனுப்புவது என்பது, பசியோடு ஆயிரம் பேர் காத்திருக்கையில் அவர்களுக்காக ஆக்கிய உணவைக் கொடுக்காமல் மறுப்பதற்கு ஒப்பானது. கடந்த 2018 முதல் 2021 வரையிலான மூன்று நிதி ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 1,310.94 கோடி ரூபாய் பழங்குடியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 1,045.24 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப் பட்டதுடன், மீதமுள்ள 265.70 கோடியை அரசு கஜானாவில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அந்த நிதியிலிருந்து கடந்த 2019-20 நிதியாண்டில் வனத்துறைக்கு 10 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டில் வனத்துறைக்கு ரூ.67.77 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ. 62.22 கோடி என மொத்தம் ரூ.129 கோடி வரை பிற துறைகளுக்குச் செலவு செய்திருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் சும்மா அடித்துவிட்டவை அல்ல. ஆர்.டி.ஐ மூலம் நான் கேட்ட கேள்விக்கு, பழங்குடியினர் நலத்துறையே பதிலாகக் கொடுத்த தகவல்கள்தான் இவை.

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் அளித்த பணத்திலிருந்து 927 கோடி ரூபாயைச் செலவு செய்யாமல் திருப்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பழங்குடியின மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை அவர்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.

கார்த்திக்
கார்த்திக்

இது பற்றி விளக்கம் கேட்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜைப் பலமுறை தொடர்பு கொண்டும் அவரிடம் பேச முடியவில்லை. அவரின் உதவியாளரிடம் விவரத்தைத் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து தனது விளக்கத்தை அறிக்கையாக அனுப்பியிருந்தார், அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

அதில், “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 2011-2012 முதல் 2020-2021 வரையிலான காலத்தில் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு ரூ. 23,115.90 கோடி. இதில் செலவினம் ரூ. 22,258.52 கோடி, ஒப்படைப்பு 857.37 கோடி. இது 3.71 சதவிகிதம். அலுவலகப் பணியாளர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பணியாளர்களின் ஊதியத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து காலிப்பணியிடத்துக்குரிய தொகை ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முடிவுறாததால் அந்த ஆண்டுகளில் செலவினம் காட்டப்படாமல் தொடர்புடைய அடுத்த ஆண்டுகளில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அந்த ஆண்டுகளில் ஒப்படைப்பு காட்டப்பட்டுள்ளது.

அதனால் நிதி ஒப்படைப்பு அனைத்தும் காலிப் பணியிடங்களுக்கான நிர்வாகச் செலவினங்கள் மற்றும் ஆணையிடப்பட்டு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த இனங்களுக்கான தொகையாகும். இந்தச் செலவினங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயல்விழி செல்வராஜ்
கயல்விழி செல்வராஜ்

ஆர்.டி.ஐ மூலம் கிடைத்துள்ள தகவலுக்கும் அமைச்சர் கொடுத்துள்ள விளக்கத்துக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. அத்துடன், பழங்குடியின மக்களுக்கான நிதியை வேறு துறைகளுக்குச் செலவு செய்துள்ளதாக, ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிகாரிகள் கொடுத்துள்ள தகவல் தொடர்பாகவும் அமைச்சரின் அறிக்கையில் எந்த விளக்கமும் இல்லை.

“மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும்‌ இந்த அரசு பாதுகாக்கும்‌. எந்த உதவி தேவைப்பட்டாலும்‌, என்னைத் தொடர்பு கொள்ளலாம்‌. உங்களுக்காக அரசு அனைத்துவித உதவிகளையும்‌ செய்யத்‌ தயாராக உள்ளது” என்பது நீலகிரியில் பழங்குடியின கிராமத்துக்குச் சென்றபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி.

சொன்னபடியே பழங்குடியின மக்களின் மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism