அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பல்லைப் பிடுங்கும் அதிகாரிகள்... வலுவிழக்கச் செய்யும் அரசுகள்...

 17-வது ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
17-வது ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்!

17-வது ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதி 18-ன் கீழ் புகாரளிக்கப்பட்டால், மாநில தகவல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வெற்றிகரமாக 17-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாததில் தொடங்கி, ‘நமோ’ ஆப் மூலமாக மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி திரட்டப்படுவது வரை பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆர்.டி.ஐ மூலமாகவே அம்பலப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசியலிலும், ஆர்.டி.ஐ உருவாக்கிய தாக்கம் அதிகம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது ஆர்.டி.ஐ தகவல்கள்தான். தி.மு.க ஆட்சியின் தூக்கத்தைக் கெடுப்பதாகவும் ஆர்.டி.ஐ தகவல்கள் இருக்கின்றன.

ஆனால், இப்போது அந்தச் சட்டத்தின் பல்லைப் பிடுங்கும் வேலைகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆர்.டி.ஐ-யை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியத்தையும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேல்முறையீட்டு மனுவாக மாறும் புகார்கள்!

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான காசிமாயன் நம்மிடம் பேசுகையில், “அரசைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை, சாமானியனுக்கும் அளித்திருக்கிறது ஆர்.டி.ஐ. அதன் மூலமாக, அத்திவரதர் தரிசன வி.ஐ.பி பாஸ் வழங்கியதில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதை வெளிக்கொண்டு வந்தேன். 2016 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, டாஸ்மாக் கடைகள் மூலமாக சுமார் 65 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கியில் வரவுவைக்கப்பட்டன. இந்த விவகாரத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தவும் ஆர்.டி.ஐ-தான் உதவியது. தமிழகத்தில், சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் பற்றிய தகவல்களும் சமீபத்தில் ஆர்.டி.ஐ மூலமாக வெளியாகின. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து, அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதிகாரவர்க்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்பதால், யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதி 18-ன் கீழ் புகாரளிக்கப்பட்டால், மாநில தகவல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அந்தப் புகார்களை மேல்முறையீட்டு மனுக்களாக மாற்றி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பும் போக்கு தொடர்கிறது. இதனால், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏதுமின்றி, அவர்களின் ஊழல், லஞ்ச நடவடிக்கை தொடர்கிறது. மாநில தகவல் ஆணையம் இதைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார் விரிவாக.

பல்லைப் பிடுங்கும் அதிகாரிகள்... வலுவிழக்கச் செய்யும் அரசுகள்...

நிராகரிக்கப்படும் மனுக்கள்!

கோவையைச் சேர்ந்த தியாகராஜன், “மாநில தகவல் ஆணையம் தற்போதுவரை பெற்ற புகார் மனுக்களில் 10% வழக்குகளுக்குக்கூட தண்டனை வழங்கப்படவில்லை. இதில், தமிழக அரசுக்கும் ஆணையத்துக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. பிரிவு 2(f) அடிப்படையில் அதிகாரிகள் அளிக்கும் தகவல்கள் எத்தனை பக்கங்கள் இருந்தாலும், மனுதாரர் ஒரு A4 பக்கத்துக்கு ரூ.2 கட்டணம் செலுத்தி பெறத் தயாராக இருந்தால், விவரங்களைத் தர வேண்டும். ஆனால், அதிக தகவல் கேட்கப்பட்டு, பணி செய்யவிடாமல் மனுதாரர் தடுப்பதாகக் கூறி மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன” என்றார்.

மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் ஹக்கீம், “தமிழகத்தில் ஆர்.டி.ஐ வசதியை ஆன்லைனில் கொண்டுவந்ததாகக் கூறுகின்றனர். அதில், 26 துறைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைனில் மாவட்டவாரியாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டால் கேள்விகளை பொதுமக்கள் நேராக அனுப்ப முடியும். மனுக்கள் மற்றும் புகார் விவரங்களை வெளிப்படையாக மக்கள் தெரிந்துகொள்வார்கள். இதெல்லாம் நடந்தால், கணக்கு காட்ட வேண்டும். இதற்காகவே ஒன்றரை ஆண்டாக மாவட்ட அளவில் கேள்வி எழுப்ப முடியாத சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்” என்றார் வேதனையுடன்.

காசிமாயன், தியாகராஜன், ஹக்கீம், ஜெயராமன்
காசிமாயன், தியாகராஜன், ஹக்கீம், ஜெயராமன்

வலுவிழக்கச் செய்கிறார்கள்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 17-வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1,000 பயிற்சிப் பாசறைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது அறப்போர் இயக்கம். அதில், ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்பது, மேல்முறையீடு செய்வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கின்றன. நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற மாநகராட்சி ஊழல்களை, ஆர்.டி.ஐ தகவல்கள் மூலமாகத்தான் வெளிக்கொண்டு வந்தோம். ரேஷன் கொள்முதலில் ஊழல், கட்டட அனுமதியளிக்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தரப்புக்கு 27.9 கோடி ரூபாய் பணம் கைமாறியது என்று நாங்கள் வெளிக்கொண்டு வந்ததெல்லாம் ஆர்.டி.ஐ மூலமாகத் திரட்டப்பட்ட தகவல்கள்தான்.

இந்த தி.மு.க ஆட்சியில், கரூரில் சாலை போடாமலேயே 5 கோடி ரூபாய் பணம் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. அது தொடர்பாகவும் ஆதாரத்துடன் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். ஆர்.டி.ஐ-யில் இரண்டாவது மேல்முறையீடு சென்றால், விசாரணைக்கு வருவதற்கே ஒரு வருடமாகிவிடுகிறது. தகவல் ஆணையத்தை சரியாகப் பணியாற்றக்கூடிய ஆணையமாக மாற்ற வேண்டும். ஆர்.டி.ஐ சட்டத்தை வலிமையிழக்கச் செய்ய தொடர்ந்து அரசாங்கங்கள் முயல்கின்றன. அதையும் மீறித்தான், நாங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டுவருகிறோம்” என்றார்.

பாடத்திட்டத்தில் சட்டம்!

2020 ஜூலை முதல் 2021 ஜூலை வரை நாடு முழுவதுமிருக்கும் 29 தகவல் ஆணையங்களில் நிலுவையிலிருக்கும் புகார் மனுக்கள், மேல்முறையீடுகளின் எண்ணிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது, `சதார்க் நாக்ரிக் சங்கதன்’ என்கிற அமைப்பு. அதில், சுமார் மூன்று லட்சம் முறையீடுகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தரவுகள் ஏதும் வெளியிடப்படவில்லை. அந்த அமைப்பு ஆர்.டி.ஐ மூலமாக எழுப்பிய கேள்விக்கு, ‘தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் தரவுகளைத் தர இயலாது’ என பதிலளித்திருக்கிறது மாநில தகவல் ஆணையம்.

பத்து ரூபாய் ஸ்டாம்பில், அரசாங்கத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் அதிகாரத்தைச் சாமானியனுக்கும் வழங்கியிருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அந்த அதிகாரத்தின் மூலமாக, தங்களுக்குத் தேவையான சாதி, பிறப்பு/இறப்பு, வருவாய் சான்றிதழ்களைக்கூட பொதுமக்கள் பெற இயலும். ஆனால், தங்கள் லஞ்ச, ஊழல் கட்டமைப்பே சுக்குநூறாகிவிடும் என்பதால், ஆர்.டி.ஐ-யின் பயன்பாடுகளைச் சாமானியர்கள் புரிந்துகொள்ள, குறிப்பாக அதிகாரிகள் விடுவதில்லை.

அரசு இயந்திரத்தின் அத்தனை பற்சக்கரங்களையும் கண்காணிக்க ஆட்சி மேலிடத்தால் முடியாது. ஆனால், மக்களால் அது முடியும். பள்ளிப் பாடத்திட்டத்தில், ஆர்.டி.ஐ பயன்பாடு குறித்த பாடங்களை வைத்தால் மட்டுமே, எதிர்கால தலைமுறையாவது இந்த ஊழல் கட்டமைப்பை உடைத்தெறிய முடியும். ஆவன செய்யுமா அரசு?