சமூகம்
Published:Updated:

ஊரடங்கால் உயிர்பெறும் ஆறுகள்!

ஆறுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறுகள்

இனியும் இதே நிலை தொடருமா?

ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் அவற்றை இணைக்கும் கால்வாய்கள் இவை அனைத்தும் நம் மண்ணின் ரத்தநாளங்கள். ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இந்த நரம்பு மண்டலத்தை, வளர்ச்சியின் பெயரால் நாசம் செய்துவிட்டோம்.

தமிழகத்தின் தாமிரபரணி, பவானி, நொய்யல் தொடங்கி காவிரி வரை எந்த ஆறும் இந்தச் சீர்குலைவிலிருந்து தப்பவில்லை. ஆனாலும், அழிக்க இயலாத விதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கை தன்னை தகவமைத்தே வருகிறது. கொரோனா பேரிடர் காலமும் அதற்கு விதி விலக்கல்ல! ஆம், இந்த ஊரடங்கு காலத்தில் மனிதனின் நாசகரச் செயல்கள் குறைந்து, நமது ஆறுகள் உயிர்பெற்று வருகின்றன.

ஆறுகள்
ஆறுகள்

ஈரோடு மாவட்டம், காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்ட செழிப்பான பல நீர் ஆதாரங்களைக் கொண்டிருக்கும் பூமி. ஆனாலும் இந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர், பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் ஆலைக்கழிவுகளே. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ, ‘ஆலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் மாசுக்களை வெளியிடுகின்றன’ என சப்பைக்கட்டுகட்டுகிறார்கள். கண்துடைப்புக்காக அவ்வப்போது ஒன்றிரண்டு சாய ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்து கணக்கு காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இப்படி மாசுபட்டுக் கிடந்த இந்த ஈரோடு மாவட்டத்தைக் கடக்கும் நீர்நிலைகள், தற்போது ஊரடங்கு காரணமாக புத்துயிர் பெற்று வருகின்றன.

இதுகுறித்துப் பேசிய காளிங்கராயன் பாசன சபைத் தலைவர் வேலாயுதம், “சுமார் 23 தோல் ஆலைகள், 450-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் ஈரோட்டின் நீர் ஆதாரங்களை முற்றிலுமாகப் பாழ்ப்படுத்திவிட்டன. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதற்கு துணைபோகிறார்கள். மாசுக் கட்டுப்பாடு வாரியம் காசுக்குக் கட்டுப்பட்ட வாரியமாக மாறிப்போய்விட்டது. இதனால், நீர்நிலைகளின் தண்ணீர் கெட்டதுடன், நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது. சூழல் மாசுபாடு காரணமாக புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதி போன்றவையும் இங்கே அதிகம். பல ஆண்டுகளாக நீடித்துவந்த இந்தப் பிரச்னையை, சுமார் 40 நாள்களில் கொரோனா ஊரடங்கு சரிசெய்திருக்கிறது.

கேசவன் - வேலாயுதம்
கேசவன் - வேலாயுதம்

நீர் ஆதாரங்கள் அனைத்தும் தூய்மையாகி வருகின்றன. அவற்றில் மாசு கலப்பது நின்றுள்ளது. எதிர்காலங்களில் இதே நிலை நீடிக்க, அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாயக் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பவர்கள்மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். சாய ஆலைகளை நீர்நிலைகளிலிருந்து தொலைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் கேசவன், “வீட்டுக் கழிவுகளால்தான் நீர் ஆதாரங்கள் பாதிப்படைகின்றன என, இதுநாள் வரை மாசுக் கட்டுப்பாடு வாரியம் மக்கள்மீது பழிபோட்டுவந்தது. வீடுகளிலிருந்து, ஊரடங்குக்கு முன்பிருந்த அதே அளவில்தான் கழிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆலைகள்தான் இயங்காமல் மூடப் பட்டுள்ளன. இதிலிருந்தே, சாய ஆலைகளாலும் தோல் ஆலைகளாலும் தான் நீர் ஆதாரங்கள் மாசுபட்டுவந்தன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. தற்போது நீரின் கடினத்தன்மை வெகுவாகக் குறைந்துவிட்டது. தோல் ஆலைக் கழிவுகள் ஏற்படுத்திய துர்நாற்றம் இப்போதில்லை. அரசு இதையெல்லாம் உணர்ந்து, ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பதை முற்றிலுமாகத் தடுத்து, எதிர்காலச் சந்ததிக்கு சுத்தமான சூழல் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி, “பவானி, காளிங்கராயன் உள்ளிட்ட நீர்நிலைகளில் மாசு குறைந்திருப்பது உண்மைதான். ஆனால், இது நிரந்தரமல்ல. நீர்நிலைகளில் நகராட்சிக் கழிவுகளும் கலக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் அருகே குடிசைத்தொழில் போல் வீடுகளில் தொட்டி அமைத்து பட்டுத்துணிகளுக்கு சாயம் போடுகின்றனர். அவையும் பவானி ஆற்றில்தான் கலக்கின்றன. இவற்றையெல்லாம் தடுத்தால்தான் நீர்நிலைகள் உயிர்பெறும்” என்றார்.

தளபதி -  கருப்பணன்
தளபதி - கருப்பணன்

“2700 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெருந்துறை சிப்காட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றால் சுற்றுவட்டார கிராமங்கள், நிலத்தடிநீர் ஆகியவை கடுமையாக மாசடைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இந்தப் பாதிப்பு களெல்லாம் குறைந்திருக்கின்றனவா என ஆய்வு நடத்த வேண்டும்” என கோரிக்கைவைக்கிறார், சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி.

ஆறுகள்
ஆறுகள்

சில மாதங்களுக்கு முன்பு, கழிவுகளால் ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் நுரைத்துப் பொங்கி சர்ச்சைகள் கிளம்பின. அப்போது, ‘சோப் போட்டுக் குளிப்பதாலும், வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு களாலும்தான் ஆறு நுரைத்துப் பொங்குகிறது. சாயக் கழிவுகளால் அல்ல’ என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியிருந்தார். இந்த நிலையில், “இப்போதும் வீட்டிலிருந்து வரும் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கின்றன. ஆனால், ஆற்றில் மாசு நுரைத்துப் பொங்குவதில்லையே... மக்கள் சோப்பைப் பயன் படுத்துவதைத் தவிர்த்து விட்டார்களா என்ன?” என்ற கேள்வியுடன் அமைச்சர் கருப்பணனைத் தொடர்பு கொண்டோம். “நீர் மாசுபாடுகள் எல்லாம் பெரிதாகக் குறையவில்லை. கொஞ்சம் குறைந்திருக்கிறது, அவ்வளவுதான். சாய ஆலைகள் மற்றும் தோல் ஆலைகள் 95 சதவிகிதம் சரியாகத்தான் இயங்கு கின்றன. ஒருசிலர் மட்டும் தான் தவறு செய்கிறார்கள். அவர்கள்மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சோப் நுரைதான் ஆற்றில் வந்தது என அன்று நான் சொன்னது உண்மைதான். அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்” என்றார்.

ஆலைகள் மூடப்பட்டி ருப்பதால்தான் மாசு குறைந் திருக்கிறது என்ற விஷயம் வெட்ட வெளிச்சமாகியும், ‘அதிகாரிகளும் அமைச்சரும் இன்னமும் ஏன் ஆலை அதிபர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்பதுதான் பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.

சுத்தமான தாமிரபரணி!

தமிழகத்தின் உயிருள்ள ஆறு தாமிரபரணி. மாயாறு போன்று முழு தூய்மையுடன் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் மற்ற ஆறுகளுடன் ஒப்பிடும்போது இதன் மாசு குறைவு. தவிர, தமிழகத்திலேயே தோன்றி தமிழகத்தின் புன்னைக்காயல் என்னும் இடத்திலேயே கடலில் கலக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை களக்காடு முண்டந்துறை சரணாலயத்தில் அகஸ்தியர் அருவிக்கும் மேலே அடர்ந்த வனத்துக்குள் உற்பத்தியாகி பூங்குளம் என்கிற இடத்தில் சிறு தொட்டி போன்ற அமைப்பில் வழிந்தோடி பாபநாசம் பகுதியில் தரையை வந்தடையும் தாமிரபரணி, அடுத்த சில கிலோமீட்டர் தூரத்திலேயே காகித ஆலை உள்ளிட்ட ஆலைகளின் கழிவுகளால் மாசடைந்துவந்தது. தவிர, திருநெல்வேலி நகருக்குள் நுழையும் வரை கிராமத்தின் கழிவுகளும், நகருக்குள் நுழைந்தவுடன் மாநகராட்சி கழிவுகளும் தாமிரபரணியை அசுத்தப் படுத்திவந்தன. தற்போது ஊரடங்கு காரணமாக, கழிவுகள் கலப்பது பெருமளவு குறைந்திருக்கிறது. பாபநாசம் பகுதி, குறுக்குத்துறை பகுதிகளில் தாமிரபரணி ஆறு, சுத்தமாகக் காட்சியளிப்பதே இதற்கு சாட்சி!

- ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்

படம்: எல்.ராஜேந்திரன்

நிலத்தடிநீர் குறையவில்லை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கோல்டன் ஈகிள், எஸ்.என்.ஜே போன்ற மதுபான ஆலைகள், பெப்சி குளிர்பான ஆலை, ‘ரயில் நீர்’ நிறுவனம் போன்ற நீரை அதிகம் உறிஞ்சும் ஆலைகள் உள்ளன. மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திருப்போரூர் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டைகள் உள்ளன. தற்போது, ஊரடங்கால் ஆலைகள் இயங்கவில்லை. அத்துடன் சென்னை பெருநகரின் நட்சத்திர விடுதிகள், பெருநிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் தேவைக்காக உறிஞ்சப்படும் தண்ணீரின் அளவும் குறைந்திருக்கிறது. இதனால், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிதண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பன்னாட்டு தொழிற்பூங்காக்கள் தற்போது மூடப்பட்டிருப்பதால், நிலத்தடிநீர் குறையவில்லை.

- பா.ஜெயவேல்

ஹோட்டல் கழிவுகள் குறைந்துள்ளன!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பழவந்தான் கட்டளை, சேப்பெருமாள் நல்லூர் உள்ளிட்ட வாய்க்கால்கள் கும்பகோணம் நகருக்குள் ஓடி, அங்கு உள்ள பல குளங்களை நிரப்பிய பிறகுதான் பாசனத்துக்குச் செல்கின்றன. இந்த வாய்கால்களில் கும்பகோணம் நகராட்சிக் கழிவுகள், ஹோட்டல் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் போன்றவை கலப்பதாக நெடுநாள்களாக புகார் இருந்துவருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், ஹோட்டல் கழிவுகள் கலப்பதில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

- கே.குணசீலன்

‘பளிச்’ காவிரி!

காவிரி ஆறு தமிழகத்துக்குள் நுழையும்போதே பெங்களூரு நகரத்தின் கழிவுகளையும் சுமந்துகொண்டுதான் வரும். மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும்போது, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் சாக்கடைகள் கலந்து மேலும் அசுத்தமாகும். அத்துடன், சாயப்பட்டறைக் கழிவுகளும், கோழிப்பண்ணைக் கழிவுகளும், காகித ஆலைக் கழிவுகளும் கலக்கும். தற்போது ஊரடங்கு காரணமாக, காவிரியில் கலக்கும் மாசுகள் குறைந்துள்ளன.

கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யல், அமராவதி மற்றும் நங்காஞ்சி உள்ளிட்ட ஆறுகள் ஓடுகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் வெளியிடும் கழிவுளால் இந்த ஆறுகள் மாசுபடுவதாக புகார் இருந்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் சாயப்பட்டறைகளின் கழிவுகள் கலந்து நொய்யல் ஆற்று நீர் சிவப்பு நிறத்தில்தான் கரூருக்கு வரும். தற்போது, ஊரடங்கால், அமராவதி, நொய்யல் ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதில்லை. காவிரி ஆறு, பல ஆண்டுகளுக்குப் பிறகு பளிச் எனக் காட்சியளிக்கிறது.

- வீ.கே.ரமேஷ், துரை.வேம்பையன்

மீளாத நொய்யல்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை நகரத்தைக் கடந்து கரூர் மாவட்டத்தில் காவிரியுடன் சங்கமிக்கும் நொய்யலின் நிலை பெரியதாக மாறவில்லை என்பதுதான் வேதனை.

இதுகுறித்துப் பேசிய சூழல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம், “கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, 180 கிலோ மீட்டர் தூரம் ஓடிக் காவிரியில் கலக்கிறது. தொடங்கும் இடத்திலிருந்து, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரைதான் தூய்மையாக இருக்கிறது நொய்யல். மீதி 170 கிலோ மீட்டர் தூரம் வரை சாக்கடை யாகத்தான் மாறிக்கிடக்கிறது. கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிக் கழிவுகள் சுத்தி கரிக்கப்படாமல் அப்படியே நொய்யலாற்றில் விடப்படுவது தான் மாசுக்கான காரணம்” என்றார் வருத்தத்துடன்.