Published:Updated:

உயர்ந்துகொண்டே போகும் சாலைகள்...கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

சாலைகள்
பிரீமியம் ஸ்டோரி
சாலைகள்

2018-லிருந்து, பழைய சாலைகளைப் பெயர்த்தெடுக்காமல், புதிய சாலைகள் போடுவதற்குப் பின்னாலுள்ள ஊழல்களை ஆதாரங்களோடு வெளியிட்டோம்.

உயர்ந்துகொண்டே போகும் சாலைகள்...கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

2018-லிருந்து, பழைய சாலைகளைப் பெயர்த்தெடுக்காமல், புதிய சாலைகள் போடுவதற்குப் பின்னாலுள்ள ஊழல்களை ஆதாரங்களோடு வெளியிட்டோம்.

Published:Updated:
சாலைகள்
பிரீமியம் ஸ்டோரி
சாலைகள்

‘புதிதாகச் சாலைகள் அமைக்கும்போது, மில்லிங் அதாவது, ஏற்கெனவே போடப்பட்டு சேதமடைந்திருக்கும் பழைய சாலைகளை நீக்கிவிட்டுப் புதிதாக அமைக்க வேண்டும். அப்போதுதான், சாலைகளின் உயரம் அதிகரிக்காமல் இருக்கும். மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தடுக்கப்படும்’ எனச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றனர். இதைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தலைமைச் செயலாளர் இறையன்புவும் பலமுறை அறிவுறுத்தியும், நேரில் சென்று ஆய்வு நடத்தியும்கூட இன்னும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பழைய சாலைகளை அகற்றாமல்தான் புதிய சாலைகள் போடப்பட்டுவருகின்றன. ``மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவதைவிட்டுவிட்டு, தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள், துணைபோகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிலை மாறும்” எனக் குரல் எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்களும் அறப்போர் இயக்கமும்!

``எச்சரிக்கை... ஆய்வு... மீண்டும் எச்சரிக்கை... ஆய்வு என இந்த விஷயம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் வழக்கம்போலத் தங்கள் இஷ்டத்துக்கு மில்லிங் செய்யாமல்தான் சாலைகளைப் போட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான்’’ என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஜெயராம் வெங்கடேசன்.

உயர்ந்துகொண்டே போகும் சாலைகள்...கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

அவரிடம் பேசினோம். ``2018-லிருந்து, பழைய சாலைகளைப் பெயர்த்தெடுக்காமல், புதிய சாலைகள் போடுவதற்குப் பின்னாலுள்ள ஊழல்களை ஆதாரங்களோடு வெளியிட்டோம். சென்னை மாநகராட்சியில், மக்களின் ஒத்துழைப்போடு மில்லிங் செய்யாமல் போடுவதற்குத் தயாரான பல சாலைகளைத் தடுத்து நிறுத்தினோம். உடனே ஒருசில இடங்களில் சென்னை மாநகராட்சியினர் மில்லிங் போட ஆரம்பித்தனர். தொடர்ந்து, தி.மு.க ஆட்சி அமைந்ததும், முதல்வரும் தலைமைச் செயலாளருமே நேரடியாக இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பித்ததை நல்ல விஷயமாகப் பார்த்தோம். ஆனால், அது நடைமுறையில் இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதே உண்மை.

தலைமைச் செயலாளரின் அறிக்கையில் இரண்டு விஷயங்களை முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று மில்லிங் செய்வது, மற்றொன்று சாலைகளின் உயரத்தை அதிகரிக்காமல் இருப்பது. இவை இரண்டில் சாலை உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்பதுதான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவந்த விஷயம். 4 செ.மீட்டருக்கு மில்லிங் செய்துவிட்டு, 10 செ.மீட்டருக்கு ரோடு போடுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. திருவாரூரில் ஓர் இடத்தில் அப்படித்தான் ஒன்றே கால் அடிக்கு, மில்லிங் செய்யாமலேயே சாலை போட்டார்கள். குரோம்பேட்டை கட்டபொம்மன் நகரிலும் அப்படித்தான் நடந்தது. நாம் புகாரளித்ததும், அதைச் சரிசெய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

எஸ்டிமேட்டில் உள்ளபடிதான் சாலைகள் போடுகிறோம் என ஒருசில துணைப் பொறியாளர்கள் சொல்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான டெண்டர்களில், எந்த அளவுக்கு மில்லிங் இருக்கிறதோ அதேயளவுக்குச் சாலை போடும்படிதான் டெண்டர்கள் இருக்கின்றன. ஒருசில பழைய டெண்டர்களில் மில்லிங் குறைவாகவும், சாலை உயரம் அதிகமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியான டெண்டர்களை கேன்சல் செய்து புதிய டெண்டர்களை வெளியிட வேண்டும். தவிர, சிமென்ட் சாலைகளுக்கும் தலைமைச் செயலாளரின் அறிவிப்பு பொருந்தும். ஆனால், தார்ச்சாலைகளுக்கு மட்டும்தான் எனச் சில ஒப்பந்ததாரர்கள் அவர்களின் விருப்பத்துக்குச் செய்துவருகிறார்கள். தவறு செய்யும் அதிகாரிகள் மீதும், ஒப்பந்ததாரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தத் தவற்றைச் சரிசெய்ய முடியும். தமிழகத்தின் அத்தனைச் சாலைகளுக்கும் முதல்வரும் தலைமைச் செயலாளரும் வந்து ஆய்வுசெய்ய முடியாது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில், 1913 என்கிற எண்ணுக்கு அழைத்துப் புகாரளிக்கலாம் எனச் சொல்கிறார்கள். ஆனால், அந்த அழைப்பு யார் குறித்துப் புகாரளிக்கிறோமோ அந்த இணைப் பொறியாளருக்குத்தான் செல்கிறது. நேரடியாக மூத்த பொறியாளர்களிடமும், ஆணையர்களிடமும் புகாரளிக்கும் வகையில் மெக்கானிசத்தை மாற்ற வேண்டும்’’ என்றார் அவர்.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்
சரவணன்
சரவணன்

ஆனால் ``அமைச்சர்கள் தொடங்கி வட்டம் வரைக்கும் கேட்கிற கமிஷன்களைத் தடுத்தாலே, தரமான சாலைகளைப் போட முடியும்’’ என்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள் சிலர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஒப்பந்ததாரர் ஒருவர், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட கடைசி ஒரு டெண்டரைத் தவிர, மற்ற டெண்டர்களின் எஸ்டிமேஷனில் மில்லிங் வராது. இந்த ஆட்சி வந்த பிறகான கான்ட்ராக்டுகளில்தான் மில்லிங்கும் சேர்ந்தே வருகிறது. ஆனால், இப்போது நாங்கள் பழைய வேலைகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் நாங்கள் மில்லிங் செய்தால், எங்கள் முதலுக்கே மோசமாகிவிடும். தவிர, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒரு வேலைக்கு ஒட்டுமொத்த கான்ட்ராக்டில் 20% கமிஷன் கொடுத்துத்தான் வேலையையே எடுக்க முடியும். லோக்கலில் மாவட்டம், நகரம், வட்டம் வரைக்கும் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது குடைச்சல் கொடுத்து வேலையை நிறுத்திவிடுவார்கள். அடுத்து, அதிகாரிகளுக்கும் அவர்கள் கேட்பதைப் படியளக்க வேண்டும். கமிஷனிலேயே 30% போய்விடுகிறது. இந்த கமிஷன் பஞ்சாயத்துகளைச் சரிசெய்தால்தான் அரசு சொல்கிறபடி தரமாக எங்களால் வேலை செய்ய முடியும்’’ என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், ஆளும்தரப்பின் நிலைப்பாடு குறித்துத் தெரிந்துகொள்ள, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சரவணனிடம் பேசினோம். ``முதல்வரும் தலைமைச் செயலாளரும் ஏற்கெனவே இந்த விஷயத்தில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்கள். அதையும் மீறித் தவறு செய்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கமிஷன் விஷயங்கள் கடந்த ஆட்சியில் இருந்திருக்கலாம். இந்த ஆட்சியில் நிச்சயமாக அதற்கு வேலை இல்லை’’ என்கிறார் அவர்.

கமிஷன்களைக் கட்டுப்படுத்தி, ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்தி, சாலைகளைச் சரிசெய்யுமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism