Published:Updated:

‘திருவாரூர்’ முருகன் டீமுக்கு தலைவனான தினகரன்!

- குருவின் டெக்னிக்கை மறந்ததால் மாட்டிக்கொண்ட கதை...

பிரீமியம் ஸ்டோரி

நான்கு மாநில போலீஸாருக்குத் தலைவலியாக இருந்த பிரபல கொள்ளையன் ‘திருவாரூர்’ முருகன் உயிரிழந்த பிறகும், அவனின் கூட்டாளிகளின் கைவரிசை தொடர்கிறது. அந்தவகையில் முருகனின் வலதுகரமாக இருந்த நெல்லை தினகரன், தனது டீமுக்குத் தலைமையேற்று தன் குருவின் பாணியிலேயே குடும்பத்தினரோடு சென்று கொள்ளையடித்துவிட்டுப் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறான்!

 ‘திருவாரூர்’ முருகன் டீமுக்கு தலைவனான தினகரன்!


கிலோக் கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் பணம் எனப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதே திருவாரூர் முருகனின் ஸ்டைல். திருச்சியில் பிரபல நகைக்கடையின் சுவரில் துளையிட்டு, கொள்ளையடித்த முருகன் தற்போது உயிரோடு இல்லை. முருகனின் கும்பலைச் சேர்ந்த சிலர் இன்னும் ஆங்காங்கே கைவரிசை காட்டிக்கொண்டிருப்பதாகக் கருதப்படும் நிலையில், முருகனின் வலதுகரமாகச் செயல்பட்ட நெல்லை கடையம் பகுதியைச் சேர்ந்த தினகரன், கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக மாறியிருக்கிறான்.

தினகரனுக்கு முருகன்தான் தொழில் குரு. முருகனின் எல்லாவித டெக்னிக்குகளையும் அப்படியே ஃபாலோ செய்வான். பெரிய கட்டடங்களில் கயிறு போட்டு ஏறுவதிலும், நீண்டநாள்களாக ஒரு வீட்டை நோட்டமிட்டு அவர்களின் நடவடிக்கைகளை வைத்தே வீட்டில் எவ்வளவு பணம், நகைகள் இருக்கின்றன என்பதைக் கணிப்பதிலும் கில்லாடி. இந்தநிலையில்தான் ஒரு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த தினகரன், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாமீனில் வெளிவந்திருக்கிறான். சுவரேறிய காலும், பூட்டை உடைத்த கையும் சும்மா இருக்குமா? உடனடியாக அடுத்த கொள்ளைக்குத் தயாரானான். இந்தமுறை அவன் குறிவைத்தது சென்னை அண்ணாநகர். செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதுடன், 2017-ல் அதே பகுதியில் முருகனுடன் கொள்ளையடித்த அனுபவம் தினகரனுக்கு உண்டு என்பதாலும் அந்தப் பகுதியைத் தேர்வு செய்தான்.

 ‘திருவாரூர்’ முருகன் டீமுக்கு தலைவனான தினகரன்!

குடும்பத்துடன் சென்று நோட்டமிடுவது முருகனின் ஸ்டைல். அதே பாணியில் தன் மனைவியுடன் டூ வீலரில் சென்று வீடுகளை நோட்டமிட்ட தினகரன், அண்ணாநகர் 18-வது மெயின்ரோட்டில் ஒரு வீட்டைத் தேர்வுசெய்தான். பங்களா டைப்பிலிருந்த அந்த வீட்டில் கீழ்த்தளம் பூட்டியே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வாரம் நோட்டமிட்டதில் வீட்டின் நிலவரத்தை கணித்ததுடன், மேல்தளத்தில் மட்டுமே ஆட்கள் இருப்பதையும் உறுதி செய்துகொண்டான். இதையடுத்து அக்டோபர் 1-ம் தேதி இரவு தன் மனைவி உஷாராணி, அவரின் தம்பி லோகேஷ், கூட்டாளிகள் சிவா, மோகன், ராணி ஆகியோருடன் அண்ணாநகர் வீட்டுக்குச் சென்றான்.

உஷாராணியும் ராணியும் வெளியில் மறைவாக நின்று கண்காணித்தனர். மாடியில் விளக்குகள் அணைக்கப்பட்டு, அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய தினகரன் டீம் சுவர் ஏறிக் குதித்து, கீழ்த்தளத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றது. கைரேகைகள், அடையாளம் எதுவும் பதிவாகாமல் இருக்க கிளவுஸ், முகமூடி அணிந்துகொண்டு, சிசிடிவி-யை திருப்பிவைத்திருக்கிறார்கள். படுக்கையறை பீரோவை உடைத்தபோது, அதில் தங்க நகைகள் குவியலாக இருந்திருக்கின்றன. அவற்றை அள்ளிப்போட்டுக்கொண்டவர்கள், பூஜை அறையிலிருந்த வெள்ளி சாமி சிலைகளையும் கொள்ளையடித்தனர். பிறகு மேல்தளத்துக்குச் சென்றவர்கள், அங்கு தூங்கிக்கொண்டிருப்பவர்கள் வெளியே வராமலிருக்க, படுக்கை அறையை வெளிப்புறமாகப் பூட்டினர். அங்கிருந்த பீரோவை உடைத்தவர்கள் அதிலிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றார்கள்.

பிறகு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பிலுள்ள ராணியின் வீட்டுக்குச் சென்றவர்கள், பணத்தையும் நகைகளையும் பங்கு பிரித்துக்கொண்டார்கள். இந்தச் சமயத்தில்தான் திருமங்கலம் காவல் நிலையத்தில், அண்ணாநகர் வீட்டின் உரிமையாளரான டிராவல்ஸ் அதிபர் இளங்கோவன் கொடுத்த புகாரில் தினகரனின் குடும்பம் உள்ளிட்ட ஆறு பேரைச் சுற்றிவளைத்திருக்கிறது போலீஸ்.

உஷாராணி, லோகேஷ், சிவா, மோகன், ராணி
உஷாராணி, லோகேஷ், சிவா, மோகன், ராணி

“எங்கள் விசாரணையில் குடும்பத்துடன் சென்று ஒரு டீம் கொள்ளையடித்திருப்பது தெரியவந்ததாலேயே, மறைந்த முருகனின் கூட்டாளிகள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று யூகித்தோம்” என்றபடி நம்மிடம் பேசினார்கள் தனிப்படை போலீஸார்... “கொள்ளை நடந்ததுகூடத் தெரியாமல் தூங்கிய வீட்டின் உரிமையாளர் இளங்கோவன், மறுநாள் காலை வீட்டுக்கு வந்த பால்காரர் உதவியுடன் வெளியே வந்திருக்கிறார். அப்போதுதான் 100 சவரன் தங்க நகைகள், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள், 85,000 ரொக்கம் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்த ஏரியாவின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், திருவாரூர் முருகனின் கூட்டாளி தினகரன் டீம்தான் இந்தக் கொள்ளையை நடத்தியது என்பது உறுதியானது. அவர்களைப் பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ்மில்லர், சிபுகுமார், வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பொதுவாக முருகன் ஒரு கொள்ளையில் ஈடுபட்டால், உடனடியாக வெளிமாநிலத்துக்கு தப்பிச் சென்றுவிடுவான். ஆனால் ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தினகரன் வெளிமாநிலம் செல்லவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்தே எர்ணாவூரில் பதுங்கியிருந்த தினகரன், அவரின் மனைவி உஷாராணி, மைத்துனர் லோகேஷ், கூட்டாளிகள் மோகன், சிவா, ராணி ஆகியோரைக் கைதுசெய்தோம்” என்றார்கள்!

‘திருவாரூர்’ முருகனைப்போல அடுத்து ஒரு ‘நெல்லை’ தினகரன் உருவாகாமல் தடுப்பது போலீஸாரின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு