Published:Updated:

‘ரூட்டு தல’ மோதல்கள்! - வேட்டு வைக்குமா காவல்துறை?

முன்பெல்லாம் ‘ரூட்டு தல’களாக இருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டாங்க. நல்ல விஷயங்களுக்குக் கைகொடுப்பாங்க

பிரீமியம் ஸ்டோரி

‘ரூட்டு தல’ மோதல்கள் சென்னையில் மீண்டும் வெடிக்கத் தொடங்கிவிட்டன. ஓடும் பஸ்ஸில் ஏறும் மாணவர்கள் பஸ்ஸைத் தாக்குவதும், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பதுமாக இருந்த நிலையில் கடந்த வாரம் பஸ் டிரைவரை சரமாரியாகக் கல்வீசித் தாக்கி, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்கள். இதையடுத்து, ஒரே வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை!

அக்டோபர் 4-ம் தேதி, காலை 9 மணி. சென்னை சென்ட்ரலிலிருந்து கீழ்ப்பாக்கம் சென்றுகொண்டிருந்தது அந்த அரசுப் பேருந்து. பச்சையப்பன் கல்லூரி அருகே ஓடும் பஸ்ஸில் `திபுதிபு’வென ஏறிய கல்லூரி மாணவர் கூட்டம் ஒன்று, “பச்சையப்பான்னா கெத்து... மத்ததெல்லாம் வெத்து...” என்று பஸ்ஸை டமார்... டமாரென்று அடித்தபடி கோஷமிட்டார்கள். இது குறித்து கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷுக்குத் தகவல் செல்லவே, உடனடியாக அவர் ஸ்பாட்டுக்கு வந்தார். பஸ்ஸிலிருந்து மாணவர்களை இறக்கியவர், சாலையோரத்திலேயே அவர்களுக்கு கிளாஸ் எடுத்து, பிறகு ஐந்து ஐந்து பேராக அடுத்தடுத்த பஸ்களில் அனுப்பிவைத்தார். இது ஒன்றும் முதல் சம்பவம் அல்ல. ஏற்கெனவே செப்டம்பர் 29-ம் தேதி பள்ளி மாணவர்கள் கும்பல் ஒன்று, டிரைவர்மீது கற்களை வீசித் தாக்கியது.

‘ரூட்டு தல’ மோதல்கள்! - வேட்டு வைக்குமா காவல்துறை?

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து பெரம்பூருக்கு அரசுப் பேருந்து 29-ஏ சென்றுகொண்டிருந்தது. தாசப்பிரகாஷ் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பள்ளிச்சீருடை அணிந்த 15 பேர் ஓடும் பஸ்ஸில் ஏறினார்கள். சிலர் படிக்கட்டில் தொங்கிக்கொண்டே வர... சிலர் கூரையின் மேல் ஏறி நடனமாடத் தொடங்கினார்கள். இதையடுத்து, டிரைவர் மோகனகிருஷ்ணன் பஸ்ஸை ஓரங்கட்டி மாணவர்களுக்கு அறிவுரை கூற முற்பட்டார். ஆனால், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்த மாணவன் ஒருவன், டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைய... சிலர் டிரைவர்மீது கற்களை எறிந்தனர். இதில் அவரது தோள்பட்டை பிய்ந்து ரத்தம் கொட்டியது. தொடர்ந்து பயணிகள் மீதும் கற்கள் வீசப்பட அந்த இடமே போர்க்களமானது. சில நிமிடங்களில் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட சக டிரைவர்கள் சாலையில் பஸ்களை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸார் அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியின் சிசிடிவி-யை ஆய்வு செய்தவர்கள், அடுத்த அரை மணி நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைச் சுற்றிவளைத்தார்கள். ஆறு மாணவர்கள்மீது வழக்கு பதிவு செய்தவர்கள், அவர்களை ஸ்டேஷன் பெயிலில் அனுப்பிவைத்தனர்.

‘ரூட்டு தல’ மோதல்கள்! - வேட்டு வைக்குமா காவல்துறை?

நம்மிடம் பேசிய டிரைவர் மோகனகிருஷ்ணன், ‘‘பட்டாளம், மங்களபுரம், ஓட்டேரி, ஜமாலியா ஏரியாவுல இருந்து வர்ற பசங்கதான் இப்படிப் பண்றாங்க. முன்னெல்லாம் ஒவ்வொரு ஸ்டாப்புலயும் போலீஸ் ரோந்து வண்டி நிக்கும். பசங்க அமைதியா வருவாங்க. இப்ப ரோந்து வண்டி இல்லாததாலதான் இந்தப் பிரச்னையே வருது” என்றார் சலிப்புடன்!

கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் நம்மிடம், ‘‘ ‘ரூட்டு தல’ பிரச்னைகளில் ஈடுபடக் கூடாது என்று அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை அனுப்பியிருக்கிறோம். சென்னை முழுவதும் சிசிடிவி-க்கள் உள்ளதால் தவறு செய்யும் மாணவர்கள் தப்பிக்க முடியாது. விரைவில் பிரச்னைக்குரிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துக்குள்ளேயே சிசிடிவி பொருத்த ஏற்பாடு செய்யப்படும். கடந்த வாரத்தில் மட்டுமே பேருந்துகளில் பிரச்னை செய்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

பேருந்துகளில் மட்டுமல்ல... புறநகர் ரயில்களிலும் ‘ரூட்டு தல’ பிரச்னைகள் தலைதூக்கியிருக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள் தினமும் புறநகர் ரயில்களில் பயணிக்கிறார்கள். ஒவ்வொரு வழித்தடத்திலும் ‘ரூட்டு தல’யாக ஒரு மாணவனைத் தேர்வு செய்பவர்கள், அவர் சொல்வதைத்தான் அனைத்து மாணவர்களும் கேட்க வேண்டும் என்று ராக்கிங்கில் ஈடுபடுகிறார்கள். கடந்த காலங்களில் இவர்களுக்குள் நடந்த மோதலில் வீச்சரிவாள், பட்டாக்கத்தியால் வெட்டிக்கொண்டு பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தற்போது மீண்டும் ‘ரூட்டு தல’ பிரச்னை தலைதூக்கியிருப்பதால், வன்முறைகள் ஏற்படாமலிருக்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

‘ரூட்டு தல’ மோதல்கள்! - வேட்டு வைக்குமா காவல்துறை?

“டிரைவர்களை கெளரவிப்போம்!”

“முன்பெல்லாம் ‘ரூட்டு தல’களாக இருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டாங்க. நல்ல விஷயங்களுக்குக் கைகொடுப்பாங்க” என்கிறார் ஆவடி - சென்னை பஸ்ஸில் ‘ரூட்டு தல’யாக இருந்த சக்தி. தற்போது இவர் துபாயில் இருக்கிறார். “1996-லிருந்து 99 வரைக்கும் எங்க ரூட்டுக்கு நான்தான் தல. அப்பல்லாம் `பஸ் டே’ கொண்டாடுவோம். டிரைவர், கண்டக்டர்களுக்குப் பரிசு கொடுத்து கெளரவப்படுத்துவோம். கைக்காசைப் போட்டு பஸ்ஸை அலங்கரிப்போம். அன்னைக்கு அதிகபட்ச சேட்டைன்னா கானா பாட்டு பாடுறதுதான். அதேமாதிரி எவ்வளவு பெரிய மோதல் வந்தாலும், டிரைவருங்களே பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துவெச்சுடுவாங்க. டிரைவருங்க பேச்சை வேதவாக்கா மதிப்போம். ஆனா, இன்னைக்குத்தான் நிலைமை மாறிப்போச்சு!” என்றார் வேதனையுடன்!

அரக்கோணம் - சென்ட்ரல் புறநகர் ரயிலில் `ரூட்டு தல’யாக இருந்த சதீஷ்குமார் இன்று வழக்கறிஞராக இருக்கிறார். அவரோ, “ரொம்ப தூரத்துல இருந்து வர்றதால எங்ககூட வர்ற பொண்ணுங்களுக்கு நாங்கதான் பாதுகாப்பே கொடுப்போம். அவங்களை யாரும் ஈவ் டீசிங் பண்ண முடியாது. அந்தப் பொண்ணுங்களோட பெற்றோரே “நீங்க இருக்கறப்ப என் பொண்ணுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைப்பா”னு சொல்லி நம்பி அனுப்புவாங்க. அப்பல்லாம் ‘ரூட்டு தல’ங்க இது மாதிரி நல்ல விஷயங்கள்லதான் ஈடுபட்டாங்க” என்றார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு