Published:Updated:

சங்கரன்கோவில்: காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிய ரௌடி! - கேரளாவில் கைதுசெய்த போலீஸார்

போலீஸைத் தாக்கிய ரௌடி அசோகன்
போலீஸைத் தாக்கிய ரௌடி அசோகன்

விசாரணைக்குச் சென்ற காவலர்மீது சேற்றை வீசி எறிந்து அவமானப்படுத்தியதுடன், கல் வீசியும், ஹெல்மெட் கொண்டு அடித்தும் காயம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற ரௌடி கேரளாவில் பதுங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கள்ளத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். கேரளாவில் வேலை செய்துவந்த அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். எந்நேரமும் மது குடித்துவிட்டு, சாலையில் போவோர் வருவோரிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்த அசோகன், நான்கு தினங்களுக்கு முன்பு சாலையில் செல்வோரை அசிங்கமாகப் பேசியதுடன், தாக்கத் தொடங்கியிருக்கிறார்.

விசாரணை நடத்திய தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன்
விசாரணை நடத்திய தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன்

அதனால் அச்சமடைந்த கிராம மக்கள், தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு போன் மூலம் புகார் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சின்னக் கோவிலான்குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் விசாரணைக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களிடம் தலைமைக் காவலர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ரௌடி அசோகன் தகராறு செய்ததுடன், அவர்மீது சாக்கடையை அள்ளி வீசியிருக்கிறார். அத்துடன், அவர்மீது கல்வீசித் தாக்கியதுடன், ஹெல்மெட்டை எடுத்து அடித்துள்ளார்.

மதுபோதையில் இருந்த ரௌடி அசோகனைப் பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைப் பிடிக்க சின்னக் கோவிலான்குளம் காவல் நிலைய எஸ்.ஐ-யான ராமகணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கைது செய்யப்பட்ட அசோகன்
கைது செய்யப்பட்ட அசோகன்

அசோகனின் செயல்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். அது வைரலாகப் பரவியநிலையில், அவரைப் பிடிக்க தனிப்படையினர் முயன்றனர். அசோகனை செல்போன் டவர் மூலம் போலீஸார் கண்காணித்தபோது அவர் கேரளாவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த அசோகனை போலீஸார் கைதுசெய்து அழைத்து வந்தார்கள்.

ரௌடி அசோகனை கொரோனா மருத்துவப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார், அதன் முடிவு வந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு