Published:Updated:

கொரோனா பணிகளுக்கு பணமில்லை... கோவையில் ரூ.1,600 கோடி பாலத்துக்கு டெண்டர்!

கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

குமுறும் செயற்பாட்டாளர்கள்

கொரோனா பணிகளுக்கு பணமில்லை... கோவையில் ரூ.1,600 கோடி பாலத்துக்கு டெண்டர்!

குமுறும் செயற்பாட்டாளர்கள்

Published:Updated:
கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

கொரோனா வைரஸை வீழ்த்த உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு மக்களைக் கைகழுவிவிட்டார். அதே நேரத்தில், அவரது கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலைத்துறை கொரோனா காலகட்டத்திலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தம்விடும் பணிகளில் தீவிரமாக இருக்கிறது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் வரை 10 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.1,600 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம்விடும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. “நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவோ, ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் ஏழை மக்களுக்கு உதவவோ போதிய நிதி கொடுக்காத அரசுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து இவ்வளவு பெரிய நிதி வந்தது?” என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

பி.ஆர்.நடராஜன் - ஜெயராம் வெங்கடேசன்
பி.ஆர்.நடராஜன் - ஜெயராம் வெங்கடேசன்

இதுகுறித்துப் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், “ `கொரோனா காலகட்டத்தில் கூட்டம் கூட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, மத்திய அரசிடம் நிதியையும் கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக ஒப்பந்தம் விடுவதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. கோவையில் இவ்வளவு பெரிய தொகைக்கு இந்த நேரத்தில் பாலம் தேவையில்லை. கோவையில் பிரதான சாலைகளைத் தவிர மற்ற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எட்டு ஆண்டுகளாகப் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்யாமல், தங்களுக்கு லாபம் தரும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “கொரோனா காலகட்டத்தில், தமிழக அரசின் நிதியிலிருந்து நெடுஞ்சாலைத்துறையில் மட்டுமே சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சாலைகள் கட்டமைப்பு மேம்பாடு (சி.ஆர்.ஐ.டி.பி) என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் 4,000 முதல் 5,000 கோடி ரூபாய்வரை நிதி ஒதுக்கி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்துக் கொடுப்பார்கள். அவற்றில் உருப்படியாக எந்தப் பணியும் செய்யாமல், ஏற்கெனவே நன்றாக இருக்கும் நெடுஞ்சாலையை மீண்டும் போடுவது போன்ற கோல்மால்களில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் சி.ஆர்.ஐ.டி.பி நிதி ஒதுக்குவார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதமே நிதி ஒதுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு சி.ஆர்.ஐ.டி.பி-க்கு ஒதுக்கிய நிதியிலேயே இவர்கள் பணியை முடிக்கவில்லை. அதற்குள் எதற்காக இந்த ஆண்டு அவசரமாக நிதி ஒதுக்க வேண்டும்? இதன் பின்னணியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் இருக்கிறது” என்றார்.

“ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே கோவை-பொள்ளாச்சிக்கு இடையே 414 கோடி ரூபாய் மதிப்பிலான கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை முடித்துவிட்டு, தற்போது திருச்சி சாலையில் 250 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. தற்போது அதே நிறுவனத்துக்குத்தான் அவிநாசி சாலை மேம்பாலப் பணிக்கான ஒப்பந்தமும் வழங்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிறுவனத்தின்மீது ஏற்கெனவே சி.பி.ஐ வழக்கு உள்ளது. இப்படி அந்த நிறுவனத்தைச் சுற்றிச் சர்ச்சைகள் இருந்தாலும், மேலிடத்தின் ஆசி இருப்பதால் தமிழகத்தின் முக்கியப் பணிகளுக்கான பல ஒப்பந்தங்களை அந்த நிறுவனம் தன் வசப்படுத்தியுள்ளது” என்றார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கொரோனா பணிகளுக்கு பணமில்லை... கோவையில் ரூ.1,600 கோடி பாலத்துக்கு டெண்டர்!

இது குறித்து விளக்கம் கேட்க, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அரசுச் செயலாளர் கார்த்திக்கைத் தொடர்புகொண்டோம். விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், “நான் தற்போது மீட்டிங்கில் இருக்கிறேன். மீண்டும் அழைத்து விளக்கம் அளிக்கிறேன்” என்று இணைப்பைத் துண்டித்தார். நாம் அவரை மீண்டும் பலமுறை தொடர்புகொண்டபோதும் அழைப்பை ஏற்கவில்லை. கோவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை போனில் அழைத்தோம். அவர்களும் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்கும்பட்சத்தில் விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம். விவரங்களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். “அரை மணி நேரத்துக்குப் பிறகு அழையுங்கள். சம்பந்தப்பட்ட நபருக்கு இணைப்பு தருகிறோம்” என்றார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்பு கொண்டபோது, நிறுவனத்தின் செயலாளர் வெங்கட் என்பவரின் மின்னஞ்சல் முகவரியைக் (venkat@knrcl) கொடுத்து, ‘‘எதுவாக இருந்தாலும் மெயில் அனுப்புங்கள்” என்றார்கள். விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியுள்ளோம். அவர்கள் விளக்கம் அளிக்கும்பட்சத்தில், அது ஜூவி -யில் வெளியிடப்படும்.