Published:Updated:

2,500 கோடி போதைப்பொருளுடன் மும்பை ‘சந்தனம்’ சிக்கிய கதை!

பிடிபட்ட போதைப்பொருள்...
பிரீமியம் ஸ்டோரி
பிடிபட்ட போதைப்பொருள்...

ஒரு லேப்... ஒரு விளம்பரம்... ஓஹோன்னு வாழ்க்கை...

2,500 கோடி போதைப்பொருளுடன் மும்பை ‘சந்தனம்’ சிக்கிய கதை!

ஒரு லேப்... ஒரு விளம்பரம்... ஓஹோன்னு வாழ்க்கை...

Published:Updated:
பிடிபட்ட போதைப்பொருள்...
பிரீமியம் ஸ்டோரி
பிடிபட்ட போதைப்பொருள்...

‘விக்ரம்’ படத்தின் விஜய் சேதுபதியின் ‘சந்தனம்’ கேரக்டர்போல, போதைப்பொருளை லேப்பில் தயாரித்து, உலகம் முழுக்க சப்ளை செய்த முக்கியக் குற்றவாளியைக் கைது செய்திருக்கிறது, மும்பை காவல்துறை. அவரிடமிருந்து 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் மும்பை நகரமே அதிர்ச்சியில் இருக்கிறது.

உலகம் முழுக்க, ‘மெபடிரோன்’ (Mephedrone) எனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் ஏராளம். எனவே, சர்வதேசச் சந்தையில் இதன் விலையும் மிக அதிகம். இதன் போதை கொடூரச் செயலைச் செய்யத் தூண்டும் என்பதோடு, இதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் மூளை பாதிக்கப்படுவதால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழக்கும் என்பதால், 2010-ல் இந்தியாவில் இது தடைசெய்யப்பட்டது.

ஆனாலும், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் நடக்கும் பார்ட்டிகளில் எம்.டி எனப்படும் ‘மெபடிரோன்’ பயன்பாடு தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்த மும்பை போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் மும்பை கோவண்டி என்ற இடத்தில் 250 கிலோ ‘மெபடிரோன்’ போதைப்பொருளுடன் சம்சுல்லா கான் என்பவர் பிடிபட்டார்.

அவரின் கூட்டாளிகள் மூவர் சிக்கிய நிலையில், மெபடிரோன் விநியோகச் சங்கிலியின் தொடக்கப்புள்ளியைப் பிடிக்க மும்பை போலீஸார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பிரேம் பிரகாஷ் சிங் என்பவரைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அவரின் செயல்களைக் கண்காணித்த போலீஸார், போதைப்பொருள் தயாரிப்பதே அவர்தான் என்பதை உறுதிப்படுத்தி, பொறிவைத்துப் பிடித்திருக்கிறார்கள்.

பிடிபட்ட போதைப்பொருள்...
பிடிபட்ட போதைப்பொருள்...

யார் இந்த பிரேம் பிரகாஷ் சிங்?

இது குறித்து மும்பை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் தத்தா நலவாடேயிடம் பேசினோம். “பிடிபட்ட பிரேம் பிரகாஷ் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவன். எம்.எஸ்சி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்துள்ள இவன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வேலை தேடி மும்பைக்கு வந்திருக்கிறான். ஆரம்பத்தில் சில கெமிக்கல் கம்பெனிகளுக்குத் தேவையான ரசாயனங்களை சப்ளை செய்துகொண்டிருந்த இவனுக்கு, சொந்தமாக மருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்திருக்கிறது.

அதனால், தன்னால் 100 வகை கெமிக்கல்கள் வரை தயாரிக்க முடியும் என்று டெலிகிராம் குரூப் ஒன்றில் விளம்பரம் செய்திருக்கிறான். அதைப் பார்த்து யாராவது ஆர்டர் கொடுப்பார்கள் என்பது அவனது எதிர்பார்ப்பு. ஆனால், அவனைத் தொடர்புகொண்டது ஒரு போதைப்பொருள் வியாபாரி. “நீங்கள் ஏன் எனக்கு ‘மெபடிரோன்’ தயாரித்துக் கொடுக்கக் கூடாது?’ எனக் கேட்டு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் அந்த வியாபாரி.

அதை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்ட பிரேம் பிரகாஷ் சிங், சாம்பிளுக்கு 50 கிராம் தயாரித்து அந்த வியாபாரிக்கு அனுப்பியிருக்கிறான். அதன் தரத்தைப் பார்த்து வியந்துபோன வியாபாரி, பிரேம் பிரகாஷ் சிங்குக்கு தொடர்ந்து ஆர்டர் கொடுத்ததுடன் அட்வான்ஸாகவும் பெரும் தொகையை அனுப்பியிருக்கிறார்.

பிரேம் பிரகாஷுக்கு ஏற்கெனவே கெமிக்கல் வியாபாரிகளுடன் தொடர்பு இருந்ததால், மூலப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கவில்லை. அதனால் மாதம்தோறும் டன் கணக்கில் போதைப்பொருள் தயாரித்து மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதிகளின் வியாபாரிகளுக்கு சப்ளை செய்திருக்கிறான். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறான்.

எங்களிடம் பிடிபட்டபோது, அவனிடம் சில கிராம் போதைப்பொருளே இருந்தது. தன் லேப், குடோன் பற்றி அவன் வாயைத் திறக்கவே இல்லை. தொடர் விசாரணையால், எங்கள் காவலர் ஒருவரிடம், தன்னை விடுவிக்க ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுப்பதாகப் பேரம் பேசினான் அவன். அந்தக் காவலரை அவனுக்கு ஒத்துழைப்பதுபோல நடிக்கவைத்து, பணத்தை வாங்க அனுப்பினோம். அப்படி அவனது குடோனைக் கண்டுபிடித்து அங்கிருந்த 705 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்தோம்.

குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரிலும் அவனுக்கு குடோன் இருப்பது தெரியவந்ததால் அங்கும் ரெய்டு நடத்தி 512 கிலோ பறிமுதல் செய்தோம். இந்தக் கும்பலிடலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.2500 கோடி. இந்தக் கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும் விரைவில் பிடிப்போம்” என்றார், நம்பிக்கையுடன்.

பிரேம் பிரகாஷ் சிங்
பிரேம் பிரகாஷ் சிங்

கோடிக்கணக்கில் குவிந்த சொத்து!

நம்மிடம் பேசிய மற்றோர் அதிகாரி, “ஆர்டர் கிடைத்தவுடன் பிரேம் பிரகாஷ் சிங் சரக்குகளைத் தானே தயாரித்து, தானே எடுத்துச் செல்வான். யாரையும் நம்பிப் பொறுப்புகளைக் கொடுப்பதில்லை. போலீஸாரிடம் பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக டெலிவரி செய்யப்படும் இடத்தையும் அடிக்கடி மாற்றியிருக்கிறான். ஒரு வியாபாரிக்கு அதிகபட்சமாக 25 கிலோ அளவுக்கு மட்டுமே போதைப்பொருளை சப்ளை செய்வான். உதவிக்கு ஏழு பேரை மட்டுமே வைத்துக்கொண்டு நாடு முழுவதும் 35 மொத்த வியாபாரிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்திருக்கிறான். போதைப்பொருள் விற்பனை மூலம் மும்பை மட்டுமின்றி குஜராத்திலும் கோடிக்கணக்கில் சொத்துகள் குவிந்திருக்கின்றன.

அவனுடைய மனைவிக்கு இந்தச் சொத்துகள் நியாயமான முறையில் சம்பாதித்ததுதானா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோதெல்லாம், ‘நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு கெமிக்கல் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதன் மூலம் பணம் வருகிறது’ என்று சொல்லிச் சமாளித்திருக்கிறான்” என்றார்.

பிரேம் பிரகாஷ் சிங் சிக்கியதால், அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் போதைப்பொருள் வியாபாரிகள். ஆனால் மொத்தக் கும்பலையும் பிடிக்கத் திட்டம் வகுத்துக் காத்திருக்கிறது, மும்பை காவல்துறை!