Published:Updated:

மஹாராஷ்டிரா: கொரோனாவை வெல்லும் கிராமத்திற்கு ரு.50 லட்சம் பரிசு - முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனாவை முற்றிலும் அகற்றும் கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பாதிப்பில், நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிராவில் இப்போது தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தொற்று குறைந்த மாவட்டத்தில் மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் மே மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இப்போதுதான் தொற்று மற்றும் உயிரிழப்பு குறைந்து வருகின்றன. நகரங்களில் தொற்று குறைய ஆரம்பித்துள்ள நிலையில் கிராமங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களை ஊக்குவிக்கும் வகையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் கிராமங்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு
கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு

இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே ஆற்றிய உரையில், ``கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் கிராமங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருவாய் மண்டலத்திலும் 3 கிராமங்கள் இதற்காக தேர்வு செய்யப்படும். இதில் முதல் பரிசாக 50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.25 லட்சமும், மூன்றாவது பரிசாக 15 லட்சமும் வழங்கப்படும். `எனது கிராமம் கொரோனா இல்லாதது' என்று இந்த திட்டம் அழைக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா: `பாதிப்பு குறைந்திருக்கிறது; ஆனால் கட்டுப்பாடுகள் தொடரும்!’ - உத்தவ் தாக்கரே

மாநிலம் முழுவதும் 6 வருவாய் மண்டலங்கள் இருக்கின்றன. ஒரு மண்டலத்துக்கு 3 கிராமங்கள் வீதம் மொத்தம் 18 கிராமங்களுக்கு பரிசு வழங்கப்பட இருக்கிறது. இதற்கான மொத்த தொகை 5.4 கோடி ரூபாய். இதில் பரிசு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையை கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்னே என்ற கிராமதில் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதில் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ருதுராஜ் தேஷ்முக்(21) வெற்றி கண்டுள்ளார். அவரின் சிறப்பான சேவையை முதல்வர் பாராட்டியதாகவும், இது போன்ற தலைவர்களை முதல்வர் நேரில் சந்தித்து எப்படி கொரோனாவை ஒழித்தீர்கள் என்று கேட்டறிய திட்டமிட்டு இருப்பதாகவும், அதனை மற்ற பகுதியில் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் முஸ்ரிப் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா: `வேதனையாகத்தான் இருக்கிறது; 3-ம் அலை வரலாம்!’ - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

கிராமங்கள் கொரோனாவை ஒழிப்பதில் முழு வேகத்துடன் செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பரிசுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பை அருகில் உள்ள வசாய்-விரார் பகுதியில் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. மத்திய அரசு இன்னும் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காத நிலையில் மும்பை அருகே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு