அரசியல்
அலசல்
Published:Updated:

ரூ.40 லட்சம் தார் ரோட்டை காணலைங்க... - கண்டுபிடிக்கக் கோரும் ஆர்.டி.ஐ ஆர்வலர்!

ஆர்.டி.ஐ
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.டி.ஐ

எப்படியாச்சும், ‘காணாமல்போன’ ரோட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுங்க ஆபீஸர்ஸ்!

‘‘வெறும் மெட்டல் ரோட்டைப் போட்டுட்டு, தார் ரோடு போட்டதா 40 லட்ச ரூபாயை ஆட்டையப் போட்டுட்டாங்கய்யா..!’’ என வடிவேலு காமெடி பாணியில் குற்றம்சாட்டுகிறார் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர்.

திருச்சி, திருவெறும்பூர் வாளவந்தான் கோட்டை ஊராட்சியில் இருக்கின்றன ரெட்டியார் தோட்டம் மற்றும் அன்னை தெரசா நகர். இந்தப் பகுதிகளிலுள்ள மண் சாலைகள் 28 லட்சம் ரூபாய் செலவில் மெட்டல் ரோடாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. பின்னர் இந்த மெட்டல் ரோட்டின் மேலேயே தார்ச் சாலை அமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் செலவு கணக்கு காட்டப்பட்டிருப்பதுதான் தற்போது வில்லங்கப் புகாராகியிருக்கிறது.

ரூ.40 லட்சம் தார் ரோட்டை காணலைங்க... - கண்டுபிடிக்கக் கோரும் ஆர்.டி.ஐ ஆர்வலர்!

இது குறித்துப் பேசுகிற ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ஏ.எம்.பாலசுப்ரமணியன், “ரெட்டியார் தோட்டம் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 650 மீட்டர் நீளம், 3.75 மீட்டர் அகலத்துக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் மெட்டல் ரோடு போட்டாங்க. பிறகு ஒரு மூலையில் வெறும் 235 மீ நீளத்துக்கு மட்டும் தார் ரோடு போட்டாங்க. ‘மெட்டல் ரோடு போட்டு ரெண்டு வருஷமாகியும் ஏன் இன்னும் முழுசா தார் ரோடு போடலை’ன்னு ஆர்.டி.ஐ-ல தகவல் கேட்டேன். அதுக்கு ‘ரூ.11.7 லட்ச ரூபாய்க்கு உங்க ஏரியாவுக்கு தார் ரோடு போட்டாச்சு’ன்னு பதில் வந்துருக்கு. ஆனா, போடாத அந்த ரோட்டை, அதிகாரிகள் சிலர் நேர்ல வந்து பார்த்து ஆய்வுசெய்து, ‘தரமாகப் போடப்பட்டிருப்பதாக’ சான்றளித் திருப்பதாகவும் தகவல் கொடுத்துருக்காங்க.

அன்னை தெரசா நகரில், 2020-லேயே மண் சாலையை மெட்டல் ரோடா மாத்தியிருக்காங்க. அங்கேயும் இதுவரைக்கும் தார் ரோடு போடலை. ஆனா, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலமாக ரூ.28.94 லட்ச ரூபாய்க்கு தார் ரோடு போட்டதாக மெட்டல் ரோட்டுக்கு பக்கத்துலயே போர்டு வெச்சுருக்காங்க. ரெண்டு பகுதிகள்லயும் கிட்டத்தட்ட 38 லட்ச ரூபாய்க்கு போட்ட மெட்டல் ரோடு, தார் ரோடு போடாததால குண்டும் குழியுமா கெடக்கு. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஊழல் செஞ்சுடலாம். ஆனா, உண்மையை மறைக்க முடியாது’’ என்றார் கொதிப்பாக.

ஏ.எம்.பாலசுப்ரமணியன்
ஏ.எம்.பாலசுப்ரமணியன்

திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) லலிதாவிடம் அன்னை தெரசா நகர் தார் ரோடு குறித்துக் கேட்டபோது, “என்னது ரோடு போடலையா... நல்லா பார்த்தீங்களா... எங்க இன்ஜினீயர்கிட்ட என்னன்னு கேட்டுட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்’’ என்றவாறே நமது அழைப்பைத் துண்டித்தார். அதன் பிறகு நமக்கு அவர் பதில் அளிக்கவே இல்லை.

திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) தரிடம் ரெட்டியார் தோட்டம் தார் ரோடு குறித்து விளக்கம் கேட்டபோது, “நான் இங்கே பொறுப்புக்கு வருவதற்கு முன்பே இதெல்லாம் நடந்திருக்கின்றன. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் விசாரணை செய்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் இது சம்பந்தமான ரிப்போர்ட் அனுப்பப் பட்டிருக்கிறது” என்றார் நழுவலாக.

ரூ.40 லட்சம் தார் ரோட்டை காணலைங்க... - கண்டுபிடிக்கக் கோரும் ஆர்.டி.ஐ ஆர்வலர்!

இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சையிடம் பேசியபோது, “ஆர்.டி.ஐ-யில் தவறுதலாகத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். உங்களிடம் போனில் தகவல் கொடுப்பதைவிட, நேரில் வாங்க... பேசிக்கொள்ளலாம்” என்றார்.

இறுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் இந்தப் பிரச்னை பற்றிக் கேட்டோம். “ரோடே போடாமல், போட்டதாகச் சொல்ல 99 சதவிகிதம் வாய்ப்பு இல்லை. ஒருவேளை அங்கே ஏதாவது பிரச்னையால் கட்டுமானப் பணிகள் பாதியில் நின்று போயிருக்கலாம். அல்லது ஆர்.டி.ஐ-ல் தவறாகத் தகவல் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே விவரங்களை எனக்கு அனுப்புங்கள். என்னவென்று பார்க்கிறேன். நீங்கள் சொல்வதுபோல், தார் ரோடு போடாமல் நிதி முறைகேடு நடந்திருந்தால், நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

எப்படியாச்சும், ‘காணாமல்போன’ ரோட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுங்க ஆபீஸர்ஸ்!