Published:Updated:

செலவு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு ரூ.4.23 கோடி... ஆறுமுகசாமி ஆணையத்துக்கு?!

ஜெயலலிதா மரணம் குறித்தும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றியும் விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்குக் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஏதாவது பெரிய பிரச்னை அல்லது சட்டம், ஒழுங்கு சீரழிவு போன்றவை ஏற்படும்போதெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் விசாரணை ஆணையம் அமைப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. அந்த வகையில், கடந்த 20 வருடங்களில் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணை ஆணையம் குறித்து கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பிரம்மா
விசாரணை ஆணையம் குறித்து கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பிரம்மா

இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தலைமைச் செயலகத்திலுள்ள சட்டத்துறை செயலர் ஆகியோருக்கு ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. அதன்படி, 2001 முதல் 2021 வரை 24 விசாரணை கமிஷன்கள அமைக்கப்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் பிரம்மா, ``கடந்த 2001 முதல் 20 வருடங்களில் 24 ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் 154 பேரிடம் விசாரித்திருக்கிறது. இதுவரை சம்மன் அனுப்பியும் யார் ஆஜராகவில்லை என்று கேட்டதற்கு, அது பற்றி பதில் சொன்னால் விசாரணை பாதிக்கும் என்று காரணம் சொல்லிவிட்டார்கள்.

நீதிபதி ஆறுமுகசாமி
நீதிபதி ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இதுவரை 3,52,78,534 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019, ஏப்ரல் 26-ம் தேதி தடைவிதித்திருப்பதால் இதுவரை விசாரணை முழுமையடையவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த ஆணையத்துக்கு இதுவரை 4,23,65,557 ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்திருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு