அலசல்
சமூகம்
Published:Updated:

RTI அம்பலம்... குடிமராமத்து திட்டத்தில் ஏப்பம் விட்ட கோடிகள்! - பதில் சொல்வாரா முதல்வர் பழனிசாமி?

சங்கேந்தி ஏரி
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கேந்தி ஏரி

பூவாளூரில் தன் நிலத்தில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெரியசாமியிடம் பேசினோம்

ஜூலை 15-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க உறுப்பினர் கே.என்.நேரு “கிராம தலைவர்கள், விவசாயிகள் முன்னிலையில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த முதல்வர், “நிலத்தடி நீரைப் பாதுகாக்க தி.மு.க-வைவிட அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 85 ஆண்டுகளுக்குப் பிறகு 100 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டிருக்கிறது. அதில் எடுக்கப்பட்ட வண்டல்மண், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. 2019-20ம் ஆண்டுக்கான குடிமராமத்துப் பணிகளுக்கு 1,829 ஏரிகள் தேர்வுசெய்யப்பட்டு, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

RTI அம்பலம்... குடிமராமத்து திட்டத்தில் ஏப்பம் விட்ட கோடிகள்! -  பதில் சொல்வாரா முதல்வர் பழனிசாமி?

உண்மைதான். குடிமராமத்துப் பணிகளுக்காக 2016-17ம் ஆண்டு 100 கோடி ரூபாயும், 2017-18ம் ஆண்டு 338 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டன. ஆனால், பணிகள் முழுமையாக நடந்தனவா அல்லது ஆவணங்களில் மட்டும் பணிகள் நடைபெற்றனவா என்று சந்தேகங்கள் எழவே, விவரங்கள் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு பொதுப்பணித் துறைக்கு விண்ணப்பித்திருந்தோம். மண்டலம்வாரியாக பதில்கள் வந்தன. அவற்றில் ஒவ்வோர் ஏரிக்கும் சராசரியாக இரண்டு கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. `அடேங்கப்பா அவ்வளவு பணமா! சரி, இருக்கட்டும்... பணிகள் நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த ஏரிகள் எல்லாம் எப்படி இருக்கின்றன?’ பதில் வந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு களம் இறங்கினோம்.

மாதானம் ஏரி
மாதானம் ஏரி

2016-17ம் ஆண்டு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள பூவாளூரில் மாதானம் ஏரியை இரண்டரை கோடி ரூபாயில் தூர்வாரியதாகச் சொல்கிறது ஆர்.டி.ஐ தகவல். சுமார் 49 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இந்த ஏரி. பூவாளூர் மட்டுமன்றி அருகில் உள்ள பெரவலநல்லூர், காட்டூர், வெள்ளனூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் பாசன வசதியை வழங்குவது இந்த ஏரிதான்.

உண்மையான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் தூர்வாரினால் ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் கமிஷன் கேட்டு தொல்லை செய்கின்றனர். முறையாகத் தூர்வாரவில்லை என்று கேள்வி கேட்டால், அடியாள்களை வைத்து மிரட்டுகிறார்கள்.

பாதியில் நின்ற பணிகள்... செலவுக் கணக்கோ ரூ. 2.5 கோடி!

பூவாளூரில் தன் நிலத்தில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெரியசாமியிடம் பேசினோம். “மாதானம் ஏரியில் நீர் இருந்தால் கடல்போல் இருக்கும். சமீபகாலமாக ஏரியில் தண்ணீர் வரத்து இல்லை. பராமரிப்பும் குறைந்துவிட்டது. காவிரி ஆறு மற்றும் உப்பாறு களில் தண்ணீர் வந்தால், ஒன்பது அடி ஆழம்கொண்ட இந்த ஏரி நிரம்பி வழியும். ஆனால், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் கடந்த சில வருடங்களாக வறண்டு கிடக்கிறது ஏரி. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த ஏரியைத் தூர்வாரியது பொதுப்பணித் துறை. ஆனால், இவ்வளவு ரூபாய் செலவாகியிருக்காது” என்றார்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

மாதானம் ஏரிக்குச் சென்றோம். அங்கு ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் மண் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் விசாரித்தோம்.

“கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏரியில் இருந்த மண்ணை அள்ளி, ஏரியின் கரை பலப்படுத்தப்பட்டது. ஆனால், வரத்து வாய்க்கால் சரிசெய்யவில்லை. வேலை செய்துகொண்டிருந்தபோதே மழை வந்து விட்டதால், பணியைப் பாதியில் விட்டுவிட்டார்கள். இப்போது, குடிமராமத்து திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர், மாவட்டம் முழுக்க உள்ள ஏரிகளில் விவசாய நிலங்களுக்கு மணல் எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி மண் எடுக்கப்படுகிறது” என்றனர்.

சங்கேந்தி ஏரி
சங்கேந்தி ஏரி

அவர்களிடம் “முன்பு செய்த பணிக்கு 2.5 கோடி ரூபாய் செலவானதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது, உண்மையா?” என்று கேட்டோம். அதிர்ச்சியில் உறைந்தவர்கள், “உண்மையிலேயே இவ்வளவு தொகை செலவு செய்தார்களா?” என்று வாயடைத்துப் போனார்கள்.

கண்துடைப்புப் பணிகள்... செலவுக்கணக்கோ ஏழரைக் கோடி!

2017-18ம் ஆண்டு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சங்கேந்தி ஏரி, கரூர் உப்பிட்டமங்கலம் ஏரி, அரியலூர் மாவட்டம் அப்பாவு மூப்பனார் ஏரி, சிவசுப்ரமணிய உடையார் ஏரி ஆகியவற்றை 7.51 கோடி ரூபாயில் பொதுப்பணித் துறையால் தூர்வாரப்பட்டன என்று ஆர்.டி.ஐ தகவல் குறிப்பிடுகிறது. சங்கேந்தி ஏரிக்குச் சென்றோம். சுமார் 353 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரியை சுமார் 59 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியதாக அங்கும் ஓர் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தது பொதுப்பணித் துறை.

அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் பேசினோம். “1300 ஏக்கர் பாசன நிலங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் வழங்கிவந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏரியைத் தூர்வாருவதாகச் சொன்ன அதிகாரிகள், ஏரிக்குள் வாய்க்கால் வெட்டுவதுபோல் வண்டி மூலம் மண் அள்ளி, ஏரிக்குள்ளேயே போட்டார்கள். இப்படி கண்துடைப்புக் காக வேலை செய்கிறார்களே என்று கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அவர் நேரில் வந்து ஆய்வுசெய்து, அதிகாரிகளைத் திட்டினார். இதனால், கொட்டிய மண்ணை எடுத்து கரையில் போட்டார்கள். ஆனால், இதற்கு இவ்வளவெல்லாம் செலவு ஆகியிருக் காது” என்றார் அதிர்ச்சி விலகாமல்.

 உப்பிட்டமங்கலம் ஏரி
உப்பிட்டமங்கலம் ஏரி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் இருக்கும் அப்பாவு மூப்பனார் ஏரி, சிவசுப்ரமணிய உடையார் ஏரி ஆகிய இரு பெரிய ஏரிகளுக்குப் பயணம் செய்தோம். அப்பாவு மூப்பனார் ஏரிப் பாசனப் பகுதி விவசாயி நல்லதம்பியிடம் பேசினோம். “குடிமராமத்துப் பணி என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு ஏரிகளுமே சாட்சி. அப்பாவு மூப்பனார் ஏரியால் சுற்றி உள்ள கிராமங்களில் 300 ஏக்கருக்கும்மேல் பாசன வசதி பெறுகின்றன. கட்டாந்தரையாக இருந்த ஏரியைத் தூர்வாரக்கோரி தொடர்ந்து மனு கொடுத்தோம். 2017-18 அரசுக் கொறடா தாமரை ராஜேந்திரனின் ஆதரவாளர்களான சாமிநாதன், சண்முகம் ஆகியோர் இருபது லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்தார்கள். பிறகு கடந்த வருடம் பெய்த மழையைக் காரணம்காட்டி தூர்வாரும் பணியைக் கிடப்பில் போட்டார்கள். பிறகு, ஒப்பந்தத் தொகையில் மூன்று லட்சம் ரூபாயை அதிகமாக்கி வாங்கினார்கள். ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் ஐந்து லட்சம் ரூபாய்க்குக்கூட வேலை நடந்திருக்காது.

RTI அம்பலம்... குடிமராமத்து திட்டத்தில் ஏப்பம் விட்ட கோடிகள்! -  பதில் சொல்வாரா முதல்வர் பழனிசாமி?

இதே ஒன்றியத்தில் உள்ள சிவசுப்ரமணிய உடையார் ஏரிக்கு 16 லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டு நிதி இல்லை என்று பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கும் ஐந்து லட்சம் ரூபாய்க்குக்கூட வேலை நடந்திருக்காது. தற்போது கொறடாவின் ஆதரவாளர்களே போலியாக ஒரு சங்கத்தை உருவாக்கி, மீண்டும் அதே ஏரியில் தூர்வாரும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று ஆதங்கப்பட்டார்.

கேள்வி கேட்டால் மிரட்டல்!

மக்கள் சேவை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம். “உண்மையான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் தூர்வாரினால் ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் கமிஷன் கேட்டு தொல்லை செய்கின்றனர். முறையாகத் தூர்வார வில்லை என்று கேள்விகேட்டால் அடியாள்களை வைத்து மிரட்டுகிறார் கள். அப்பாவு மூப்பனார் ஏரி, சிவசுப்ரமணிய ஏரி ஆகிய ஏரிகள் ஒரு ஏக்கர் அளவுக்குக்கூட தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில் உள்ளன. இந்த இரு ஏரிகளிலும் மொத்த தொகையான 39 லட்சம் ரூபாய்க்கும் பொய்யான கணக்கைக் காட்டியிருப் பார்கள். முறைகேடு செய்த அ.தி.மு.க-வினர் மீதும் அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் கோபமாக!

சம்பந்தப்பட்ட ஏரிகளின் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் சிவக்குமாரிடம் பேசினோம். “அந்த ஏரிகளில் மதகுகள் சரியில்லை. கால்வாயை சரிசெய்ய வேண்டியிருந்தது. அதனால் இரண்டு ஏரிகளுக்கும் அதிக அளவில் செலவுபிடித்தது. மூன்று கட்டங்களாக ஆய்வு செய்தோம். ஏரியில் வேலைகளைச் சரியாகத்தான் செய்திருந்தார்கள்” என்றார்.

(அடுத்த இதழிலும் தொடரும்)