Published:Updated:

பாழாகும் இரண்டாவது சுதந்திரம்! - ஆர்.டி.ஐ அவலங்கள்

ஆர்.டி.ஐ அவலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.டி.ஐ அவலங்கள்

‘ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் மர்மமான முறையில் இறப்பது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு, அக்டோபர் 12-ம் தேதி... தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) அமலுக்கு வந்த இந்த நாள், இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகப் பலராலும் கொண்டாடப்பட்டது. ‘சாமானியர்களும் அரசு நிர்வாகத்தின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம்’ எனக் கொண்டாடப்பட்ட ஆர்.டி.ஐ அமலுக்கு வந்து, 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போதோ, ‘‘ஆர்.டி.ஐ அமலுக்கு வந்த நோக்கமே அழிக்கப்பட்டு, அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகவைத்துவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேனியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறும் தகவல்கள் `திடுக்’ ரகம். ‘‘கடந்த காலங்களைவிட தற்போது ஆர்.டி.ஐ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல, தகவல் ஆணையமும் அரசு அலுவலர்களும் தங்களைத் தகவமைத்துக்கொண்டு, எப்படியெல்லாம் தகவல்களை வழங்காமல் தப்பிப்பது எனக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு, ‘ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் மர்மமான முறையில் இறப்பது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை விவகாரங்கள்துறை அமைச்சகம் 2011-ம் ஆண்டு கடிதம் எழுதியது. மீண்டும் 2013-ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்புக்காக ’டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், `அப்படியொரு கடிதமே எங்களுக்கு வரவில்லை’ எனக் கூறிவிட்டனர். ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டதற்காகப் பலமுறை கொலை மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறேன். நான்கு முறை தாக்குதலுக்கும் உள்ளானேன்’’ என்றார்.

லோகநாதன் - ராமகிருஷ்ணன் - ஆனந்தராஜ்
லோகநாதன் - ராமகிருஷ்ணன் - ஆனந்தராஜ்

‘‘ஆரம்பத்தில் தகவல் ஆணையத்தில் நல்ல அலுவலர்கள் இருந்தனர். போகப்போக ஆளும்கட்சியில் பதவி இல்லாதவர்களுக்குப் பதவி கொடுக்கும் இடமாக ஆணையம் மாறிவிட்டது. தலைமைச் செயலாளர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேரும் இணைந்துதான் தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை அப்படியொரு விஷயம் நடந்ததேயில்லை. தலைமைச் செயலாளரும் முதல்வரும் இணைந்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிப்பார்கள். இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

`ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், 30 நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்’ என்று விதி இருக்கிறது. அப்படி வழங்காதபோது, முதல் மேல்முறையீடு செய்தால், 45 நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அதேசமயம், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்தால், எத்தனை நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை. ‘2012-ம் ஆண்டு தகவல் ஆணையத்தில் எத்தனை மனுக்கள் விசாரணையில் உள்ளன?’ என்று கேட்டேன். இரண்டாவது மேல்முறையீடு செய்து ஐந்தாண்டுகளாகவிட்டன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இப்போதுவரை பதிலில்லை. எனக்கே சலிப்பாகிவிட்டது’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் லோகநாதன் ஆதங்கத்துடன்.

மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ஆனந்தராஜ், ‘‘இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது இதை மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்த்தோம். ஆனால் அப்போதே, `தகவல் தரலாம்’ என்பதைப்போல, `தகவல் தரக் கூடாது’ என்பதற்கும் சில பிரிவுகளை வைத்தனர். அந்தப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றனர். 80 சதவிகித பொது தகவல் அலுவலர்களுக்கு இது குறித்து முழுத் தெளிவு இல்லை.

தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளிடம், ஒரே மாதிரியான தகவலைக் கேட்டேன். அதற்கு அனைவருமே வேறுபட்ட தகவல்களை வழங்கினர். ஒருவர் 50 பக்க தகவல்களை இலவசமாக வழங்கினார். மற்றொருவர், ‘ஒரு பக்க தகவலுக்கு 2 ரூபாய் கொடுங்கள்’ என்று 30 ரூபாய் செலவு செய்து தபால் போட்டார். சிலர், ‘மேல்முறையீடு செய்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மெத்தனமாக உள்ளனர். பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டிருக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் இதேநிலைதான்’’ என்றார் வேதனையுடன்.

பாழாகும் இரண்டாவது சுதந்திரம்! - ஆர்.டி.ஐ அவலங்கள்

நாடு முழுவதும் 2005-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 3.3 கோடி ஆர்.டி.ஐ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 2.2 லட்சம் மேல்முறையீடு வழக்குகள், புகார்கள் இப்போதுவரை பெண்டிங்கில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘‘பொதுத்தகவல் அலுவலர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழு வைத்திருக்கின்றனர். எந்த மனு வந்தாலும், அதை அந்தக் குழுக்களில் ஆலோசித்து, சம்பந்தமே இல்லாத வழக்குகளையெல்லாம் சுட்டிக்காட்டி பதில் தர மறுக்கின்றனர். சட்டரீதியாக வலுவாக இருப்பவர், அதைக் கண்டுபிடித்து அடுத்தகட்ட முயற்சிகளைச் செய்வார். ஆனால், சாமானியர்கள் என்ன செய்ய முடியும்?’’ என்று குமுறுகின்றனர் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்.

இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமும் அரைகுறை விஷயமாகிவிட்டதுதான் வேதனை!