Published:Updated:

ஆர்.டி.ஐ அதிர்ச்சித் தகவல்கள்... குழந்தைத் திருமணம் எனும் பாலியல் கொடுமை!

தடுக்கப்பட்ட திருமணங்கள் 11,553; வழக்கு பதிவு 586 மட்டுமே...

பிரீமியம் ஸ்டோரி

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2020-ம் ஆண்டு அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் நான்காவது இடத்திலிருக்கிறது தமிழகம். குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இப்படி வெளியே நடக்கும் பாலியல் குற்றங்களைக் கண்டு நெஞ்சம் கொதிக்கும் சூழலில், தமிழகத்தில் 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட பதின்பருவச் சிறுமிகளை சொந்தக் குடும்பத்தினரே ‘திருமணம்’ என்ற பெயரில் கட்டாயப் பாலியல் உறவுகளுக்குள் தள்ளப்படும் கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

2015 ஜனவரி முதல் 2020 டிசம்பர் மாதம் வரை மட்டும் 11,553 பதின்பருவச் சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (குழந்தை நலம்) மாவட்டவாரியாக புள்ளிவிவரங்களைத் தெரிவித்திருக்கிறது. அந்த ஆறு ஆண்டுகளில், தருமபுரி மாவட்டத்தில்தான் அதிக அளவிலான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தருமபுரியில் 902, தேனியில் 734, சேலத்தில் 720, திருவண்ணாமலையில் 712, திண்டுக்கல்லில் 683, பெரம்பலூரில் 674, திருச்சியில் 588, மதுரையில் 489, விருதுநகரில் 461, வேலூரில் 444 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட முதல் பத்து மாவட்டங்கள் இவை. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலமான 2020-ல் மட்டுமே தமிழகம் முழுவதும் 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஆர்.டி.ஐ அதிர்ச்சித் தகவல்கள்... குழந்தைத் திருமணம் எனும் பாலியல் கொடுமை!

இத்தனை ஆயிரம் சம்பவங்களில், தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியிருப்பதும் ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்திருக்கிறது. 2015-லிருந்து 2020 வரை மாநிலம் முழுவதும் குழந்தைத் திருமணம் தொடர்பாக வெறும் 586 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை இரண்டு மாவட்டங்களிலும் குழந்தைத் திருமணம் தொடர்பாக ஆறு ஆண்டுகளில் ஒரு வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை என்பது இன்னும் கொடுமை. அரியலூர், நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒரு வழக்கு மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 140 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 80 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், கர்ப்பம் அடையும் சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக மாவட்டவாரியாக ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவரங்களை மட்டுமே கொடுத்திருக்கிறது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை. அதில் கிடைத்த தகவல்களும் அதிர்ச்சி ரகம். 2015-2020 வரையிலான ஆறு ஆண்டுகளுக்குள் மட்டுமே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத 3,326 சிறுமிகள் கர்ப்பமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2015-ல் 246 பேரும், 2016-ல் 352 பேரும், 2017-ல் 572 பேரும், 2018-ல் 676 பேரும், 2019-ல் 650 பேரும், 2020-ல் 830 பேரும் கருத்தரித்திருக்கிறார்கள்.

சென்னை வண்டலூரைச் சேர்ந்த ‘சமூக கல்வி நிறுவனம்’ என்ற என்.ஜி.ஓ அமைப்பின் திட்ட மேலாளரான பிரபாகர் என்பவர்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மேற்கண்ட தகவல்களைப் பெற்றிருக்கிறார். ‘‘இந்தப் பட்டியலில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுமிகளின் எண்ணிக்கை மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பட்டியலில் இடம் பெறாத சிறுமிகளின் விவரங்களும் தெரியவந்திருந்தால் கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள்நலக் குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், காவல்துறை, சைல்டுலைன் ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த முடியும். காவல்துறையினரும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. மாநில அரசும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

பிரபாகர் - கீதா ஜீவன்
பிரபாகர் - கீதா ஜீவன்

இது குறித்து விளக்கம் கேட்டபோது, “குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதை பெரிய இயக்கமாக நடத்தவிருக்கிறோம்” என்கிறார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். அவர் நம்மிடம், ‘‘முதலமைச்சர் என்னை அழைத்துக் கொடுத்த முதல் பணியே குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதுதான். அதன்படி, குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க மிகுந்த கவனமுடன் செயல்பட்டுவருகிறோம். இது தொடர்பாக புகார்கள் வந்தால் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டிருக்கிறோம். கடந்த ஆட்சியில், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். இனி, அப்படி நடக்காது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் 18 வயது பூர்த்தியாகாத அதிக அளவிலான பெண் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கருத்தரித்திருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. வரும் நவம்பர் முதல் வாரத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பெரும் இயக்கமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

குழந்தைத் திருமணம், இளம் வயதில் கருத்தரித்தல் போன்றவையும் கடுமையான பாலியல் குற்றங்களே. குற்றம்சாட்டப்படும் இடத்தில் குடும்பத்தினரே இருப்பதுதான் வேதனை. சட்டங்கள் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியாது; விழிப்புணர்வும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பத்தினரை மேம்படுத்துவதுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு