Published:Updated:

RTI அம்பலம்: கேரளத்தின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

திருட்டுத்தனமாகக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்... அலட்சியத்தின் உச்சத்தில் தமிழக அதிகாரிகள்

பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்: கேரளத்தின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

சென்ற மாதம் தென்காசி, புளியரை சோதனைச்சாவடி வழியாகக் கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் தமிழகத்துக்குள் கொட்டப்பட்டதாகச் செய்தி வெளியானது. இது, தமிழகத்தில் சுகாதாரம் குறித்த அக்கறை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கான சான்று. இப்படி கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகளைக் கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டுவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. கடந்த ஆண்டுகூட இதே புளியரை சோதனைச்சாவடியில் கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகள் ஏற்றிவந்த 29 லாரிகள் பிடிபட்டன. 29 லாரிகளுக்கும் அபராதம் விதித்து அந்தப் பிரச்னையை இழுத்து மூடிவிட்டனர். அபராதம் விதிப்பதோ வசூலிப்பதோ முக்கியமல்ல. அந்த 29 லாரிகளிலிருந்த மருத்துவக்கழிவுகள் என்னவாயிற்று? இப்படிக் கொட்டப்படும் அல்லது கொட்டுவதற்கு முன்பே சிறை பிடிக்கப்படும் மருத்துவக்கழிவுகளின் நிலை என்ன? இவற்றை அறிந்துகொள்ள விகடன் ஆர்.டி.ஐ குழு களமிறங்கியது.

கடந்த ஆண்டு புளியரை சோதனைச் சாவடியில் பிடிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளின் நிலை குறித்து, திருநெல்வேலி வருவாய்த் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தமிழக மற்றும் கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியங்களில் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டிருந்தோம். சொல்லி வைத்ததைப்போல ‘அதற்கு நாங்கள் பொறுப்பல்ல; அது வேறு துறையைச் சார்ந்தது’ என்று அனைவரும் தட்டிக்கழித்தார்களே ஒழிய, ஒருவரும் உருப்படியான பதிலைச் சொல்லவில்லை. காவல்துறை தரப்பில் கிடைத்த பதில்தான் எல்லாவற்றையும்விட விநோதமாக இருந்தது. 2017, 2018-ம் ஆண்டுகளில் மருத்துவக்கழிவுகள் ஏற்றிவந்ததாக எந்த வாகனமும் பிடிக்கப் படவில்லை என்றும், புளியரை சோதனைச் சாவடியிலிருந்து மருத்துவக்கழிவுகள் ஏற்றி வந்ததாகக் கூறி எந்த வாகனத்தையும் கேரள எல்லைக்குள் திருப்பி அனுப்பவில்லை என்றும் அதிர்ச்சி பதிலளித்தவர்கள். மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் சுகாதாரத் துறையிடம் கேட்குமாறு சொல்லியிருந்தனர்.

Medical Waste
Medical Waste

‘‘சமீபத்தில் செங்கோட்டை – தென்காசி சாலையிலுள்ள கொட்டாகுளம் பெரியகுளம் பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றனர். அதில், பயன்படுத்தப் பட்ட ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்துகள், வெட்டி யெடுக்கப்பட்ட புற்று நோய்க் கட்டிகள், கரு கலைந்து இறந்து போன சிசுக்கள் என்று மிகவும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் இருந்தன. குப்பைகளில் இரைதேட வரும் நாய்களோ காக்கைகளோ மருத்துவக் கழிவுகளை உண்டாலோ அல்லது வேறு இடத்தில் கொண்டுசென்று போட்டாலோ ஏற்படும் விளைவுகளை, கற்பனைகூடச் செய்துப் பார்க்க முடியவில்லை. கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் இந்த மருத்துவக்கழிவுகள் புளியரைக் காவல்நிலையத்தின் சோதனைச்சாவடியைக் கடந்துதான் தமிழக எல்லைக்குள் நுழைகின்றன. சோதனைச்சாவடியில் உள்ள போலீஸார் ‘கவனிப்புக்கு’ மயங்கி அந்த அபாயகரமான மருத்துவக்கழிவுகளைத் தமிழகத்துக்குள் வர அனுமதிக்கின்றனர்’’ என்று மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாவட்ட ஆட்சியர் முதல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டிய அதிகாரிகள் எல்லோரும் தங்கள் கடமையைத் தட்டிக்கழிப்பதில்தான் குறியாக இருக்கின்றனரே ஒழிய, ‘மக்கள் சுகாதாரம் குறித்த அக்கறையெல்லாம் துளியும் இல்லை’ என்பது ஆர்.டி.ஐ-க்கு அவர்கள் அளித்துள்ள பதில்மூலம் அம்பலமாகியுள்ளது. ‘‘கடந்த 2018 நவம்பர் 22-ம் தேதி பிடிக்கப்பட்ட 29 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றிலிருந்த மருத்துவக்கழிவுகளைக் கேரளாவுக்குத் திருப்பி அனுப்பவில்லை. அவை எங்கே சென்றன என்றும் தெரியவில்லை. ஆளுங்கட்சியினரின் சிபாரிசுகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் என்று இந்த முறைகேடுகள் தொடர்வதற்கான காரணங்கள் நீள்கின்றன. அதன் விளைவாக, மருத்துவக் கழிவுகளின் குப்பைமேடாகத் தென்காசி பகுதி மாறிவருகிறது. குறிப்பிட்ட நாள்கள் இடைவெளி யில் கேரளாவிலிருந்து திருட்டுத்தனமாக இரவோடு இரவாகத் தமிழக நிலங்களில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 20 லட்சம் கிலோவுக்கு மேல் இருக்கும்’’ என்று புலம்புகின்றனர் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்.

இந்த 29 லாரி மருத்துவக்கழிவுகள் பிடிபட்டதை முன்வைத்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை மேம்பாட்டுச் சங்கம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம். ‘இந்த லாரிகளைக் கேரளாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். இனி மருத்துவக்கழிவுகளைச் சுமந்துகொண்டு எந்த வாகனமும் தமிழக எல்லைக்குள் வரக்கூடாது. காவல்துறை தனிப்படை அமைத்து அதைக் கண்காணிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ‘‘அப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிகாரிகளின் நினைவில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை” என்கின்றனர் மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் சிதம்பரம். ‘‘இப்படி கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளில் கொடிய நோய்களைப் பரப்பக்கூடிய வைரஸ்கள் நிறைய இருக்கும். அந்த வைரஸ்கள் குப்பைகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற மருத்துவக்கழிவுகள் நீர்நிலைகளுக்கு அருகிலேயே கொட்டப்படுகின்றன. அதனால் தண்ணீரும் அபாயமாக மாறும். இதனால் அந்த தண்ணீரில் குளிக்கும் மனிதர் களுக்குத் தொற்றுநோய்கள் உருவாகும். அந்தத் தண்ணீரைப் பாய்ச்சி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன் படுத்தினாலும் ஆபத்துதான். இவ்வளவு ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கேரளாவிலிருந்து தொடர்ச்சியாகக் கொட்டப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திருநெல்வேலி மட்டுமின்றி, தேனி, கோவை வழியாகவும் கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுக் கொட்டப்படுகிறது’’ என்றார் வேதனையுடன்.

RTI அம்பலம்: கேரளத்தின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

தமிழகத்தில் மொத்தம் 3,530 தனியார் மருத்துவமனைகள் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளன. 23 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 300-க்கும் மேற்பட்ட அரசு தாலுகா மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவ மனைகளிலிருந்து நாள் ஒன்றுக்குத் தமிழகத்தில் சுமார் 46 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகின்றன. தமிழக அரசு மருத்துவ மனைகளில் ஆண்டுக்குச் சுமார் 1.68 கோடி கிலோ மருத்துவக்கழிவுகள் அகற்றப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மூலமாக 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை அகற்றப்பட்ட மருத்துவக் கழிவுகளின் மொத்த எடை 6.48 கோடி கிலோ.

இந்த மருத்துவக்கழிவுகளையெல்லாம் அழிக்க, தமிழகத்தில் ஒன்பது இடங்களில் எரியூட்டுத் தளங்கள் உள்ளன. ஆனால், கேரளாவிலோ பாலக்காடு மாவட்டம் காஞ்சிக்கோடு என்ற பகுதியில் மட்டுமே எரியூட்டுத்தளம் இருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச்சீர்கேட்டைக் கருத்தில்கொண்டு கூடுதல் இடங்களில் எரியூட்டுத்தளங்கள் அமைக்க அனுமதி வழங்காமல், தங்கள் நிலத்தையும் நீரையும் பாதுகாப்பாக வைத்துள்ளது கேரள அரசு. ஆனால், தமிழகத்திலோ இங்குள்ள கழிவுகளுக்கும் கட்டுப்பாடு இல்லை. வெளிமாநிலத்திலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும் வழியில்லை. விருதுநகர், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, நீலகிரி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 11 தனியார் நிறுவனங்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்று மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பிடிபட்ட 29 லாரிகள் என்னவாகின என்பது குறித்துத் தெரிந்துகொள்ள சங்கரன்கோவில் பகுதியின் பொதுச்சுகாதார மற்றும் பாதுகாப்புத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் நளினியைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘லாரிகள் பிடிக்கப்பட்ட சமயத்தில் நான் விடுப்பில் இருந்தேன். அந்தச் சமயத்தில் திருநெல்வேலி சரகத்தின் இணை இயக்குநர் செந்தில்குமார்தான் அந்தப் பிரச்னையைக் கையாண்டார். அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்றார். ‘‘செந்தில்குமார் தற்காலிகமாகக் கையாண்டிருந்தாலும், இந்தப் பகுதிக்கு இணை இயக்குநராக இருக்கும் உங்களிடம்தானே அதுகுறித்த தகவல்கள் மேற்கொண்டு வந்திருக்கும்?’’ என்று கேட்டபோது, அவரிடமிருந்து பொறுப்பான பதில் வரவில்லை. அந்த நேரத்தில் தற்காலிகமாகப் பொறுப்பில் இருந்த டாக்டர் செந்தில்குமாரையும் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவே இல்லை.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 கோடி கிலோ மருத்துவக்கழிவுகளைத் தமிழகம் கையாள வேண்டியுள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள். அதோடு சேர்த்துக் கேரளாவின் மருத்துவக்கழிவுகளையும் சுமக்கத் தமிழகம் என்ன கேரளாவின் குப்பைத்தொட்டியா?

- சி.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு