Published:Updated:

RTI அம்பலம்: 3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்!

அரசுப் பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
அரசுப் பள்ளி

மூச்சுத்திணறும் அரசுப் பள்ளிகள்

RTI அம்பலம்: 3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்!

மூச்சுத்திணறும் அரசுப் பள்ளிகள்

Published:Updated:
அரசுப் பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
அரசுப் பள்ளி

பள்ளிக்கூட மாணவிகளின் பெரும்பிரச்னைகளில் முக்கியமானது, மாதவிடாய் பிரச்னை. இதன் காரணமாகவே பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவிகள் பலர் உண்டு. அதிலும் அரசுப் பள்ளி மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபம். இதற்காகத்தான் அரசாங்கமே நாப்கின் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. கூடவே, பயன்படுத்திய நாப்கின்களை எரிப்பதற்காக எரியூட்டி இயந்திரம் வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்தது. ஆனால், இந்த எரியூட்டித் திட்டம் பல பள்ளிகளிலும் செயல்படாத நிலையில் இருப்பது, மாணவிகளுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கேடாக மாறி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

RTI அம்பலம்:  3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்!

‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாப்கின் எரியூட்டி பொருத்தப்பட வேண்டும்’ என, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து, ‘தமிழகத்தில் உள்ள 5,639 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் நிறுவ, 22.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது’ என 2017-ம் ஆண்டு அறிவித்தது தமிழக அரசு. அதன் இன்றைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக விகடன் ஆர்.டி.ஐ குழு களத்தில் இறங்கியபோது தான் பரிதாபங்கள் பல் இளித்தன!

பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கிடைத்த பதிலில், ‘மாணவிகள் பயிலும் 4,161 உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் 2017-ம் ஆண்டுமுதல் பொருத்தப் பட்டுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில பள்ளிக் கூடங்களுக்குப் பயணப்பட்டபோது கிடைத்த கள நிலவரம் இதோ...

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேசியபோது, “நாப்கின் வழங்கும் இயந்திரமெல்லாம் கிடையாது. மாதவிடாய் நேரத்தில் டீச்சர்கிட்ட கேட்டா தருவாங்க. நாப்கின் எரியூட்டி வெச்சு ரெண்டு வருஷமாச்சு. இதுவரைக்கும் மின்சார இணைப்பு கொடுக்கல. அதனால, குப்பைத் தொட்டியிலதான் போடுறோம். துப்பரவு வேலைசெய்ற அக்கா, நகராட்சி குப்பைத்தொட்டியில கொண்டுபோய்ப் போடுவாங்க. அவங்க ஒரு நாள் லீவு எடுத்தாலும் பள்ளிக்கூட குப்பைத் தொட்டி நிறைஞ்சு கழிவறைக்குள்ளயே போக முடியாத அளவுக்கு கெட்டவாடை அடிக்கும்” என்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

RTI அம்பலம்:  3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்!

விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலரிடம் இதைப் பற்றி கேட்டபோது, “எரியூட்டி இயந்திரங்கள் இன்னும் வரவேண்டியுள்ளன. கைக்கு வர வர, பள்ளிகளுக்கு விநியோகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று பொதுவான பதிலைத் தந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்டமங்கலம் அரசுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, “நாப்கின்களை ரெகுலராக வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். எரியூட்டி தற்போது பழுதடைந்துள்ளதால் குப்பைத் தொட்டிகளில்தான் கொட்டுகிறோம்” என்று வருத்தம் பொங்கச் சொன்னார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாகப்பட்டினம் மாவட்டக் கல்வித்துறை தந்த பதிலில், `இன்னும் 57 பள்ளிகளில் நாப்கின் எரியூட்டி பொருத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர், “எங்க ஊரு பள்ளிக் கூடத்துக்கு மெஷின் வரப்போகுதுனு அறிவிப்பு வந்ததோடு சரி. மெஷின் வரல. பயன்படுத்தின நாப்கினை ஊருக்கு வெளியதான் மொத்தமா போட்டு எரிக்கிறாங்க. அதனால கெட்டவாடை வீசுறதோடு, புகையை சுவாசிக்கிறதால தொண்டையில வலியும் ஏற்படுது” என்றார் வருத்தத்துடன்.

RTI அம்பலம்:  3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்!

விருதுநகரைச் சேர்ந்த பத்மா, “ஆரம்பத்தில் நாப்கின்களே ஒழுங்கா தரல. இப்போ அந்தப் பிரச்னை இல்ல. எரியூட்டி பொருத்தியிருக்காங்க. ஆனா, இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கல” என்றார்.

விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் கவலையைக் கூட்டிய நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுமையான ஆறுதலைத் தருவதாக இருந்தது.

“60 பள்ளிகளில் நாப்கின் எரியூட்டி பொருத்தப் பட்டுள்ளது. இன்னும் ஒரு பள்ளி மட்டும்தான் பாக்கி” என்பது, பொன்னேரி கல்வி மாவட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில். பொன்னேரி, அரசுப் பள்ளி ஆசிரியர் லதாராணியிடம் இதைப் பற்றி கேட்டபோது, “மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்குவதுடன், எரியூட்டியையும் முறையாகப் பராமரிக்கிறோம். இதனால் விடுப்பு எடுக்கும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார்.

“தமிழக அரசுப் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு மூன்று கோடி நாப்கின்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், 4,161 எரியூட்டிகள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அதுவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே. தற்போதுள்ள வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் காரணமாக பெண் குழந்தைகள் சராசரியாக 10 முதல் 12 வயதிலேயே பூப்பெய்திவிடுகின்றனர். அதனால் நடுநிலைப் பள்ளிகளிலும் நாப்கின் விநியோகம், எரியூட்டி அவசியமாகிறது. ஒரு பள்ளிக்கு ஒரு எரியூட்டி மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிகமான மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அதிகப்படியான நாப்கின்கள் போடப்படும்போது எரியூட்டி செயலிழந்துவிடுகிறது’’ என்பது போன்ற பிரச்னைகளை அனைத்து ஊர்களிலுமே முன்வைக்கின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பனிடம் இதுகுறித்துப் பேசினோம். “இதுவரை எரியூட்டி வழங்கப்படாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியல், கூடுதலாக எரியூட்டி தேவைப்படும் பள்ளிகள் பட்டியல் ஆகியவை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கேட்கப் பட்டுள்ளன. பட்டியல் தயாரானதும் அனைத்து பள்ளிகளிலும் எரியூட்டி பொருத்தப்படும். நடுநிலைப் பள்ளிகளுக்கான தேவைகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்” என்றார்.

நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை! இதை நிறைவேற்றவும் நீதிமன்றத்திடமிருந்து மற்றுமோர் உத்தரவைத்தான் எதிர்பார்க்கிறதா கல்வித்துறை?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாரா
சாரா

நாப்கின்களை பொது இடத்தில் எரிக்கப்படுவது குறித்துப் பேசிய சூழலியலாளர் சாரா, “நாப்கின்கள் பருத்தியில் செய்யப்படுகின்றன என்பதெல்லாம் வெறும் விளம்பரம்தான். பெரும்பாலானவற்றில் பிளாஸ்டிக் மூலக்கூறுகள்தான் அதிகமாக உள்ளன. நாப்கின், நிலத்தில் மட்குவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும். நிலத்திலேயே எரித்தால் வேதிப்பொருள்கள் காற்றை மாசுபடுத்துவதுடன் மண்ணையும் மலடாக்கிவிடும். சுவாசப் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எரியூட்டிகள் மூலமாக எரிக்கும்போது நிலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. ஒரு நாளைக்கு ஒரு பள்ளியில் சராசரியாக 20 நாப்கின்கள் வரைதான் எரிக்கப்படும். இதனால், பெரிய அளவிலான காற்று மாசுபாடும் இருக்காது. சம்பந்தபட்ட பள்ளிகளில் கூடுதல் மரங்களை நடுவது முக்கியம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism