Published:Updated:

முன்பே தொடங்கிய சைபர் யுத்தம்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

முன்பே தொடங்கிய சைபர் யுத்தம்!

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

கத்தியின்றி ரத்தமின்றி சைபர் யுத்தமொன்று ரஷ்யாவின் சைபர் படையினராலும், ரஷ்ய ஆதரவு ஹேக்கர்களாலும் தொடங்கப்பட்டது - உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் ஆரம்பித்த பிப்ரவரி 24-ம் தேதிக்கு முன்னரே!

எந்த நேரமும் ராணுவத் தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என எல்லோரும் பயந்திருந்த பிப்ரவரி 23-ம் தேதியே, உக்ரைன் நாடாளுமன்றம் மற்றும் அரசின் பல இணையதளங்கள் முடக்கப்பட்டன. சொல்லப்போனால், பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில்கூட உக்ரைன் அரசின் பல இணையதளங்களும், உக்ரைன் வங்கிகளின் இணையதளங்களும் செயலிழக்கச் செய்யப்பட்டன. செயலிழந்த இணையதளங்களில் ‘மோசமான விளைவுகளுக்குத் தயாராகுங்கள்’ என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டது. `ரஷ்ய உளவுத்துறையின் வேலை இது’ என அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகள் குற்றம் சாட்டின.

ராணுவம், கப்பல்படை, விமானப்படை போல பல நாடுகள் இப்போது சைபர் படைகளையும் உருவாக்கியுள்ளன. மற்ற போர்களைவிட ஏன் சைபர் யுத்தம் வித்தியாசமானது?

* நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இந்தப் போரைத் தொடுக்கலாம். நீங்கள் தாக்க விரும்பும் நபரோ அல்லது நிறுவனமோ வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

* போரிடத் தேவையான ஆயுதங்கள் (மென்பொருள்கள்) இலவசமாகவோ அல்லது மிக மலிவான விலையிலோ இணையமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. வாடகைக்கோ குத்தகைக்கோகூட சலுகை விலையில் கிடைக்கும்.

* குறைவான ஊதியத்தில் சைபர்-கூலிப்படைகளைப் பணியமர்த்திக்கொள்ள முடியும். குறுகிய காலத்தில் உயிர்ச்சேதங்கள் உட்பட, அதிகபட்ச அழிவை ஏற்படுத்தமுடியும்.

‘‘சைபர் தாக்குதலுக்கு உள்ளாவது உக்ரைனுக்குப் புதிதல்ல. ரஷ்ய சைபர் படையின் பயிற்சித் தளமாக உக்ரைன் பல ஆண்டுகளாக இருந்துள்ளது’’ என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணரொருவர்.

Malware எனப்படும் கம்ப்யூட்டர் வைரஸ் பயன்படுத்தி கீவ் நகரின் மின்சாரக் கட்டமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டு, பெரும்பாலான நகரம் இருளில் மூழ்கியது. குளிர்காலமாதலால் அவரவர் வீட்டில் உள்ள குளிர்போக்கும் வெப்ப சாதனங்கள் செயல்படாததால் மக்கள் தவித்துப் போயினர். ரசாயனத் தொழிற்சாலையின் கருவிகளை ஹேக் செய்து, நச்சுக்காற்றினை வெளியேற்றி நாசம் விளைவிக்கச் செய்யப்பட்ட முயற்சி தகர்க்கப்பட்டதாக உக்ரைன் அரசாங்கம் பின்னர் அறிவித்தது.

ஏவுகணைகள், டாங்கிகள், வெடிகுண்டு மழை என எல்லாவற்றையும் தாண்டி, கணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்திப் போர் நடத்துவது சுமார் 20 ஆண்டுகளாகவே நடந்துவருகிறது.

உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் இணைந்து கணினி நிபுணர்களின் துணையுடன் எதிராளி டிரோன்களைச் செயலிழக்கச் செய்ததும், தொலைத்தொடர்பு அமைப்புகளை முடக்கியதும், ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த போரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கையாண்ட உத்திகளே. அதே உத்திகளைப் பயன்படுத்தி உக்ரைன் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு அமைப்புகளை முடக்கினால், அவற்றைச் சார்ந்து இயங்க வேண்டிய விமானப்படை செயல்பட முடியாமல்போகலாம்.

இப்போது ரஷ்யா நடத்தும் சைபர் தாக்குதல்கள் உக்ரைனைத் தாண்டி விளைவுகளை ஏற்படுத்துமா என்பதுதான் சைபர் நிபுணர்களின் கவலை.

‘நான்பெட்யா’ என்ற கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் உக்ரைன்மீது 2017-ம் ஆண்டு சைபர் தாக்குதல் நடந்தது. ரஷ்யா அத்தாக்குதலை நடத்தியதாகப் பரவலாகப் பேசப்பட்டது. உக்ரைனோடு நிற்காமல் அந்த மோசமான நான்பெட்யா வைரஸ் பல்வேறு ஹேக்கர்களால் பயன்படுத்தப்பட்டுப் பல்வேறு நாடுகளில் பெரு வணிக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டன. இதனால் சுமார் 10 பில்லியன் டாலர் (75,000 கோடி ரூபாய்) நஷ்டத்தைத் தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்கள் சந்தித்தன.

முன்பே தொடங்கிய சைபர் யுத்தம்!

ரஷ்யாமீது, பொருளாதாரத்தடை உட்பட பலவகையான தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அதற்குப் பழிவாங்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வணிக நிறுவனங்களில் சைபர் தாக்குதல்கள் நடந்துவிடுமோ என்ற பேரச்சம் நிலவுகிறது.

கம்ப்யூட்டர்களில் உள்ள அத்தனை தகவல்களையும் நொடிப்பொழுதில் அழித்துவிடக்கூடிய வைப்பர் என்றொரு வைரஸ் மென்பொருள் உக்ரைன் கம்ப்யூட்டர்களில் பரவிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஹேக்கர்கள் குழுவினர் பலர் குதித்துள்ளனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகள் அனைத்திலும் நிலவுகிறது.

****

சைபர் யுத்தம் நடத்துவது ரஷ்யாவுக்குப் புதிதல்ல. ஹேக்கர்களைக் கூலிப்படைகள் போலப் பயன்படுத்தி, பல நாடுகளுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது.

2007-ம் ஆண்டு நடந்த தாக்குதல்களில் எஸ்டோனியா என்ற நாடு முழுவதுமாக முடங்கியது. மிகவும் சின்ன நாடாக இருப்பினும், முழுக்க முழுக்க கணினிமயமாக்கப்பட்ட நாடு அது. அங்கு தேர்தல்கூட இணையம் மூலமாகத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எஸ்டோனியாவின் வங்கிகள், அரசு இணையதளங்கள், மின்னஞ்சல் சேவைகள் என அனைத்தும் முடக்கப்பட்டன. முடக்கியது ரஷ்யாதான் என்று பேசப்பட்டது.

2008-ம் ஆண்டு அதே வகையான தாக்குதல்கள் ஜார்ஜியாமீது நடத்தப்பட்டது. சைபர் தாக்குதல்கள் நடந்த அதே நேரத்தில் ராணுவத் தாக்குதல்களையும் ஜார்ஜியாமீது ரஷ்யா நடத்தியது. ஜார்ஜியாவின் தேசிய வங்கி உட்பட பல்வேறு வங்கிகள், அரசாங்க, வணிக நிறுவனங்களின் இயக்கங்கள் இந்தத் தாக்குதல்களினால் சுமார் 12 நாள்கள் முடங்கின.

2016-ல் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல் கணினிகளை ஹேக் செய்து ட்ரம்ப் வென்ற அந்தத் தேர்தலில் குழப்பம் விளைவித்ததாக ரஷ்யாமீது குற்றம் சாட்டப்பட்டது.

பிரெஞ்சு அதிபர் மெக்ரான் போட்டியிட்ட 2017 தேர்தலிலும் ரஷ்யா சைபர் தாக்குதல்கள் நடத்திக் குழப்பம் விளைவித்ததாகப் பேச்சு எழுந்தது. பிஷ்ஷிங் என்றொரு வகையான தாக்குதலைப் பயன்படுத்தி மெக்ரான் தேர்தல் குழுவினரின் 20,175 மின்னஞ்சல்கள் களவாடப்பட்டு, தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டன. இந்த சைபர் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யாதான் என்பது கணினிப் பாதுகாப்பு நிறுவனங்களின் கணிப்பு.

இந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா மறுத்துள்ளது.