Published:Updated:

“நவீனத்தைப் புகுத்துவது காந்தியின் தத்துவத்துக்கே எதிரானது!”

- சபர்மதி ஆசிரம மறுசீரமைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு...

பிரீமியம் ஸ்டோரி

வரலாறுகள் திருத்தப்படுகின்றன... வரலாற்றுச் சின்னங்கள் உருமாற்றப்படுகின்றன என்று ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது, மத்திய பா.ஜ.க அரசு மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைப்பு என்கிற பெயரில் அடையாளங்களை அழிக்கத் திட்டமிடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் காந்தியவாதிகள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்தி, தனது சொந்த மாநிலமான குஜராத், அகமதாபாத்திலுள்ள கொச்சரப் என்ற பகுதியில் 1915, மே 25-ம் தேதி முதன்முதலாக ஆசிரமத்தை நிறுவினார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கதர் ஆடைகள் தயாரிப்பு போன்றவற்றில் நாட்டம்கொண்டிருந்த காந்தி, அதற்கு வசதியாக அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் 1917-ம் ஆண்டு தனது ஆசிரமத்தை மாற்றினார். சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்ததால், அது `சபர்மதி ஆசிரமம்’ என்றழைக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் வசித்ததால் ‘ஹரிஜன் ஆசிரமம்’ என்றும் அழைக்கப்பட்டது. 1917 முதல் 1930-ம் ஆண்டு வரை காந்தியும், அவரின் துணைவியார் கஸ்தூரி பாயும் சபர்மதி ஆசிரமத்தில்தான் வசித்தனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சபர்மதி ஆசிரமம் முக்கியப் பங்கு வகித்தது என்பதால், அதை தேசிய நினைவுச்சின்னமாக அரசு அறிவித்தது. இந்த நிலையில்தான் `1,200 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக சபர்மதி ஆசிரமத்தை மாற்றப்போகிறோம்’ என்று களமிறங்கியிருக்கிறது பா.ஜ.க அரசு.

“நவீனத்தைப் புகுத்துவது காந்தியின் தத்துவத்துக்கே எதிரானது!”

தற்போது ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தை, 1,200 கோடி ரூபாய் செலவில், 55 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்து ‘தீம் பார்க்’ ஆக உருவாக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. 200 கார்கள் நிற்கும் அளவுக்கு பார்க்கிங் வசதி, உணவகங்கள், கடைகள் உட்பட ஏராளமான வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படவிருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசும், மாநில பா.ஜ.க அரசும் இணைந்து உருவாக்கும் இந்தத் திட்டம், பிரதமர் மோடியின் நேரடிப் பார்வையில் செயல்படுத்தப்பட விருப்பதாகச் செய்திகள் வருகின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள குஜராத்தைச் சேர்ந்த பிமல் படேல் என்கிற ஒப்பந்ததாரரே காந்தி ஆசிரம மறுசீரமப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் எடுத்திருக்கிறார்.

பா.ஜ.க அரசின் மேற்கண்ட முடிவு கடும் சர்ச்சைகளை எழுப்பியிருக்கும் நிலையில், “இந்த மறு சீரமைப்பு காந்தியின் தத்துவத்துக்கே எதிரானது” என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்கள் நம்மிடம், “இந்தியாவின் வரலாற்றைச் சொல்லும்போது சபர்மதி ஆசிரமத்தை தவிர்த்துவிட்டுச் சொல்ல முடியாது. காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தியபோது அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 60 ஆயிரம் பேரை சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கோபமடைந்த காந்தி, ‘சபர்மதி ஆசிரமத்தையும் பறிமுதல் செய்துகொள்ளுங்கள்’ என்று ஆவேசப்பட்டார். ஆனால், ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் ஆசிரமத்தின் மீது கைவைக்கவில்லை. இன்றைய இந்திய ஆட்சியாளர்களோ, காந்தியின் ஆசிரமத்தில் கைவைக்கத் துணிந்துவிட்டார்கள்.

“நவீனத்தைப் புகுத்துவது காந்தியின் தத்துவத்துக்கே எதிரானது!”

இந்த ஆசிரமத்துக்கு அருகிலுள்ள 48 பாரம்பர்ய சொத்துகளைச் சீரமைத்து, ஒன்றிணைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, ‘சபர்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டம் மகாத்மாவின் விருப்பத்துக்கும் தத்துவத்துக்கும் எதிரானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்வதுபோல எளிமையும் அமைதியுமே சபர்மதி ஆசிரமத்தின் அடையாளங்கள். அதைத் தேடித்தான் உலகம் முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகளும் காந்தியவாதிகளும் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் எளிமையையும் அமைதியையும் அழித்துவிட்டு, ஆடம்பர வசதிகளையும் நவீனங்களையும் புகுத்துவது காந்தியின் சித்தாந்தத்துக்கே எதிரானது” என்றார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து ‘காந்திய நிறுவனங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவோம்’ என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த 130 முக்கிய ஆளுமைகள் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குஜராத் சாகித்திய பரிஷத்தின் தலைவரும், எழுத்தாளருமான பிரகாஷ் என் ஜா, வரலாற்று அறிஞர்கள் ராமச்சந்திர குஹா, ராஜ்மோகன் காந்தி, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா, பத்திரிகையாளர் பி.சாய்நாத், சமூகச் செயற்பாட்டாளர்கள் அருணா ராய், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள். சபர்மதி ஆசிரமத்தின் எளிமையையும் புனிதத்தையும் அரசின் இந்த நடவடிக்கை மோசமாக பாதிக்கும் என்று குற்றம்சாட்டும் அவர்கள், இந்த மறுசீரமைப்புத் திட்டத்தை ‘இரண்டாவது படுகொலை’ என்று விமர்சிக்கிறார்கள். மேற்கண்ட திட்டத்துக்காக சபர்மதி ஆசிரமத்தின் ஒரு பகுதியில் வசித்துவரும் 200 பட்டியல் சமூகத்துக்குக் குடும்பங்களும் அப்புறப்படுத்தப்படவிருக்கின்றன. இதையடுத்து அந்த மக்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

“நவீனத்தைப் புகுத்துவது காந்தியின் தத்துவத்துக்கே எதிரானது!”

ஆசிரம மறு சீரமைப்பு பற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, “இந்தியாவின் முக்கியமான அடையாளம் சபர்மதி ஆசிரமம். அதனாலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோரை மோடி அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சபர்மதி ஆசிரமத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அதை உலகத்தரத்தில் மேம்படுத்துகிறது மத்திய பா.ஜ.க அரசு. அங்குள்ள பாரம்பர்ய கட்டடங்கள் சிதைக்கப்படாமல் புதுப்பிக்கப்படவிருக்கின்றன. ஆசிரமத்தைச் சுற்றி வசித்துவரும் மக்களுக்கு இழப்பீடு தரப்படுகிறது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றார்.

எளிமையையும் அமைதியையும்தான் காந்தி காலமெல்லாம் வலியுறுத்தினார். காந்தியத்துக்கு தேவையில்லை ஆடம்பரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு