Published:Updated:

“நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

சகாயம் ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சகாயம் ஐ.ஏ.எஸ்

திட்டமிட்டே தொடர்ந்து சில சங்கடங்களை இந்த அரசு ஏற்படுத்தியதால், பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டார் சகாயம்

கடந்த 25.10.2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படக் கட்டுரையாக தமிழக தலைமைச் செயலகத்தின் படத்துடன் ‘ஊழல்’ என்ற தலைப்பில், தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் நிலவும் ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களைப் பற்றி எழுதியிருந்தோம். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அந்தக் கட்டுரை. இந்தநிலையில்தான், `அரசு நிர்வாகம் மோசமாக இருக்கிறது. ஊழல் அதிகாரத்தில் இனியும் தொடர விரும்பவில்லை. அரசுப் பணியிலிருந்து என்னை விடுவித்தால் போதும்’ என்ற மனநிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து அவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக கடந்த 2014, செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார் சகாயம். இந்தத் துறையில் பணிபுரிபவர்கள் மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே. ஆண்டுக்கு நான்கு கருத்தரங்குகள், சில அறிவியல் கண்காட்சிகள்... இவற்றைத் தாண்டி இந்தத் துறைக்கு வேறெந்தப் பணிகளும் இல்லை. இது ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கான துறையே கிடையாது. ‘அரசு அதிகாரி ஒருவரை எந்தப் பணியிடத்துக்கு மாற்றினாலும், அங்கு சென்று பணிபுரிய வேண்டும்’ என்ற விதியை அவர் மீறக் கூடாது என்பதற்காக அந்தத் துறையில் தொடர்கிறார் சகாயம். ஆனால், திட்டமிட்டே தொடர்ந்து சில சங்கடங்களை இந்த அரசு ஏற்படுத்தியதால், பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டார் சகாயம்” என்றவர்கள் அது தொடர்பான தகவல்களைப் பட்டியலிட்டனர்.

“நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

“கொரோனா பேரிடர் காலத்தில், மாவட்டங்களில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் சகாயத்தைப் புறக்கணித்தனர். ஆனாலும், தன்னார்வத்துடன் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசுச் செயலராக அவர் பதவி உயர்வு பெற்று நான்காண்டுகள் கடந்த நிலையில், எந்த வேலையும் கொடுக்காமல் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு நேர்மையான அதிகாரிக்கு சம்பளத்தைத் தாண்டி வேறு எந்த வருமானமும் இல்லை. இப்படியான சூழலில் சீனியாரிட்டியில் இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெயஸ்ரீ முரளிதரன், எம்.எஸ்.சண்முகம் உள்ளிட்ட சில அதிகாரிகள், அவர்களுக்கும் அடுத்தபடியாக உள்ள விஜயகுமார், முனியநாதன், காமராஜ், வள்ளலார், சுகந்தி, ஷோபனா ஆகியோரைவிடவும் 15,000 ரூபாய் சம்பளம் அவருக்குக் குறைவாகத்தான் வருகிறது. ஜூனியர்களின் சம்பளம் உயரும்போது, இயல்பாகவே சீனியர்களின் சம்பளமும் உயரும். சகாயத்தின் பேட்ச் மேட்டாக இருப்பவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை இல்லை. இது குறித்து மூன்று முறை நினைவூட்டியும் அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதைப் பற்றி அவர் ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதற்கும் பதில் இல்லை.

பிரான்ஸ் தமிழ் கலாசார மன்றத்தின் 15-வது ஆண்டுவிழா 14.4.2020 அன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க சகாயத்துக்கு அழைப்பு வந்தது. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளிநாடு செல்ல அனுமதி கேட்டால், மத்திய அரசின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது வழக்கம். இதற்கான கடிதத்துடன் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பினால் போதும். ஆனால், பொதுத்துறை அதிகாரிகளோ, `அங்குள்ள செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கான கடிதம் வேண்டும்’ என்றார்கள். அதையும் வாங்கிக் கொடுத்த பிறகும் `சாப்பாட்டுச் செலவுக்கு எவ்வளவு, விமானச் செலவு எவ்வளவு?’ என்றெல்லாம் சம்பந்தமே இல்லாத கேள்விகளைக் கேட்டு அலைக்கழித்து, கடைசியில் அவர் பிரான்ஸ் செல்வதையே தடுத்துவிட்டனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் சண்முகத்துக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், `எஃப்.சி.ஆர்.ஆர் விதி 7-ன்படி, அழைப்பிதழை அனுப்பினால் போதும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. நான் செல்லும் விமான செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை மொத்தமாக அனுப்புமாறு கேட்பது வியப்பை அளிக்கிறது. அரசிடம் அனுமதி பெற்று, பிரான்ஸ் அமைப்பிடம் தெரிவித்த பிறகுதான் அவர்கள் பயணச் சீட்டையே எடுப்பார்கள். அதற்கு முன்பே விமான செலவு குறித்துக் கேட்பது விந்தையிலும் விந்தை. எனக்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள தமிழர்கள் வீட்டில் விருந்தோம்பல் நடக்குமா அல்லது உணவகத்தில் நடக்குமா என்பது தெரியாத ஒன்று. இது அரசுக்கும் தெரியும். இது போன்ற தேவையற்ற தரவுகளைக் கேட்பதன் மூலம் எனக்கு அனுமதி கொடுப்பதை தாமதிக்கும் எண்ணம், கோப்புகளை நகர்த்துபவர்களுக்கு இருக்கிறது. மேலும், இதில் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கக்கூடும்.

“நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

இன்றைய தினம், தமிழக அரசாங்கத்தில் நேர்மையான அதிகாரிகள் ஒரு நெருக்கடிக்கு உள்ளாவதை ஆழ்ந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். இதுபோல தேவையற்ற தகவல்களைக் கேட்பதைக் காலம் கடத்துபவர்களின் யுக்தியாகவே நான் கருதுகிறேன். இதை அவர்களுக்குத் தமிழ் மீதான வெறுப்பாகப் பார்ப்பதா அல்லது நேர்மையாகப் பணியாற்றும் என் போன்ற அதிகாரிகளின்மீதான வெறுப்பா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்’ என்று காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

`கறைபடிந்த ஊழல் அமைப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார் சகாயம்.

30 ஆண்டுகள் வருவாய்த்துறையில் ஏராளமான அனுபவங்களைப் பெற்றுவிட்டார். நாமக்கல் ஆட்சியராக இருந்தபோது, `கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்க வேண்டும்’ எனக் கூறியதற்காக அவர் பழிவாங்கப்பட்டார். நாமக்கல் ஆட்சியராகப் பணியாற்றியபோது, அவர் முசெளரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்துக்குப் பயிற்சி அளிக்கச் சென்றார். அப்போது திடீரென அவரைப் பணியிட மாற்றம் செய்து, நாமக்கல் அரசு ஆட்சியர் பங்களா விலிருந்த அவரின் குடும்பத்தினர் தங்க இடமில்லாமல் சிக்கலை ஏற்படுத்தியது தி.மு.க அரசு.

அதன் பிறகு ‘புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம்’ என்ற துறைக்கு மாற்றப்பட்டார். சாயப்பட்டறைக்குத் தண்ணீர் செல்கிறதா என்பதை கவனிக்கும் சிறிய துறை இது. பிறகு பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிட்டதால், மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரியின், ‘திருமங்கலம் ஃபார்முலா’வுக்கு எதிராக 20 நாள்கள் அவர் செய்த தேர்தல் பணியை மறக்க முடியாது. அதன் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களை மாற்றிய போதும், `சகாயம் தொடரட்டும்’ என உத்தரவிட்டார்.

“நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

ஆனாலும், அதன் பிறகு கிரானைட் ஊழலைக் கையில் எடுத்ததற்காக மாற்றப்பட்டார். சென்னைக்கு ஆய்வுக்காக அழைக்கப்பட்டவர், திரும்பிச் செல்லும்போது கலெக்டர் பதவியில்லாமல்தான் மதுரைக்குச் சென்றார். அப்போதே அவர், `இவ்வளவு கேவலமாக நடந்துகொள்கிறார்களே...’ என வேதனைப்பட்டார். பிறகு கோ-ஆப்டெக்ஸுக்கு மாற்றப்பட்டார். 11.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸுக்கு ஒரே ஆண்டில் 13.5 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டித் தந்தார். அங்கும் அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதலால், இந்திய மருத்துவக் கழகத்துக்கு மாற்றப்பட்டார். அந்த உத்தரவு வந்த 24 மணி நேரத்தில் அங்கிருந்து தமிழ்நாடு அறிவியல் நகரத்துக்கு மாற்றப்பட்டார்.

இவ்வளவு பணியிட மாற்றங்கள் வந்தபோதும், `நான் மாறப்போவதில்லை. நீதியின் வழியில் தொடர்ந்து நடைபோடுவேன்’ என உறுதியாகக் கூறிவிட்டார். தொடர்ச்சியான மன உளைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும், இனி வரும் நாள்களில் இளைஞர்களுக்கு குடிமைப்பணி பயிற்சியளிப்பது, நல்வழிப்படுத்துவது போன்ற பணிகளில் ஆர்வம் காட்டவிருக்கிறார். அமெரிக்கா அல்லது கனடாவில் செட்டில் ஆவதும் அவரது திட்டங்களில் ஒன்று. விரைவில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அளிக்கவிருக்கிறார்” என்றனர் விரிவாக.

“நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

``ராஜினாமா முடிவு உண்மையா?” என்று சகாயத்திடம் கேட்டோம். ``ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமிதத்துடன் பணியாற்றிவந்திருக்கிறேன். அளப்பரிய நேர்மையோடுதான் என் நிர்வாகத் தளங் களில் பணியாற்றிவந்திருக்கிறேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை, வருத்தப்படப் போவதும் இல்லை. இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. விரைவில் என் முடிவை அறிவிப்பேன்” என்றதுடன் முடித்துக்கொண்டார்.

இன்னும் சில நாள்களில் புதிய அத்தி யாயத்தைத் தொடங்கவிருக் கிறார் சகாயம். அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகத்தான் தெரியும்.