சமூகம்
Published:Updated:

‘உடைக்கப்பட்ட சிற்பம்... கலைக்கப்பட்ட கனவு!’

உடைக்கப்பட்ட சிலை
பிரீமியம் ஸ்டோரி
News
உடைக்கப்பட்ட சிலை

பூம்புகாரிடம் நீதி கேட்கும் இளம் சிற்பி

‘‘தமிழ்நாடு பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழக அதிகாரிகளின் அலட்சியத்தால், நான் வடித்த சிற்பம் உடைக்கப்பட்டது. அத்துடன், அதைக் கேள்வி கேட்டதற்காக அவமானப்படுத்தப் பட்டேன்’’ என்று கண்கலங்குகிறார் சேலத்தைச் சேர்ந்த இளம் சிற்பி மணிகண்டன்.

``என்ன நடந்தது?’’ என்ற கேள்வியோடு, சேலம் ஏற்காடு மலை அடிவாரம் செட்டிச் சாவடியில் வசிக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘‘நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, என் அப்பா சக்திவேல் இறந்து விட்டார். அவர் பெரிய சிற்பி. குடும்பச் சூழ்நிலை காரணமாக தச்சுவேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்பாவின் நண்பர் ஒருவர் என்னிடம், ‘ராமநாதபுரத்தில் சிற்பி சக்திவேல் என்றால் தெரியாதவர்களே கிடையாது. அவரைப்போல நீயும் பெயர் எடுக்க வேண்டும்’ என்றார். அவரது வார்த்தைகள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

மணிகண்டன்
மணிகண்டன்

அப்பா பயன்படுத்திய, முனை மழுங்கிக் கிடந்த உளிகளைக் கூர்மையாக்கி, முதல் படைப்பாக ‘விளக்கு ஏந்திய பாவை’ புடைச் சிற்பத்தை உருவாக்கினேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, முழு உருவச் சிற்பங்களை செய்யத் தொடங்கினேன். நான் செதுக்கிய முழு உருவச் சிற்பங்கள் சென்னை, பெங்களூரு, மலேசியா, அமெரிக்காவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் கோயில்களிலும் இருக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தின் சார்பாக, 2018-19 ஆண்டின் சிற்பக் கலைஞர்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் மரச்சிற்பம், கற்சிற்பம், உலோகச்சிற்பம் என, பத்து வகையான சிற்பக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு, முதல்வர் கைகளால் விருதும், 50,000 ரூபாய் பணமும் கொடுக்கப்படும். இந்தத் தேர்வில் கலந்துகொள்ளும் சிற்பி, தமிழராக இருக்க வேண்டும்; சிற்பம் 45 நாள்களுக்குள் செய்திருக்க வேண்டும்; சிற்பம் புதுமை யானதாக இருக்க வேண்டும் என, பல விதிமுறைகள் இருக்கின்றன.

நான் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி, 45 நாள்களில் கடும் சிரமங்களுக்கிடையே சிற்பத்தைச் செதுக்கினேன். ஒரே மரத்தில் ஒன்றரை அடி உயரத்தில் இரண்டு தளங்களாகப் பிரித்து, கீழ்த்தளத்தில் சிவலிங்கமும் மேல் தளத்தில் நின்ற நிலையில் மாணிக்க வாசகர் பாட, நந்தி அமர்ந்து பார்வையிட, நடுவில் சிவபெருமான் ஒற்றைக்காலில் நின்று ருத்ரதாண்டவம் ஆடும் அற்புதமான காட்சியை மரச் சிற்பமாக உருவாக்கினேன். அதை சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தேன்.

என் சிற்பம் மாநில விருதுக்குத் தேர்வாகவில்லை எனத் தெரிந்து, அதை வாங்குவதற்காகச் சென்றேன். அங்கு என் சிற்பத்தின் உயிரோட்டமாக இருந்த சிவபெருமானின் கால் உடைந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சிற்பத் துறை ஆணையாளர் சந்திரமோகனைச் சந்தித்து, ‘என் சிற்பம் எப்படி உடைந்தது, ஏன் என் சிற்பம் தேர்வாகவில்லை?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சாதாரணமாக, ‘உங்கள் சிற்பம் எங்களால் உடைந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதற்கு என்ன விலையோ அதைக் கொடுத்து விடுகிறோம்’ என்றார். அப்போதே எனக்கு பாதி உயிர் போய்விட்டது.

‘உடைக்கப்பட்ட சிற்பம்... கலைக்கப்பட்ட கனவு!’

`தேர்வில் என் சிற்பத்தை வைக்கவில்லை’ என்று நான் சொன்னதும், வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அவர் ஒரு புகைப்படத்தைக் காட்டினார். அதில், உடைந்த நிலையில் சிற்பம் தேர்வுக்கு வைக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். ‘உடைத்தது யார் குற்றம், உடைந்த சிற்பத்தை யார் தேர்வுசெய்வார்கள், உடைந்ததும் ஏன் என்னிடம் கூறவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். உடைந்த என் சிற்பத்துக்கு நீதி கேட்டு உயர் நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், முதல்வரின் தனிப்பிரிவு என அலைந்து கொண்டிருக்கிறேன்’’ என்று குமுறினார்.

ஆணையாளர் சந்திர மோகனைத் தொடர்பு கொண்டபோது, அவரின் உதவியாளர்தான் பேசினார். “இதுதொடர்பாக தமிழ்நாடு பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை மேலாளர் மதியரசுவிடம் பேசுங்கள்” என்றார்.

மதியரசுவிடம் பேசியபோது, “இது அர்த்த மற்ற குற்றச்சாட்டு. தேர்வுக் குழுவினர் அளித்த மதிப்பெண் அடிப்படையில், மணிகண்டனின் சிற்பம் விருதுக்குத் தேர்வாகவில்லை. அதையடுத்து, தன்னுடைய சிற்பத்தையே காட்சிப்படுத்த வில்லை என்றார் மணிகண்டன். அதற்கான புகைப்பட ஆதாரத்தைக் காட்டிய பிறகு, சிற்பத்தை உடைத்துவிட்டோம் என்று குற்றம் சாட்டுகிறார். தேர்வுக்கு வைக்கப்பட்டபோதும், அவரிடம் சிற்பம் ஒப்படைக்கப்பட்டபோதும், அது நல்ல நிலையில்தான் இருந்தது. விருது கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் அவரே சிற்பத்தை உடைத்துவிட்டு, இப்படி பிரச்னை களைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்’’ என்றார்.

யார் மீது தவறு என்பதை விசாரிப்பதற்கே தனி விசாரணை கமிஷன் போட வேண்டும் போலிருக்கிறதே!