Published:Updated:

நட்பு... தயக்கம்... 5 வருடக் காதல்!- சீனப் பெண்ணைக் கரம் பிடித்த சேலம் மருத்துவர்

அருண்பிரசாத் தன் பெற்றோரிடம் சீன நாட்டுப் பெண்ணைக் காதலித்து வருவதாகவும், இவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

திருமணம்
திருமணம்

சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் அருண்பிரசாத்திற்கும் சீன நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டல் ஜியாங்-கிற்கும் நடைபெற்ற காதல் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திருமணத்தில் வேற்றுமைகளை மறந்து இரு வீட்டுப் பெற்றோர்களும் கலந்துகொண்டது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அருண்பிரசாத் கிறிஸ்டல்
அருண்பிரசாத் கிறிஸ்டல்
எம்.விஜயகுமார்

இதுபற்றி அருண்பிரசாத்தின் உறவினர்களிடம் பேசியபோது, ``சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மருத்துவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கிப் பணியாற்றி வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகச் சீன நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டல் ஜியாங் பணியாற்றி வந்தார். இருவரும் எதிர்பாராத விதமாகச் சந்தித்து இருக்கிறார்கள். பிறகு ஒருவருக்கொருவர் நட்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். அருண் பிரசாத் முதலில் தன் காதலை கிறிஸ்டலிடம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காதலுக்குத் தயக்கம் தெரிவித்த கிறிஸ்டல் பிறகு சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து 5 வருடத்திற்கும் மேலாக இருவரும் உயிருக்கு உயிராக நேசித்து வந்தார்கள்.

பிறகு அருண்பிரசாத் தன் பெற்றோரிடம் சீன நாட்டுப் பெண்ணைக் காதலித்து வருவதாகவும், இவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு அருண்பிரசாத்தின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். அதேபோல கிறிஸ்டலும் அவருடைய பெற்றோரிடம் அருண்பிரசாத்தை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றார். இதையடுத்து இவர்களது திருமணம் கிறிஸ்துவ முறைப்படி கடந்த வாரம் சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது.

இருவரும் எதிர்பாராத விதமாகச் சந்தித்து இருக்கிறார்கள். பிறகு ஒருவருக்கொருவர் நட்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். அருண் பிரசாத் முதலில் தன் காதலை கிறிஸ்டலிடம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன் இத்திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமணத்தில் மணமகன் அருண்பிரசாத் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களும், மணமகள் கிறிஸ்டல் பெற்றோரும், நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். இன்னும் சில நாள்களில் அருண்பிரசாத், கிறிஸ்டல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பணியைத் தொடருவார்கள். ஜனவரி மாதத்தில் கிறிஸ்டல் குடும்பத்தினர் சீனாவில் இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்'' என்றார்கள்.