Published:Updated:

ஊர்நலம் காக்கும் உன்னத மருத்துவர்!

செல்வக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
செல்வக்குமார்

‘கொரோனாவுக்காக எங்க மண்டபத்தைக் கொடுத்தா, நாளைக்கு யாரும் எங்க மண்டபத்தை கல்யாணத்துக்கு புக் பண்ண மாட்டாங்க’ன்னு சொல்லிட்டாங்க

ஊர்நலம் காக்கும் உன்னத மருத்துவர்!

‘கொரோனாவுக்காக எங்க மண்டபத்தைக் கொடுத்தா, நாளைக்கு யாரும் எங்க மண்டபத்தை கல்யாணத்துக்கு புக் பண்ண மாட்டாங்க’ன்னு சொல்லிட்டாங்க

Published:Updated:
செல்வக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
செல்வக்குமார்

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவர்களின் பங்கு மகத்தானது. அதற்குச் சிறந்த உதாரணம் செல்வக்குமார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகிலுள்ள வேம்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் செல்வக்குமார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார். அடுத்த நாள் காலை தூங்கி எழுந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு வாசலில் மருத்துவம் பார்க்க வரிசை கட்டி கிராம மக்கள் குழுமி நின்றிருக்கின்றனர்.

ஊர்நலம் காக்கும் உன்னத மருத்துவர்!

‘ஊரில் பலருக்கும் சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அலட்சியமாக இருந்ததில், சுற்றுவட்டார கிராமங்களில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர்’ என்ற தகவல் டாக்டர் செல்வக்குமாருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனைக் கேட்டு அதிர்ந்துபோனார் அவர், ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து மருத்துவர் ஆன நாம், இந்தப் பேரிடர்ச் சூழலில் நம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார். தன் பணிக்கு 15 நாள்கள் விடுமுறை சொல்லிவிட்டு, கிராமத்திலிருந்த பள்ளி ஒன்றை சிகிச்சை மையமாக மாற்றி, சென்னையிலிருந்து மருத்துவக் குழு ஒன்றை வரவழைத்து, சிகிச்சையில் இறங்கினார் செல்வக்குமார்.

செல்வக்குமாரிடம் பேசினோம். “என்னோட அம்மா, அண்ணின்னு வீட்ல சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்குன்னு சொன்னாங்க. அவங்களை பக்கத்துல இருந்து கவனிச்சிக்கலாம்னு விடுமுறை சொல்லிட்டு சென்னையில இருந்து ஊருக்கு வந்தேன். நான் வந்த தகவல் தெரிஞ்சு, அடுத்தநாள் காலையில திபுதிபுன்னு ட்ரீட்மென்ட்டுக்காக ஊர் மக்கள் வீட்டு முன்னாடி கூடிட்டாங்க. அப்படி வந்தவங்களைக் கவனிச்சதோட, கொரோனாவைப் பத்தி விழிப்புணர்வைச் சொல்லி, டெஸ்ட் கொடுங்க, ஆஸ்பிட்டல் போங்கன்னு வழிகாட்டிட்டிருந்தேன். நான் அனுப்பிய பலரும் ஆஸ்பத்திரியில இடம் கிடைக்காம ஆம்புலன்ஸ்லயே இருக்கிறதா தகவல் சொன்னாங்க. அந்தச் சமயத்துல சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில வரிசையா ஆம்புலன்ஸ் நின்ன மாதிரி, சேலம் அரசு மருத்துவமனையில ஆம்புலன்ஸ் நிக்கிற வீடியோவைப் பார்த்தேன். சேலம் நிலைமையும் சிக்கலாகத்தான் இருக்குன்னு புரிஞ்சது. இதுக்கு நாம ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சப்பதான், ஏன் நாமளே ட்ரீட்மென்ட் கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு.

ஊர்நலம் காக்கும் உன்னத மருத்துவர்!

முதல்ல கல்யாண மண்டபங்கள்ல இடம் கேட்டோம். ‘கொரோனாவுக்காக எங்க மண்டபத்தைக் கொடுத்தா, நாளைக்கு யாரும் எங்க மண்டபத்தை கல்யாணத்துக்கு புக் பண்ண மாட்டாங்க’ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம்தான் உள்ளூர்ல இருக்கிற ‘மினர்வா’ங்கிற ஸ்கூல்ல இடம் தர முன்வந்தாங்க. ரெண்டே நாள்ல கொரோனா சிகிச்சை மையத்துக்கான அனுமதியை வாங்கினோம். சென்னை நண்பர்கள்கிட்ட பேசினதுல 2 டாக்டர்கள், 9 நர்ஸ்கள் வந்தாங்க. 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்து மாத்திரைகள்னு எல்லாத்தையும் சேலத்துக்கு வரவெச்சேன். ஹவுஸ்கீப்பிங்குக்குக்கூட லோக்கல்ல யாரும் முன்வரலை. அதுக்கும் ரெண்டு பேரை சென்னையிலிருந்தே வரவச்சேன். முதல்ல 20 பெட் போட்டு ட்ரீட்மென்ட்டை ஆரம்பிச்சேன். ரெண்டே நாள்ல 20 பெட்டும் நிரம்பிடுச்சு. உடனே கூடுதலா 25 பெட் போட்டு சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம்.

என்னோட முன்னெடுப்பைப் பார்த்துட்டு ரோட்டரி கிளப், பஞ்சாயத்துத் தலைவர், லோக்கல் அரசியல் பிரமுகர்கள்னு பலரும் சிகிச்சையில இருக்கவங்களுக்கு மூணு வேளையும் இலவசமா உணவு கொடுக்குறாங்க. கிராமத்துல என்கூட படிச்ச நண்பர்கள் சேலத்துக்குப் போய் ஆக்சிஜன் நிரப்பிட்டு வர்றது, மக்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதுன்னு பெரும் பக்கபலமாக இருக்காங்க. என்னோட அத்தை பையன் அவர்கிட்ட இருந்த ஆம்னி வேனைக் கொடுக்க, அதை ஆம்புலன்ஸ் மாதிரி பயன்படுத்திக்கிட்டிருக்கோம். ஆரம்பத்துல கொரோனாவை நினைச்சு பயந்து கிட்ட வராதவங்ககூட, இப்ப முன்னாடி வந்து நிக்கிறதைப் பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம முன்னாடி நின்னா, பின்னாடி வர நிறைய பேர் இருக்காங்கன்னு புரிஞ்சிக்க முடியுது. இதுவரை என்கிட்ட இருந்து 15 பேர் நல்லபடியா குணமாகி வீட்டுக்குப் போயிருக்காங்க. 45 பேர் இப்ப சிகிச்சையில இருக்காங்க.

டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் சம்பளத்துக்காக மட்டுமே குறைந்த தொகையைக் கட்டணமாக வாங்குறேன். மற்றபடி மருந்து, மாத்திரை, ஆக்சிஜன் என எல்லாமே இலவசமாகத்தான் கொடுக்குறேன். தினமும் காலையில ரெண்டு மணி நேரம் எங்க வீட்டுத் திண்ணையில உக்காந்து மக்களைப் பாக்குறேன். சென்னையிலிருந்து வந்த டாக்டர்கள், நர்ஸ்களோட நானும் ஸ்கூல்லயே தங்கியிருந்து மக்களை கவனிச்சிக்கிட்டு இருக்கேன். 15 நாள் தான் லீவ் சொல்லிட்டு வந்திருக்கேன். ‘நீங்க சென்னை போனாலும், நாங்க பக்கத்துல இருந்து பார்த்துக்கிறோம்’ன்னு லோக்கல்ல இருக்கும் டாக்டர்கள் சொல்றப்ப அவ்வளவு சந்தோஷமா இருக்கு.

எங்க அப்பா கல் உடைக்கிற ஒரு சாதாரண கூலித்தொழிலாளியா இருந்தவரு. நான் 6-வது படிக்கிறப்ப ஸ்ட்ரோக் வந்து இறந்துட்டாரு. சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம எங்க அம்மா என்னையும் எங்க மூணு அண்ணன்களையும் வளர்த்தெடுத்தாங்க. அந்த வெறியிலயேதான் படிச்சு டாக்டரானேன். ஏழ்மையான குடும்பத்துல இருந்து அரசுப்பள்ளி, அரசு மருத்துவக் கல்லூரின்னு படிச்சு இன்னைக்கு டாக்டராகியிருக்கேன். சென்னையில ‘சார்... சார்...’ங்கிற வார்த்தையைக் கேட்டுட்டு, இங்க ஊர்மக்கள் அவங்க வீட்டுப்பிள்ளை மாதிரி ‘வா கண்ணு. உடம்பு இப்ப பரவாயில்லை’ன்னு சொல்லுறப்ப, ஏதோ நெருக்கமா ஃபீல் ஆகுது. முன்னாடியே இதை செஞ்சிருந்தா ஒரு சிலரை கவனிச்சுக் காப்பாத்தியிருக்கலாமோன்னு தோணுது. எனக்கு காசு முக்கியமில்லை. அப்படியிருந்தா சென்னையிலயே ஏதாவது ஒரு இடத்தைப் புடிச்சு நான் இதைச் செஞ்சிருப்பேன். காசைத் தாண்டி நம்மால முடிஞ்ச உதவிகளை சக மனிதர்களுக்கு செய்றதுல பெரும் சந்தோஷம் இருக்கு” என்றார் மனநிறைவுடன்.

சோர்வடையச் செய்யும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் டாக்டர் செல்வக்குமார் போன்றோரின் முன்னெடுப்புகள், விரைவில் நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையைக் கூட்டுகின்றன.