அரசியல்
அலசல்
Published:Updated:

என்கிட்டயே சட்டம் பேசுறியாடா? - விவசாயியின் உயிரைக் குடித்த போலீஸ் திமிர்!

முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகேசன்

‘எதுக்கு சார் எங்களை அடிச்சீங்க? எங்க மேல தப்பு இருந்தா, கேஸ் போடுங்க’னு முருகேசன் கேட்டார்.

அந்த வீடியோவைப் பார்க்கும்போதே மனம் பதறுகிறது. நடுரோட்டில்வைத்து, விவசாயி ஒருவரை லத்தியால் விளாசுகிறது போலீஸ்... ‘‘அடிக்காதீங்க சார்... விட்ருங்க சார்’’ என்று கதறுகிறார்கள் அவரின் நண்பர்கள். வலி தாங்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுகிறார் அந்த நபர்!

தமிழகத்தையே அதிரவைத்த சாத்தான்குளம் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சேலத்தில் அதேபோல ஒரு கொடூரச் சம்பவத்தை காவல்துறை அரங்கேற்றியிருக்கிறது. இம்முறை போலீஸாரின் வன்முறைக்கு, அப்பாவி விவசாயி முருகேசன் பலியாகியிருக்கிறார். இதை பலி என்று சொல்வதைவிடவும், போலீஸ் செய்த கொலை என்று சொல்வதே பொருத்தம்!

என்கிட்டயே சட்டம் பேசுறியாடா? - விவசாயியின் உயிரைக் குடித்த போலீஸ் திமிர்!

ஜூன் 22-ம் தேதி, மாலை சுமார் 5 மணி... சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் போலீஸார் நான்கு பேர் வாகனத் தணிக்கை செய்துகொண்டிருந்தார்கள். அந்த வழியாக இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன், சிவன்பாபு, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வந்திருக்கிறார்கள். மூவரும் மது போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களை மடக்கிய போலீஸார், ‘‘ஊரடங்கு நேரத்துல எங்க போறீங்க?’’ என லத்தியால் அடித்ததுடன், பைக்கின் சாவியைப் பறித்துக்கொண்டார்கள்.

முருகேசனின் நண்பரும், இந்தத் தாக்குதலை வீடியோ எடுத்து வெளியிட்டவருமான சிவன்பாபு அங்கு நடந்தவற்றை நம்மிடம் பதற்றத்துடன் விவரித்தார்... ‘‘ஒரு விசேஷத்துக்குப் போயிட்டு, பைக்ல ஊருக்கு வந்துட்டு இருந்தோம். பாப்பநாயக்கன்பட்டி செக்போஸ்ட்ல, போலீஸ் எங்க வண்டி சாவியைப் பிடுங்கிக்கிட்டு அடிக்க ஆரம்பிச்சாங்க. ‘எதுக்கு சார் எங்களை அடிச்சீங்க? எங்க மேல தப்பு இருந்தா, கேஸ் போடுங்க’னு முருகேசன் கேட்டார். ஆத்திரமடைஞ்ச எஸ்.எஸ்.ஐ பெரியசாமி, ‘போலீஸ்கிட்டயே சட்டம் பேசுறியாடா’னு முருகேசனை நெஞ்சுல எட்டி உதைச்சு, லத்தியால விளாச ஆரம்பிச்சார். ‘அடிக்காதீங்க சார்... விட்ருங்க சார்...’னு கெஞ்சியும் அவரு கேட்கவே இல்ல. மண்டையில ஓங்கி ஒரு அடி அடிச்சதும், முருகேசன் ரோட்டுலயே சரிஞ்சு விழுந்துட்டாரு. அப்பவே பாதி உசுரு அவருக்குப் போயிருச்சு.

என்கிட்டயே சட்டம் பேசுறியாடா? - விவசாயியின் உயிரைக் குடித்த போலீஸ் திமிர்!
என்கிட்டயே சட்டம் பேசுறியாடா? - விவசாயியின் உயிரைக் குடித்த போலீஸ் திமிர்!

அரை மணி நேரம் முருகேசன் ரோட்டுலயே கெடந்தாரு. போலீஸ்காரங்க 108-க்குக்கூட போன் பண்ணலை. கடைசியா பைக் சாவியை போலீஸ் கொடுத்ததும், அந்த பைக்லயேதான் முருகேசனைத் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில அட்மிட் செஞ்சோம். அன்னைக்கே தும்பல், ஆத்தூர்னு ரெண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தும் முன்னேற்றம் இல்லாததால, சேலம் ஜி.ஹெச்-க்கு அனுப்புனாங்க. மறுநாளே அங்கே அவர் செத்துட்டார்...’’ என்று அழுதார்.

முருகேசனின் உடலைப் பெறுவதற்காக அவரின் மனைவி அன்னக்கிளி, சேலம் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு கண்ணீருடன் காத்திருக்க, மகள்கள் ஜெய பிரியா, ஜெய பிருந்தா மகன் கவிப்பிரியன் ஆகியோர் காவல் நிலையத்தில் கலங்கிப்போய்அமர்ந்திருந்தார்கள். ஜெய பிரியா நம்மிடம், ‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என்னை காலேஜ்ல சேர்த்துட்டு ‘என் புள்ளைங்க நல்லா படிக்கணும். அதுக்கு நான் எவ்ளோ கடன்பட்டாலும் பரவாயில்லை’னு சொன்னாரு. அடிச்சுக் கொல்ற அளவுக்கு எங்க அப்பா அப்படி என்ன தப்பு பண்ணினாரு’’ என்று விசும்பினார். அவரின் அம்மா அன்னக்கிளி, ‘‘வயசுக்கு வந்த ரெண்டு பொம்பளைப் புள்ளைகளையும், சின்னப் பையனையும் எப்படி கரையேத்தப் போறேன்னு தெரியலையே... என் புருஷன் சாவுக்கு என்னதான் நீதி கிடைச்சாலும், அவர் திரும்ப கிடைப்பாரா?’’ எனத் தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

பெரியசாமி
பெரியசாமி

முருகேசன் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் அவரின் உறவினர்கள், ஊர் மக்கள் என சுமார் 200 பேர் ஏத்தாப்பூர் காவல் நிலையம் முன்பு கூடி போராட்டத்தில் இறங்கினார்கள். சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி அபிநவ் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ பெரியசாமியைக் கைது செய்த போலீஸ், சம்பவ இடத்திலிருந்த காவலர்கள் மூவரிடமும் விசாரணை நடத்திவருகிறது. உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

போலீஸாரின் அதிகாரப்பசிக்கு சாமானியர்கள் பலியாகும் கொடூரம் எப்போது நிற்கும்?

மாற்றுத்திறனாளி மீதும் தாக்குதல்!

என்கிட்டயே சட்டம் பேசுறியாடா? - விவசாயியின் உயிரைக் குடித்த போலீஸ் திமிர்!
என்கிட்டயே சட்டம் பேசுறியாடா? - விவசாயியின் உயிரைக் குடித்த போலீஸ் திமிர்!

தென்காசி மாவட்டம், புளியரை தாட்கோ நகரில் குடியிருக்கும் ஃபிரான்சிஸ் அந்தோணி என்ற மாற்றுத்திறனாளியை செங்கோட்டை போலீஸார் கொடூரமாகத் தாக்கிய விவகாரமும் சர்ச்சையாகியுள்ளது. தன் உறவினரின் வீட்டுக்கு, 20 கிலோ ரேஷன் அரிசியுடன் சென்றவரை, அரிசி கடத்தியதாக மடக்கிய போலீஸார், அவரைச் சுவரில் சாய்ந்து நிற்கச் சொல்லி, பின்பக்கத்தில் கொடூரமாக அடித்துள்ளார்கள். பூட்ஸ் காலால் நெஞ்சிலும் மிதித்து, அவர்மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரின் மகள் அபிதா கடுமையாகப் போராடியதை அடுத்து, செங்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், தலைமைக் காவலர் மஜீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.