Published:Updated:

`இந்தக் குழந்தையால் எங்களுக்கு அவமானம்!’ -மகளுக்கே தெரியாமல் 3 லட்ச ரூபாய்க்கு விற்ற சேலம் பெற்றோர்

சேலம் மாவட்டத்தில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் தன் மகளின் சொந்தக் குழந்தையை 3 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர் பெற்றோர்.

சேலம் தம்பதி
சேலம் தம்பதி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - மீனா தம்பதி. இவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்துப் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

மீனா - ராஜா தம்பதி
மீனா - ராஜா தம்பதி

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மீனாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த உடன் மீனாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தாயையும் குழந்தையையும் மீனாவின் பெற்றோரான சாந்தி, பொன்னுசாமியிடம் ஒப்படைத்துவிட்டு, நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார் ராஜா.

ஆனால், மீனாவின் பெற்றோர்களோ, அந்தக் குழந்தையைச் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ராஜா, ``நானும் மீனாவும் உறவினர்கள். காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். திருப்பூரில் வாழ்ந்து வந்த எங்களுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

குழந்தை
குழந்தை

அந்தச் சமயத்தில் மீனாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், என்னால் தனியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் குழந்தையையும் மீனாவையும் அவரின் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். நான் அவர்களுக்கு எப்போது போன் செய்து விசாரித்தாலும் தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மீனாவின் பெற்றோர் கூறி வந்தனர். ஆனால், குழந்தை பிறந்த இரண்டு வாரத்துக்குள், அவர்கள் வேறு ஒருவருக்கு குழந்தையை விற்றுள்ளனர். மீனாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவளுக்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது.

ஆண் குழந்தை ரூ.1.15 லட்சம்... தரகருக்கு ரூ.20,000! - திருச்சியை அதிரவைத்த குழந்தை விற்பனை

தற்போது அவள் உடல்நிலை சீரான பிறகே குழந்தை விற்கப்பட்டுள்ள விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. தகவல் அறிந்து மீனாவின் பெற்றோரிடம் இதுபற்றிக் கேட்டேன்.

அதற்கு, `மீனாவுக்கும் உனக்கும் சகோதர சகோதரி முறை வருவதால், எங்களுக்கு அவமானமாக உள்ளது. அதனாலேயே குழந்தையை விற்றோம். இதுபற்றிப் புகார் அளித்தால் கொன்றுவிடுவோம்' எனவும் மிரட்டுகிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ராஜா
ராஜா

குழந்தை விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று ராஜாவும் மீனாவும் குழந்தையை மீட்டுத் தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இளம் தம்பதியரின் குழந்தையைப் பெண்ணின் தாயே விற்பனை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.