Election bannerElection banner
Published:Updated:

இயற்கை வளத்தைச் சுரண்டும் மணல் குவாரிகள்... நடவடிக்கை எடுப்பாரா நாகை மாவட்ட ஆட்சியர்?!

மணல் குவாரி
மணல் குவாரி

முடிகண்டநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உண்மை நிலையை நீதிமன்றத்துக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய நகராட்சியாக உள்ளது. 150 ஆண்டுகளைக் கடந்த இந்த நகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள முடிகண்டநல்லூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்று நீரேற்று நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து குழாய் வழியாக மயிலாடுதுறையில் உள்ள சுமார் 12,000 வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

ஆரம்ப காலத்தில் மக்களுக்குக் காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணிநேரம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மணல்குவாரிகள் முடிகண்டநல்லூர் பகுதியில் செயல்படத் தொடங்கியபிறகு, மணல்குவாரிகள் சுமார் 30 அடி ஆழம் வரை மணலை எடுத்ததால் குடிநீர் சேகரிக்கும் தொட்டிக்கு நீர்வரத்து குறைந்தது. குடிநீர் கிணற்றிலிருந்து 1 கி.மீ தூரத்தில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளியபோதே கிணற்றுக்கு வரும் நீர் குறைந்துவிட்டது. தற்போது குடிநீர்த் தேக்கத்தொட்டிக்கு 500 மீ. பக்கத்திலேயே மணல்குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை நகரில் மாலை வேளையில் குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மணல் குவாரி குத்தகையை எடுத்து விடிய விடிய மணலை அள்ளிச்சென்று கரையேற்றி ராதாநல்லூர் பகுதியில் கிடங்கில் சேமித்து லாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். ஆற்றின் நடுவில் லாரி செல்வதற்குப் பாதை அமைத்து நாள் ஒன்றுக்கு 300 லாரிகள் முதல் 600 லாரிகள் வரை மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் மயிலாடுதுறை நகராட்சிக்குத் தண்ணீர் கிடைக்கும் ஆதாரம் அடியோடு நாசமாகி வருகிறது. தற்போது மணல் குவாரி நடத்தும் இடத்திற்கு அருகில்தான் குமாரமங்கலம் - ஆதுனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்திற்கு அருகில் மணல் குவாரி அமைத்து, சகட்டுமேனிக்கு மணலை 20 அடி ஆழம்வரை அள்ளுவதால் தடுப்பணை கட்டுவதிலும் பிரச்னை ஏற்படும்.

மணல் குவாரி
மணல் குவாரி

இந்நிலையில் கடலங்குடியைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இந்த மணல் குவாரியைத் தடைசெய்யக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இவர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டனர். பொதுப்பணித்துறையினர் சமூக அக்கறையுடன் செயல்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை, அவர்களால்தான் மணல் குவாரியில் மாபெரும் முறைகேடு நடைபெற்று வருகிறது,

மணல் குவாரி
மணல் குவாரி

``தடுப்பணை கட்டுவதற்கும் மணற்குவாரி நடத்தும் இடத்திற்கும் இவ்வளவு தூரம், தடுப்பணை கட்டுமானப் பணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பதில் எழுதி விடுவார்கள். ஏற்கெனவே கொள்ளிடம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகாலமாக முடிகண்டநல்லூர், ராதாநல்லூர், பாப்பாக்குடி, ராஜசூரியன்பேட்டை, சித்தமல்லி, சித்தமல்லி 2, பனங்காட்டாங்குடி, வடரெங்கம், மாதிரவேளுர், பட்டியமேடு பகுதிகளில் மணல்குவாரிகளை அடுத்தடுத்து அமைத்து இயற்கை வளத்தையே அழித்து விட்டனர்.

எனவே, நாகை மாவட்ட கலெக்டர் இப்பகுதியின் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்து, நிலத்தடி நீர் மட்டம் தற்பொழுது எந்த அளவிற்குக் குறைந்துள்ளது என்று கணக்கிட்டு மயிலாடுதுறை கோட்டத்தில் எந்த இடத்திலும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி நடத்தக்கூடாது என்ற அளவிற்கு அறிக்கை அளிக்க வேண்டும்" என்று மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு