Published:Updated:

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

 சோமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
சோமங்கலம்

- என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

- என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

Published:Updated:
 சோமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
சோமங்கலம்
‘நிவர்’, ‘புரெவி’ என அடுத்தடுத்து உருவாகும் புயல்கள் தமிழகத்துக்குத் தொடர் மழையைக் கொடுத்துவருகின்றன. இந்தநிலையில், நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து பேச்சு எழுந்துள்ளது. இதற்கு நடுவே, ‘‘ஏரியை ஆழப்படுத்துகிறேன் என்கிற பெயரில் எங்கள் ஊர் சித்தேரியைச் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள்’’ என்கிற கதறல் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திலிருக்கும் சோமங்கலம் கிராமத்திலிருந்து ஒலிக்கிறது!

‘நிவர் புயலுக்குப் பிறகு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைகள் எப்படியிருக்கின்றன?’ என்கிற கேள்வியுடன் டிசம்பர் 2-ம் தேதி அன்று ஏரிகளைத் தேடி பயணத்தை மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 90 சதவிகித ஏரிகளில் நீர் ததும்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலான ஏரிகள் குடிமராமத்துப் பணியின் கீழ் தூர்வாரப்பட்டிருக்கின்றன என்பதை அவற்றின் கரைகளே நமக்குக் கண்கூடாக உறுதிப்படுத்தின. அதேசமயம், ஏரிகளின் உள்ளே முறைப்படி தூர்வாரவில்லை என்பதை அவற்றின் ஆக்கிரமிப்புகளே வெளிச்சம்போடவும் செய்தன. மகிழ்ச்சியும் கவலையுமாக நாம் பயணித்தபோதுதான் சோமங்கலம் சித்தேரியில் நமக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

ஏரி முழுக்க நீர் நிரம்பியிருக்க, அதன் நீர்ப்பிடிப்பு பகுதியையொட்டி 20-க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையிலேயே வரிசைகட்டி நின்றன. பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு வேக வேகமாக ஏரியிலிருந்து மண்ணை அள்ளி லாரிகளில் நிரப்பிக்கொண்டிருந்தனர். வண்டியை நிறுத்திவிட்டு, கேமராவைத் தூக்கியதுதான் தாமதம்... ஓடோடி வந்த வாட்டசாட்டமான ஆட்கள் சிலர், ‘‘எதுக்காக இங்கே நிக்குறீங்க... யார் நீங்க... ஏன் படம் எடுக்குறீங்க?’’ என்று மிரட்டல் தொனியில் கேள்விகளை எழுப்பினர்.

‘‘ஜூனியர் விகடனிலிருந்து வந்திருக்கிறோம்’’ என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘இது மண் குவாரி. முறைப்படி அனுமதி வாங்கித்தான் மண்ணை எடுக்கிறோம். டெண்டர் முடிய இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அதான் அள்ளிக்கிட்டிருக்கோம்’’ என்று விறைப்பாகச் சொல்ல, நமக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘ஏரிக்குள் மண் குவாரி அமைப்பதே தவறானது. அப்படியிருக்க, இதற்கு அனுமதி எப்படிக் கிடைத்தது... தற்போது ஏரி முழுக்க தண்ணீர் நிரம்பியிருக்கும் சூழலிலும் வேக வேகமாக மண் அள்ளுவதை எப்படி பொதுப்பணித்துறை வேடிக்கை பார்க்கிறது?’ என்றெல்லாம் கேள்விகள் எழ, ஊருக்குள் சென்று விசாரித்தோம்.

‘‘சார்... மூணு மாசமா ராத்திரி பகலா இப்படித்தான் அள்ளுறாங்க. இப்போ கரையோரம் நீங்க பார்த்ததெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க. தண்ணி வராத சமயத்துல கரையையொட்டி மூணு ஆள் உயரத்துக்கு மண் அள்ளியிருக்காங்க. ரெண்டு மூணு லாரியே உள்ளே போய் வர்ற அளவுக்குப் பெரிய பெரிய பள்ளமா தோண்டியிருக்காங்க. ஆளுங்கட்சிக்காரங்க ஆதரவு இருக்கிறதால யாரும் தட்டிக்கேட்க முடியலை. தி.மு.க-வுல இருக்கிற ரமேஷ்தான் கலெக்டர் ஆபீஸ் வரை மனு கொடுத்தாரு. அவரைப் போய்ப் பாருங்க, ஏதாச்சும் தகவல் கிடைக்கும்’’ என்றார்கள் ஊர்க்காரர்கள்.

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

சோமங்கலம் தி.மு.க கிளைக்கழகச் செயலாளரான ரமேஷைச் சந்தித்தபோது, “எங்க ஊர்ல பெரிய ஏரி, சித்தேரினு மொத்தம் ரெண்டு ஏரிகள் இருக்கு. சோமங்கலம், மேட்டூர், மேலாத்தூர் உள்ளிட்ட சுத்துப்பட்டு கிராமப் பகுதிகளுக்கு இந்த ஏரிகள்தான் குடிநீர், விவசாயம் எல்லாத்துக்கும் ஆதாரம். சித்தேரி பல வருஷங்களா தூர்வாரப்படாமல் இருந்துச்சு. இந்த வருஷம் ஏரியில தேங்கியிருக்கிற மிகை மண்ணை அள்ளுறதுக்கு டெண்டர்விட்டு ஏரியை ஆழப்படுத்த ஆரம்பிச்சாங்க. ஆனா, டெண்டர் எடுத்தவங்களோ வகைதொகை இல்லாம ஏரியைக் குதறிட்டாங்க. ‘ஏரியை ஆழப்படுத்துறது சந்தோஷம்தான். ஆனா, அதை முறையா பண்ணுங்க’னு சொன்னோம். அவங்க எதையுமே காதுல வாங்கிக்கலை. இப்படி ஏரியை முறையில்லாம ஆழப்படுத்துறதுல ரெண்டு பாதிப்பு இருக்கு. ஒண்ணு, ஏரியின் ஆழத்துக்கு நீர்மட்டம் இறங்கிட்டா பாசனக் கால்வாய்க்கு தண்ணி ஏறாது. விவசாயம் பாதிக்கும். இன்னொண்ணு, திடீர்னு அங்கங்கே ஏரியில மண்ணை வெட்டி ஆழப்படுத்திட்டா, இது தெரியாம ஏரியில இறங்குற ஆளுங்க தண்ணியில மூழ்கி இறப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கு.

‘ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் 28,352.70 கனமீட்டர் அல்லது 4,725 லாரி (ஒரு லோடுக்கு 2 யூனிட் வீதம்) லோடு மண் எடுக்கலாம்’னு குறிப்பிட்டுத்தான் 65 நாள்கள் வரை மண் அள்ள முதல்ல அனுமதி கொடுத்திருக்காங்க. ஆனா, ஆக்கிரமிப்புகளைத் துளிக்கூட அகற்றவே இல்லை. அதுக்கு பதிலா ஏரியையே குவாரியா மாத்திட்டாங்க. ஒரு லாரி லோடுக்கு 8-லருந்து 10 யூனிட் வீதம் ராத்திரி பகலா பல்லாயிரக்கணக்கான லாரிகள்ல மண் அள்ளினாங்க. ‘இப்படி அநியாயம் பண்றீங்களே’னு கேட்டதுக்கு, ‘எல்லாத் துக்கும் அனுமதி இருக்கு. நீயெல்லாம் எதுவும் கேட்கக் கூடாது’னு போலீஸை வெச்சு மிரட்டினாங்க.

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

65 நாள் மண் அள்ளி காசு பார்த்தவங்க, கூடுதலா 35 நாள் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பிச்சாங்க. இது எங்களுக்கு தெரிஞ்சதுமே, ‘ஏற்கெனவே அரசாங்கம் சொல்லியிருக்கும் அளவைத் தாண்டி சுமார் 25 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி மண் எடுத்திருக்காங்க. மீண்டும் அனுமதிச்சா மொத்த ஏரியையும் சிதைச்சிடுவாங்க’னு கலெக்டர் ஆபீஸ்ல மனுகொடுத்தோம். ஆனா, ஆளுங்கட்சிக் காரங்க ஆதரவு இருக்கறதால, ஊர்லயே இன்னொரு தரப்பு ஆள்களைத் திரட்டி, ‘ஏரியில இன்னும் மிகை மண் இருக்கு. அதை எடுக்கணும்’னு மனு கொடுத்து அனுமதி வாங்கிட்டாங்க.

டிசம்பர் 4-ம் தேதிதான் கடைசி நாள். அதனால பேய் வேகத்துல மண் அள்ளினாங்க. நடுவுல மழை வந்ததால ஏரி நிரம்ப ஆரம்பிச்சுடுச்சு. அப்பவும் விடாம பெரிய ஏரியிலிருந்து சித்தேரிக்கு வர்ற தண்ணியைத் தடுத்துட்டு, மண்ணை அள்ளிக்கிட்டிருக்காங்க. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுக்கலை. எல்லாம், பணம் சார் பணம்’’ என்றார் வேதனையுடன்.

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

நீர்நிலைகள் குறித்துத் தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்திவரும் அறப்போர் இயக்கத்தின் ஹாரிஸ் சுல்தானிடம் பேசினோம். “தூர்வார்றதுக்கும், டெண்டர்விட்டு மிகை மண்ணை எடுக்குறதுக்கும் ஏராளமான விதிமுறைகள் இருக்கு. ஆனா, எதையுமே இவங்க கடைப்பிடிக்கிறது கிடையாது. மிகை மண் ஒவ்வோர் இடத்துலேயும் ஒவ்வோர் அளவுக்கு இருக்கும். கலெக்டரோட நேரடிப் மேற்பார்வையில எந்தெந்த இடத்துல, எவ்வளவு ஆழத்துக்கு மிகை மண் இருக்குனு அளந்து, அந்த இடங்கள்ல மட்டும் மண் எடுக்கணும். எவ்வளவு மண் எடுக்கப் படுதுங்கிறதை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் களத்துல இருந்து கண்காணிக்கணும். ஆனா, அப்படி எதுவும் இங்கே நடக்குறதில்லை. டெண்டர் விட்டுட்டுப் போயிடுறாங்க. இவங்க இஷ்டம்போல மண் அள்ளுறாங்க. வடகிழக்குப் பருவமழைக் காலங்கள்ல இப்படியான பணிகளுக்கு அனுமதி தரவும் மாட்டாங்க. அதையும் மீறி அனுமதி கொடுத்திருக்காங்க என்பதே அதிர்ச்சியா இருக்கு’’ என்றார்.

செத்துக்கொண்டிருக்கும் சித்தேரி! - அதிரவைக்கும் மண் கொள்ளை

கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘‘ஏரியில் மண் எடுக்கலைன்னா, பொதுப்பணித்துறை தூர்வாராததால தண்ணீர் வீணா கடல்ல கலக்குதுனு சொல்லுவாங்க. மண் எடுத்தா, மண்ணை எடுத்து விக்கிறாங்கனு சொல்லுவாங்க. அவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லை’’ என்று அலுத்துக்கொண்டவர், ‘‘ஏரியை ஆழப் படுத்தும் நோக்கத்துல டெண்டர் விட்டுத்தான் மண் அள்ள அனுமதிச்சிருக்கோம். அங்கே ஏதாவது தவறு நடந்தா சொல்லுங்க... நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றவரிடம், நாம் அங்கே கண்ட காட்சிகளையும், மக்களின் புகார்களையும் எடுத்துவைத்தோம். ‘‘அப்படி நடந்தா உடனே பணியை நிறுத்திட்டு நாளைக்கே அவங்களை வெளியேறச் சொல்றேன்’’ என்றார் சலிப்புடன். ‘‘இன்னும் இரண்டு நாள்களில் டெண்டரே முடியப்போகிறது. பிறகு எப்படி சார் சரிசெய்ய முடியும்?’’ என்று அவரிடம் கேட்டோம். ‘‘ஓ அப்படியா! அப்படினா, அவங்க செஞ்ச தப்பையெல்லாம் சரிசெஞ்சுட்டு வெளியேறச் சொல்றேன்’’ என்றார் அசராமல்.

ரமேஷ் - ஹாரிஸ் சுல்தான்
ரமேஷ் - ஹாரிஸ் சுல்தான்

முதலமைச்சரின் சொந்தத் துறையிலேயே இவ்வளவு அவலங்கள்... இதில் ‘குடிமராமத்து நாயகன்’ என்று பாராட்டுகள் வேறு... உண்மையிலேயே முதல்வர் பழனிசாமிக்கு அக்கறையிருந்தால் செத்துக்கொண்டிருக்கும் சித்தேரியை உடனடியாகக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!