Published:Updated:

சங்கத் தமிழர் நாம்!

சங்கத் தமிழர் நாம்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கத் தமிழர் நாம்!

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

சங்கத் தமிழர் நாம்!

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
சங்கத் தமிழர் நாம்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கத் தமிழர் நாம்!

சங்க இலக்கியத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

‘உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்கே வழங்கி வெற்றிவாகை சூடச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்ற அறிவிப்பு ஒலிக்காத தெருக்களே கடந்த மாதங்களில் தமிழகத்தில் இருக்காது. இதில் ‘வெற்றிவாகை’ என்ற சொல்லில் இருக்கும் வாகை, ஒரு மலரைக் குறிக்கிறது. சங்க காலத்தில் போரில் வெற்றிபெற்ற வீரர்கள், இந்த வாகை மலரைச் சூடிக் கொள்வார்கள். இந்த வழக்கம்தான் சொற்களில் இத்தனை நூற்றாண்டுகள் பயணித்து, இன்றைக்குத் தேர்தல் வரை வந்திருக்கிறது. இப்படி நம்மிடையே இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கும் சங்க காலச் சொற்கள் ஏராளமானவற்றைப் பட்டியலிட முடியும்.

தற்காலம்வரை நம்மை விடாமல் தொடரும் சங்க இலக்கியத்தை சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் கொண்டு செல்லும் முயற்சிதான் ‘சங்கம் சொல்.’ பிரதிக் சுதா முரளி என்ற வரலாற்றியல் மாணவரும், விக்ரம் நிவாஸ் என்ற ஓவியரும் இணைந்து தற்காலப் பயன்பாட்டில் உள்ள சங்க இலக்கியச் சொற்களை ஓவியங்கள் மூலம் விளக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

“ஒரு சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை செறிவான இலக்கியங்களைப் படைத்திருக்கிறது என்றால், அது எவ்வளவு மேம்பட்ட சமூகமாக அப்போது இருந்திருக்கும்; இலக்கியங்கள் என்றால், அரசர்கள் மட்டுமே பாடப்பட்டிருப்பார்கள் என்றில்லாமல், சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது சங்க இலக்கியங்களின் மீதான என்னுடைய காதலை மேலும் தீவிரப்படுத்தியது. அதிலும் நம் பாட்டி, பாட்டனாகிய அந்த வெகுமக்கள் பேசிய சொற்களில் சிலவற்றை இன்றைக்கும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது என்றைக்கும் எனக்கு பிரமிப்பு குறையாத ஒன்று!” பிரதிக்கின் சொற்களில் உற்சாகம் ததும்புகிறது.

சங்கத் தமிழர் நாம்!

குறையாத உற்சாகத்துடன் மேலும் தொடர்ந்த அவர், “அச்சம், அங்காடி, அடி, அகல், அகலம் என இன்றைக்கு நாம் வெகு இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள் நம்முடைய சங்க இலக்கியப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன. இதைப் பரவலாக்க வேண்டும், கவனப்படுத்த வேண்டும் என்ற யோசனையின் விளைவாக ‘சங்கம் சொல்’ உருவானது. முதலில் ‘சங்கம் சொல்’ என்ற தலைப்பில் அறிஞர்களைக் கொண்டு மாதாந்திர உரைகள் ஏற்பாடு செய்வது என்றுதான் திட்டமிட்டோம். ஆனால், ஆர்வம் உள்ளவர்களைத் தாண்டி இது போய்ச் சேருமா என்ற கேள்வி உடனே எழுந்தது. எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே நோக்கம் என்பதால், இளைஞர்கள் அதிகம் இயங்கும் சமூக வலைதளங்களில் இதை முன்னெடுப்பது என்று முடிவெடுத்தோம்” என்று ‘சங்கம் சொல்’ தோன்றிய கதையைச் சொல்கிறார்.

“இளைஞர்கள் அதிகம் இயங்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்தான் முதலில் ‘சங்கம் சொல்’லைத் தொடங்கினோம். சொற்களுக்கான விளக்கத்தை ஓவியங்களோடு வழங்குவது என்ற யோசனை மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், விளக்கத்தை ஆங்கிலத்திலும் வழங்குவது, தமிழகம் தாண்டி வட இந்திய இளைஞர்களையும் கவர்ந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாகவும் நிறைவாகவும் இருந்தது. சொற்களின் ஆங்கில விளக்கத்தைப் பார்த்துவிட்டு சிலர், சங்க இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்” எனப் பெருமை பொங்க பிரதிக் கூறுகிறார்.

இதுவரை நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை பாடல்களின் சொற்களுக்கான விளக்கத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், கணிசமான சொற்கள் சேர்ந்த பிறகு அவற்றைத் தொகுத்து ‘சங்கம் சொல்’ புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்; சங்கப் பாடல்களை இசையமைத்து அவற்றை மேடையேற்றும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள் இந்தச் சங்கம் சொல் இளைஞர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism