கட்டுரைகள்
Published:Updated:

அன்று வந்ததும் அதே கொரோனா!

சார்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சார்ஸ்

ஆனந்த விகடன் பொக்கிஷம்... 13-04-2003 இதழிலிருந்து...

கே.எஸ்.வெங்கட்ராமன், படங்கள்:சாமிநாதன்

பிஸியான ஒரு நகரம் ‘க்வான்சாவ்.’ இந்த நகரத்திலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் ஹாங்காங் மெட்ரோபோல் ஓட்டலுக்கு வந்து தங்கிவிட்டுச் சென்ற ஒரு மனிதருக்குக் கடும் ஜுரமும் தலைவலியும் இருந்தது பெரிய விஷயமல்ல.

ஆனால்... அவர் தங்கிவிட்டுச் சென்ற அடுத்த சில நாள்களில் அந்த ஓட்டல் பணியாளர்களையும் அதேபோல் காய்ச்சலும் தலைவலியும் தாக்க, அத்தனை பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

சார்ஸ்
சார்ஸ்

இரண்டே நாள்களில் அந்த மருத்துவமனைப் பணியாளர்கள் பலருக்குக் காய்ச்சலும் தலைவலியும் ஒரே நேரத்தில் வந்தன... அவ்வளவுதான்... அந்தப் படுபயங்கரத் தொற்றுநோய் ஹாங்காங்கையே காட்டுத்தீப் போல் பற்றிக்கொண்டு கலவரப்படுத்திவிட்டது! Severe Acute Respiratory Syndrome என்பதன் சுருக்கம்தான் சார்ஸ்! இதை அசாதாரணமான நிமோனியா என்று சொல்லலாம். இந்த நோய் உண்டாவதற்குக் காரணம் ‘கரோனா வைரஸ்.’

சார்ஸ்
சார்ஸ்

காய்ச்சல், கடும் தலைவலி என ஆரம்பித்து, நுரையீரலையே பாதிக்கும் அளவுக்குப் போய், நோயாளிகளுக்கு நிமோனியா வந்து மூச்சு விடவே சிரமப்பட்டதால், SARS என்றும், அசாதாரண நிமோனியா என்றும் மருத்துவ உலகம் இதற்குப் பெயரிட்டது. சாதாரண நிமோனியாவின் மருந்துகள் இந்த நோய்க்கு பலன் தராது என்று தெரிய வந்ததும் பீதி பரவியது.

கொரோனா
கொரோனா

இதில் பலரது நிலைமை மிக சீரியஸாகி, செயற்கை சுவாசம் தரவேண்டிய அபாயக் கட்டத்துக்குப் போனதும் சீனாவிலிருந்து வியட்நாமுக்கு வந்த சார்ஸ் நோயாளி ஒருவர் இறந்துபோக, அடுக்கடுக்காகத் தொடர் இறப்பு தொடங்கவும் மருத்துவ உலகமே மிரண்டு நிற்கிறது!

1918-களில் பரவிய கொடிய நிமோனியா போல் இல்லாவிட்டாலும் (அப்போது இறந்தவர்கள் பல லட்சம் பேர்) சாதாரண சளியோ, காய்ச்சலோ போல இதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது என்பதை உணர்ந்துகொள்ளவே இரண்டுவாரம் பிடித்தது.

சார்ஸுக்கு அறிகுறி என்று பார்த்தால் காய்ச்சல், தலைவலி மற்றும் இறுகிய தசைகள் போன்றவைதான்.

அன்று வந்ததும் அதே கொரோனா!

இந்த வைரஸ் எப்படித் தோன்றியது என்பது பற்றிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ‘பன்றிகளிடமிருந்து தோன்றியிருக்கலாம்’ என்று ஒரு கூட்டமும் ‘இருக்கவே முடியாது’ என்று மற்றொரு கூட்டமும் மல்லுக்கட்டுகின்றன. ஆனால், உற்பத்தியான இடம் சீனா, அதைச் சிரமேற்கொண்டு பரவவிட்டது ஹாங்காங். இவை மட்டும் மறுப்பில்லாத உண்மைகள்!

சீனா, ஹாங்காங் அல்லாமல் அதிவேக விமானப்பயணத்தால் சுருங்கிப்போன உலகில் பதின்மூன்று நாடுகளை சார்ஸ் பதம் பார்த்துள்ளது. இதில் உயிரிழப்பு என்று பார்த்தால், கனடாவிலும் சிங்கப்பூரிலும்தான் அதிகம். இந்த வியாதி லிஸ்ட்டில் புதிதாக இடம்பிடித்திருப்பது ஆஸ்திரேலியா!

சார்ஸ்
சார்ஸ்

‘சார்ஸ்’ வராமல் தடுப்பது எப்படி?

சார்ஸ் உள்ள ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, அவர் சுவாசப்பையிலிருந்து வரும் ஈரத்துகள்கள் இந்த வைரஸைப் பரப்பிவிடும்.

‘மனித உடலுக்கு வெளியே காற்றில் ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இந்த வைரஸ் உயிரோடிருக்கும்’ என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால் லிஃப்ட்டுக்குள் சார்ஸ் நோயாளி நுழைந்து வெளியேறியிருந்தால் அடுத்த மூன்று மணி நேரம் வரை அந்த வைரஸ் அங்கே இருக்க வாய்ப்புள்ளது. அந்தச் சமயத்தில் லிஃப்ட்டைப் பயன்படுத்த நேர்கிற அத்தனை பேரும் சார்ஸ் நோயாளிகளாகிற அபாயம் இருக்கிறது!

ஆக, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சோப் போட்டுக் கை கழுவுவதும் முகமூடி அணிவதும் சார்ஸ் நோய் தாக்கிய ஆட்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளாமல் இருப்பதும்தான் தற்காப்பு வழிமுறை!

சார்ஸ்
சார்ஸ்

ஆனாலும், ‘இந்த முகமூடி ஒரு மனத்திருப்திக்காகவும் அறுபது சதவிகிதப் பாதுகாப்புக்காகவும்தான். முழுதாகப் பத்திரமானது என்று சொல்வதற்கில்லை’ என்கின்றனர் மருத்துவர்கள்.

திரும்புகிற திசையெல்லாம் ஹாங்காங்கில் முகமூடி அணிந்த முகங்கள்தான் தென்படுகின்றன. இது ஸ்பெஷல் முகமூடி எல்லாம் இல்லை. சாதாரண ஆஸ்பத்திரியில் நோய்த் தடுப்புக்கு உபயோகப்படுத்தும் முகமூடிகள்தான்.

சார்ஸ் நோயாளிகள் அதிக அளவில் உள்ள ஊர் ஹாங்காங்தானாம்! காரணம், சிறிய நிலப்பரப்பில் மிக அதிகமான மக்கள் தொகை இருப்பதுதான்.

இந்த நோய்க்கு இப்போதைக்கு திட்டவட்டமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், ரிபாவரின் மற்றும் ஸ்ட்ராய்டுகள் கொண்டு ஏதோ ஒப்பேற்றி வருகிறார்கள். இது நிமோனியாவைக் குணப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் என்றாலும், சார்ஸுக்கு எதிரான போரில் இவற்றின் வெற்றி தொண்ணூறு சதவிகிதம்தான்!

சார்ஸ்
சார்ஸ்

உலகம் முழுவதும் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் ஐம்பது பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஹாங்காங்கில் பத்து சதவிகிதம் பேர் முழுவதுமாகத் தேறி, வீட்டுக்கே அனுப்பப்பட்டது கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயம்!

எய்ட்ஸ் அளவுக்கு இந்த நோய் திட்டவட்டமான முடிவுக்குக் கொண்டு விடாது என்றாலும், எய்ட்ஸ் டெஸ்ட் மாட்ச் என்றால், சார்ஸ் ஒன் டே! கவனிக்காமல் அசிரத்தையாக இருந்துவிட்டால், உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் மிக உடனடியாக!

  • சார்ஸுக்கு தற்போது தரப்படும் சிகிச்சையைக் குழந்தைகளுக்கோ, மிக வயதானவர்களுக்கோ (குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு) கொடுப்பது கொஞ்சம் ஆபத்தான விஷயம், கர்ப்பிணிகளை இந்த சிகிச்சை ரொம்பவே பாதிக்கும். குழந்தைகள் ஊனமாகப் பிறக்க வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

  • சார்ஸ் வராமல் தடுக்க நிறைய வைட்டமின்கள் கொண்ட பழங்கள் மற்றும் நேரத்துக்கு உணவு, நல்ல தூக்கம் ஆகியவை வேண்டும் என்று பக்கம் பக்கமாக விளம்பரப்படுத்துகிறது சீன மருத்துவத்துறை.

  • டந்த பிப்ரவரி மாதம் முதல் சீனாவுக்கோ, ஹாங்காங்குக்கோ சென்றவர்கள் நல்ல உடல் நிலையில் இருந்தாலும், ஒரு முறை சார்ஸுக்காக செக்கப் செய்துகொண்டு விடுவது நல்லது என்று சுகாதார நிறுவனம் மொத்த உலகையும் கேட்டுக் கொண்டுள்ளது.

  • சீனாவில் குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு விட்டது ஜாலி என்றாலும், முகமூடியுடன் வீட்டுக்குள்ளேயே (பழக்கம் இல்லாததால் வைத்துக்கொள்ளப் பெற்றோர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.