Published:Updated:

பலமுறை பலரையும் காயங்களுடன் அழைத்து வந்திருக்கிறார்கள்!

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

- அதிரவைக்கும் சாத்தான்குளம் சாட்சியங்கள்...

பலமுறை பலரையும் காயங்களுடன் அழைத்து வந்திருக்கிறார்கள்!

- அதிரவைக்கும் சாத்தான்குளம் சாட்சியங்கள்...

Published:Updated:
சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை சூடுபிடித்திருக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலையப் பெண் காவலர் தொடங்கி மருத்துவமனை ஊழியர் வரை அளித்துள்ள வாக்குமூலங்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத் தாக்குதலை உறுதிப்படுத்துவதோடு, நெஞ்சைப் பதறவைப்பதாகவும் இருக்கின்றன!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும், அவரின் மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்திவந்தார்கள். 2020, ஜூன் 19-ம் தேதி, ‘கொரோனா ஊரடங்கை மீறி கடையைத் திறந்துவைத்திருந்ததாக’க் கூறி இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, சிறையில் அடைத்தனர். சிறையிலேயே இருவரும் உயிரிழந்ததால், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பால்துரை உயிரிழந்த நிலையில், ஒன்பது பேர் மீதான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

ஜெயராஜ்
ஜெயராஜ்
பென்னிக்ஸ்
பென்னிக்ஸ்

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருவதற்கு முயன்றுவரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே செல்வாக்கானவர்கள் என்பதால், ஜாமீனில் வெளியே வந்து சாட்சிகளைக் கலைக்க முயல்கிறார்கள். அதனால் வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்’ என்று முறையிட்டார். எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஐந்து மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அடுத்து, சாட்சிகளிடம் விசாரணை சூடுபிடித்துள்ளது.

இந்த வழக்கில் மொத்தமுள்ள 105 சாட்சிகளில், இதுவரை 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. சாட்சிகளிடம் நடந்த விசாரணை பற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கும் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் தகவல்கள் நெஞ்சைப் பதறவைக்கின்றன. சம்பவம் நடந்த அன்று இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி, தான் நேரில் பார்த்த காட்சிகளையும், கேட்ட அலறல் சத்தத்தையும் விவரித்தபோது நீதிமன்றத்தில் இருந்த அனைவருமே கண்கலங்கிப்போனார்கள்.

பலமுறை பலரையும் காயங்களுடன் அழைத்து வந்திருக்கிறார்கள்!

சாத்தான்குளம் போலீஸார் அப்பாவிகளைக் கொடூரமாகத் தாக்குவதையே வழக்கமாகக்கொண்டிருந்தார்கள் என்பதை சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலியர் கிருபை கிரேனாப் அளித்த வாக்குமூலம் உறுதிசெய்தது... அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் படுகாயங்களுடன் போலீஸார் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு ஊசி போடுவதற்காக இடுப்புப் பகுதியில் பார்த்தபோது, அங்கு கடுமையான காயங்கள் இருந்தன. இது முதன்முறையல்ல... சாத்தான்குளம் போலீஸார் இதுபோல பலரையும், பலமுறை கடும் காயங்களுடன் சிகிச்சைக்காக அழைத்து வந்திருக்கிறார்கள்’ என்று அதிரவைத்தார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஊழியர் நடராஜன் என்பவர், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே அவர்களது பின்பகுதியில் ரத்தக்கசிவு இருந்தது’ என்று சாட்சியம் அளித்தார்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

கோவில்பட்டி சிறையில் கைதியாக இருந்த கருப்பசாமி, ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் நடக்க முடியாமல் சிரமப்பட்டதால், அவர்களை சிறைக் காவலர்கள் கைத்தாங்கலாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைப் பார்த்தேன்’ என்று தெரிவித்துள்ளார். கோவில்பட்டி கிளைச் சிறையின் காவலரான மாரிமுத்து, ‘சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து இருவரையும் அழைத்து வந்தபோதே அவர்களின் உடலில் காயங்கள் இருந்தன. அதனால் அவர்களை அழைத்து வந்த சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரையிடம் விளக்கத்தை எழுத்துபூர்வமாக வாங்கிய பிறகே சிறையில் அடைத்தோம். பிறகு அதே போலீஸாருடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்’ என்று சாட்சியம் அளித்ததோடு, இரண்டு போலீஸாரையும் அடையாளம் காட்டினார்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலியரான புகழ் வாசுகி தனது சாட்சியத்தில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருமே உடல்களில் காயத்துடன் அழைத்துவரப்பட்டார்கள்’ என்றார். செவிலியரின் உதவியாளரான அருணாசல பெருமாள் என்பவர் அதை உறுதிப்படுத்தியதுடன், ‘ஜெயராஜுக்கு சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததால், செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தினோம்’ என்று குறிப்பிட்டார்.

செல்வராணி
செல்வராணி

அரசு பஸ் கண்டக்டர் ஆரோக்கியசாமி, ‘சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகச் சென்றிருந்தேன். அப்போது போலீஸார் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அங்கிருந்த அறைக்குள்வைத்துப் பூட்டியிருந்தார்கள். போலீஸாரின் அடி தாங்க முடியாமல், அவர்கள் இருவரும் கதறிய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது’ என்று சாட்சியம் அளித்தார். முதலாவது குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் டிரைவர் ஜெயசேகர், ‘ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்ததும், போலீஸை எதிர்த்து இனி எவனும் இந்த ஊரில் வாய் திறந்து பேசக் கூடாது. அதை எல்லாருக்கும் புரியவெக்கிற மாதிரி இவங்களை கவனிங்கனு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சொன்னார். அதன் பிறகு இருவரையும் டூட்டியில் இருந்த போலீஸார் அடிக்க ஆரம்பித்தார்கள். வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதறிய சத்தம் கேட்டது. மறுநாள் இருவரும் படுகாயத்தோடு நடக்க முடியாமல் வெளியே வரும்போது நேரில் பார்த்தேன்’ என்று சாட்சியம் அளித்துள்ளார்” என்று அவர்கள் சொல்லி முடித்தபோது நமக்கு நெஞ்சம் கனத்துப்போனது!

பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல... மனசாட்சியுடைய ஒவ்வொருவருமே நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism