அலசல்
சமூகம்
Published:Updated:

என் காயங்களை அவங்ககிட்ட காட்டி ஆறுதல்படுத்தினேன்... சாத்தான்குளம் வழக்கின் முக்கிய சாட்சி ராஜாசிங்

ராஜாசிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜாசிங்

‘கவலைப்படாதீங்க, என்னையும் பொய் வழக்கில் இப்படித்தான் அடித்து சித்ரவதை செய்தார்கள்’ என்று சொன்னதுடன், எனக்கு ஏற்பட்டிருந்த காயங்களைக் காட்டி ஆறுதல் சொன்னேன்.

சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் பலத்த காயங்களுடன் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டபோது அதே சிறையில் இருந்தவர்தான் ராஜாசிங். சிறைக்குள் அவர் நேரில் பார்த்த சம்பவங்களை 2020, ஜூலை 1-ம் தேதியிட்ட ஜூ.வி-யில், “ ‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி” என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.

அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி போலீஸார், ராஜாசிங்கை இந்த வழக்கின் முக்கியச் சாட்சிகளில் ஒருவராகச் சேர்த்தார்கள். தற்போது நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியம், ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் முக்கியமானதாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ராஜாசிங்கிடம் பேசினோம்.

ஜெயராஜ், பென்னிக்ஸ்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

‘சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் கொரோனா காலத்தில் உறவினர் திருமணத்துக்காகச் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது நண்பர்களோடு சேர்ந்து தென்னந்தோப்பில் கள் குடித்துவிட்டு அங்கேயே படுத்துக்கிடந்தோம். அதிகாலை இரண்டரை மணிக்கு அங்கு வந்த சாத்தான்குளம் போலீஸார் எங்களை வேனில் ஏற்றிச் சென்றார்கள். ஸ்டேஷனில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், பேய்க்குளம் பகுதியில் நடந்த ஒரு கொலை விவகாரம் பற்றி எங்களிடம் கேட்டார். எங்களுக்கு எதுவும் தெரியாது என்பதைச் சொன்னோம். இதனால் கடுங்கோபமான எஸ்.ஐ ரகுகணேஷ், ‘அடிச்சுக் கேட்டாத்தான் இவனுங்க ஒத்துக்குவானுங்க’ என்றார். அதைத் தொடர்ந்து, ஸ்டேஷன் கதவைப் பூட்டிவிட்டு எங்களைக் குப்புறப் படுக்கவைத்து அடிக்க ஆரம்பித்தது போலீஸ்.

பின்னர், என்னையும் என் நண்பர்கள் மூவரையும் தட்டார்மடம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்று, அங்கே வைத்தும் அடித்தார்கள். இதனால், எனக்கு பின்புறச் சதை கிழிந்து தொங்கியது. ரத்தம் வடிந்துகொண்டேயிருந்தது. உட்காரவோ, படுக்கவோ முடியாமல் சிரமப்பட்டேன். மூன்று நாள்கள் கழித்து ரிமாண்டுக்குக் கூட்டிச் செல்லும்போது, ‘டாக்டரிடம் எதுவும் சொல்லக் கூடாது. மீறினால் ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் உன்னை அடித்தே கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டினார்கள். எனக்கு மூன்று குழந்தைகள். மனைவிக்கு மனநிலை சரியில்லை. எனது சம்பாத்தியத்தில்தான் குடும்பமே நடந்தது. அதனால், அவர்களிடமிருந்து உயிர்பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் மருத்துவரிடம் மட்டுமல்லாமல், மாஜிஸ்ட்ரேட்டிடமும் எதுவுமே பேசவில்லை.

ராஜாசிங்
ராஜாசிங்

பிறகு என்னையும் மற்றவர்களையும் பேரூரணி கிளைச் சிறையில் அடைத்தார்கள். அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றினார்கள். அந்தச் சமயத்தில் என்மீது மற்றொரு பொய் வழக்கு போட்டார்கள். அந்த வழக்குக்காக மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் செல்லும்போது, என்னால் உட்கார முடியவில்லை. பின் பக்கத்தில் சதை பிய்ந்து குழிவிழுந்திருந்தது. அந்தக் காயங்களை மாஜிஸ்திட்ரேட்டிடம் காட்டினேன். அதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ‘உன்னைச் சும்மா விட மாட்டேன். இன்னொரு கேஸுல உன்னைச் சேர்ப்பேன்’ என்று மிரட்டினார். மீண்டும் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லாமல், கோவில்பட்டி சப்ஜெயிலுக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கே எனக்குப் பக்கத்து பிளாக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் இருந்தார்கள். உணவுக்குப் போகும்போது அவர்களை நேரில் பார்த்தேன். இருவருமே உட்காரவோ, படுக்கவோ, நடக்கவோ முடியாமல் வேதனையில் துடித்தார்கள்.

நான் அவர்களிடம், ‘கவலைப்படாதீங்க, என்னையும் பொய் வழக்கில் இப்படித்தான் அடித்து சித்ரவதை செய்தார்கள்’ என்று சொன்னதுடன், எனக்கு ஏற்பட்டிருந்த காயங்களைக் காட்டி ஆறுதல் சொன்னேன். டாக்டர் வரும்போது காயத்தைக் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னேன். ஆனால், அவர்கள் இருவரும் இறந்துவிட்ட தகவல் தெரியவந்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

சிறையில் இருந்தபோது, நானும் ஏறத்தாழ அதே நிலைமையில் இருந்ததால் எனக்கு உயிர்பயத்தில், காய்ச்சலே வந்துவிட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் மரணத்துக்குப் பிறகு கிளைச் சிறையே பரபரப்பாக இருந்தது. அதிகாரிகள் வந்தார்கள். நீதிபதி வந்து விசாரித்தார். அதன் பிறகே என்னை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள். நீதிபதி விசாரணையின்போது, எனது காயங்களைப் புகைப்படம் எடுத்தார்கள்.

ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்
ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்

பின்னர் நான் ஜாமீனில் வெளியே வந்தேன். அதன் பிறகும்கூட சாத்தான்குளம் போலீஸார் என்மீது இரண்டு பொய் வழக்குகளைப் போட்டார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ போலீஸாரும் என்னிடம் விசாரித்தார்கள். எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொன்னேன்.

எனக்கு ஏற்பட்ட காயமும் பாதிப்பும் இன்னும் ஆறவில்லை. அந்த பாதிப்புகளோடுதான் வழக்கு விசாரணைக்காக அலைகிறேன். என்னைப்போல நிறையபேர் சாத்தான்குளம் போலீஸாரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார் பதற்றம் விலகாமல்.

சாத்தான்குளம் வழக்கில், இன்னும் என்னென்ன கொடூரங்களெல்லாம் வெளிவரப்போகின்றனவோ?!

வழக்கை இழுத்தடிக்க முயற்சி!

“ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடந்துவருகிறது. வழக்கை இழுத்தடிக்க, குற்றவாளிகள் பல குறுக்கீடுகளைச் செய்துவருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு சக கைதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதினார். `வழக்கை கேரளாவுக்கு மாற்ற வேண்டும்’ என்றும் மனு செய்தனர். இந்த நிலையில் கூட்டுச்சதி என்ற கூடுதல் பிரிவை வழக்கில் சேர்க்கக் கோரி சி.பி.ஐ., உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. இந்த மனுவைக் குற்றவாளிகள் தரப்பு கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், ராஜாசிங் அளித்திருக்கும் சாட்சியம் வழக்கில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது’’ என்கிறார்கள், வழக்கறிஞர்கள்.